முன்னாள் போராளிகள் 107 பேர் இறந்தது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் போராளிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளின் இறப்புத் தொடர்பாக வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்பின்னரே அறிந்தேன். இது தொடர்பாக ஆதாரங்களுடன் என்னிடம் தெரிவித்தால் அதனை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் புத்தவிகாரை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உங்களுக்குத் தெரியப்படுத்தியதும் நீங்கள் தனிப்பட்ட பயணம் ஒன்று மேற்கொண்டு கொக்கிளாய் பகுதிக்குச் சென்றீர்களே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,
எனக்குத் தனியாக கொக்கிளாய்க்குச் செல்வதற்கும், கள்ளுத் தவறணைக்குச் செல்வதற்கும் உரிமையிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
மேலும் மாகாணசபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் என்னை சந்திக்கவும் விடயங்களை தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமையுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சிங்கள, முஸ்லிம் மக்களை அவர்களுடைய பாரம்பரிய கிராமங்களில் மீள்குடியேற்ற உருவாக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வடமாகாணசபையை அந்த செயலணியில் இடம்பெறுமாறு ஜனாதிபதி அழைத்தபோதும் வடமாகாணசபை அதில் பங்கெடுக்கவில்லையென தெரிவித்தார்.