உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் கந்தையா அருந்தவபாலன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
சாவகச்சேரி தொகுதி மக்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.
எதிர் வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தலானது உங்களது நகரசபை மற்றும் பிரதேச சபைகளைச் சிறந்த முறையில் நெறிப்படுத்தக் கூடிய உறுப்பினர்களை உங்களது வட்டாரத்திலிருந்து தெரிவு செய்வதற்கானது. அடுத்து வரும் நான்கு வருடங்களிற்கு இச்சபைகளின் பணிகளை உங்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களே நெறிப்படுத்தப் போகின்றனர். இத்தேர்தலில் நீங்கள் பொருத்தமற்றவர்களைத் தெரிவு செய்தால் அல்லது விரக்தியில் வாக்களிக்காமல் இருந்து அதனால் பொருத்தமற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டால் இறுதியில் பாதிக்கப்படுவது நாங்களும் எங்கள் பிரதேசமுமாகும். எனவே இச்சபைகளுக்கு மிகவும் பொருத்தமான உறுப்பினர்களைத் தெரிவு செய்வது நமது தலையாய பணியாகும்.
சாவகச்சேரி நகரசபைக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கலின் போது மாகாணசபை உறுப்பினர் சஜந்தனால் செய்யப்பட்ட மோசடிகள் ஊர் அறிந்ததே. கட்சித்தலைவரின் முகதாவில் அவரது ஆலோசனைக்கும் அங்கீகாரத்துக்கும் அமைய தயாரித்து எழுதப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்தநாள் இறுதி நேரத்தில் மிகவும் கீழ்த்தரமான முறையில் அகற்றப்பட்டு புதியவர்களின் பெயர்கள் நுழைக்கப்பட்டன. தங்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பும் ஆதரவும் பெற்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரி அதிபர் வங்கிமுகாமையாளர் வர்த்தக சங்கத் தலைவர் முன்னாள் பிரதேச செயலாளர் போன்ற திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு எடுபிடிகளதும் அடியாட்களதும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களினதும் பெயர்கள் செருகப்பட்டன. மாகாண சபை உறுப்பினரது அலுவலகப் பணியாளரும் கார்ச்சாரதியும் கூட வேட்பாளராக்கப்பட்டனர்.
அமரர்களான குமாரசாமி நவரத்தினம் மாமனிதர் இரவிராஜ் அவர்களாலும் அதன் பின்னர் என்னாலும் மிகவும் கண்ணியத்துடனும் கௌரவமாகவும் பேணப்பட்டு வந்த எமது பிரதேசத்தின் அரசியல் கலாசாரம் இன்று இவ்வாறானதொரு இழிநிலைக்கு தள்ளப்பட்டமை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இத்தேர்தலில் நாம் ஆதரிப்போமானால் அவர்களின் தவறான செயற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்பவராகவும் ஊக்குவிப்பவர்களாகவும் இருப்போம். இது தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஒத்துப்போகும் கட்சிகளுக்கும் பொருந்தும். இதன் மூலம் எமது தொகுதியில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியல் கலாசாரத்துக்கு துணைபோனவர்களாக இருப்போம். இவ்வாறானவர்களை நிராகரித்து எமது இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டுவது எமது கடமையாகும்.
மறுபுறத்தில் நீண்டகால நோக்கில் எமது ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களின் அடிப்படை உரித்தான தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக அமைய வேண்டுமேயொழிய ஏமாற்றுந்தன்மை வாய்ந்த போலியான முன்மொழிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவோ ஆணை வழங்குவதாகவோ அமைதல் கூடாது.
எனவே எமது பிரதேசமும் தமிழ்த்தேசமும் வளம் பெறவேண்டுமெனில் உங்கள் உங்கள் வட்டாரத்தில் வசிக்கின்ற நேர்மையான வல்லமையுள்ள மக்கள் பணிக்குத் தங்களை அர்ப்பணிக்கக் கூடிய தேசப்பற்றுள்ளவர்களை தெரிவு செய்யுங்கள். தனியே சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காமல் பொருத்தமானவர்களின் சின்னத்தைப் பார்த்து வாக்களியுங்கள்