தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தமிழரசு கட்சியினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கட்சியினர் நேற்று 6ம் திகதி முழங்காவில் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை நடார்த்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். இதற்காக பூநகரி பிரதேச சபை இட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், முழங்காவில் பொலிசாரால் ஒலிபெருக்கி அனுமதியும் வழங்கப்பட்டதாக குறித்த பிரதேச சபை வேட்பாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த இடம் பூநகரி பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதற்கான இட வாடகை பணமும் செலுத்தப்பட்டே அனுமதி பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த விளையாட்டு மைதானத்தில் பிரச்சார கூட்டம் இடம்பெறுவதற்கு தம்மிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஆதரவாளர்கள் பிரதான வாயிலை பூட்டி இடையூறு விளைவித்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை பொலிசார் பூட்டை உடைத்து பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியதாகவும் அவ்வாறு உடைத்து சென்றால் அதை வைத்து எமக்கெதிராக தமிழரசு கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் தாம் அதை மறுத்து கூட்டத்தை ரத்து செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் கட்சியின் தலைமைகளுக்கு அறிவித்ததாகவும் தொடர்ந்து முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் தன்னால் பதிவு செய்யப்பட்டதோடு, தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறீதரனின் ஆதரவாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் தாம் எந்தவொரு நடவடிக்கைக்கும் செல்ல தயாராக உள்ளதாகவும் துரைசிங்கம் அன்ரனி ஜெகநாதன் தெரிவிக்கின்றார்.