தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவது மிகப் பெரிய குற்றச் செயல் போல இலங்கை அரசு பயம் கொள்வதன் காரணம் புரியவில்லை.
ஏதோ தமிழர்கள் வந்தேறு குடிகள் போலவும் அவர்களுக்கு உரிமைகளைக் கொடுப்பதால் சிங்கள மக்கள் கடும் கோபம் கொள்வர் என்பது போலவுமே இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது.
எனவே தமிழ்மக்களுக்கு உரிமையை கொடுப் பது என்பது இரகசியமாகச் செய்ய வேண்டும் என்பது போல அரசு கூற அதை தமிழ் அரசியல் தலைமையும் பெளவ்யமாக ஏற்று இரகசியம்... இரகசியம்... என்று மெல்லக் கூறிக்கொள்கிறது.
ஏதோ இரகசியமாகவேனும் எங்களுக்குரிய உரிமைகளைத் தாருங்கள். நாங்கள் வெளியில் எவருக்கும் சொல்லாமல் உரிமையை வாங்கி கோவணத்திற்குள் வைத்துக்கொள்வோம் என்பது போல தமிழ் அரசியல் தலைமையும் நடந்து கொள்கிறது.
தமிழ் மக்களின் உரிமை என்பது பேரினவாத ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. எனவே பறிக்கப்பட்ட உரிமையை தரவேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
இங்கு இரகசியம் என்ற பேச்சுக்கு இடமிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதாயின் அதை இரகசியமாக கொடுத்தால் மட்டுமே தென்பகுதியில் நிலைமையை சமாளிக்கலாம் என்று கூறுவது மிகப்பெரிய கபடத்தனம்.
இரகசியமாக கொடுப்பதற்கு உரிமை ஒன்றும் பொட்டலப் பொதி அல்ல. ஆகவே தமிழ் மக்களின் உரிமை என்பது சிங்கள மக்களுக்கும் தெரியப்படுத்தி வழங்குவதே சாத்தியமாகக் கூடியது.
சிங்கள மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்குதல் என்ற விடயம் சிங்கள மக்களையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற நரித்தனமாகும்.
தமிழ் மக்கள் கடந்த முப்பது ஆண்டு காலமாக விடுதலைப் போரை நடத்தியவர்கள். சர்வதேசத்தின் சதித்திட்டமும் உள்நாட்டு கபடத்தனங்களும் சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முறியடித்தது. இதற்காக தமிழ் மக்களை நாம் வென்று விட்டோம் என்று எவர் கூறினாலும் அது மிகப்பெரும் அறியாமையாகும்.
உண்மையில் தமிழ் மக்களை வெல்வதென்பது சாத்தியமாக வேண்டுமாயின் தமிழ் மக்களுக்குரிய உரிமையை கொடுத்து அவர்கள் இலங்கை எங்கள் நாடு என்று உளமாரச் சொல்ல வேண்டும். அதுவே வெற்றியாக இருக்க முடியும்.
இதைவிடுத்து போரில் புலிகளை வென்று விட்டோம் என்று கூறுவதற்குள் இருக்கக் கூடிய இழப்புகள், அழிவுகள் எத்தன்மை என்பதை மறந்து பேசுவது இந்த நாட்டிற்கே இழுக்கைத் தரவல்லது.
ஆகையால் சிங்கள மக்களுடன் சேர்ந்து இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உரிமையைக் கையளிக்கவேண்டும். தமிழ் மக்களை கொன்றொழித்து - அந்த இனத்தை அழித்து இலங்கையை பெளத்த சிங்கள நாடாக்குவோம் என்று எவர் நினைத்தாலும் அது பேரழிவையே தரும் என்பதால், தமிழ் மக்களுக்கு இரகசியமான முறையில் தீர்வு கொடுத்தல் என்ற சுத்துமாத்தைக் கைவிட்டு தமிழர்களின் உரிமை பகிரங்கமாக வழங்கப்பட வேண்டும். இதுவே சாலப்பொருத்துடையது.