ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் பரவிப்பாஞ்சான் இராணுவம்

paravipanchan-4
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளை இராணுவம் அபகரித்துள்ளமைக்கு எதிப்புத் தெரிவித்து தமது சொந்தக் காணிகளை தம்மிடம் தருமாறு நல்லாட்சி அரசாங்கத்தைக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் அழைத்து நீங்கள் இப்பகுதியில் செய்தி சேகரிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
அத்துடன், இந்த பகுதியில் செய்தி சேகரிப்பதாக இருந்தால் இராணுவத் தலைமையகத்தின் அனுமதியைப் பெற்று வாருங்கள் என கூறி, ஊடகவியலாளர்களின் கமெராவிலுள்ள புகைப் படங்களை அழிக்குமாறும் கமெராவைத் தம்மிடம் தருமாறும் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களின் நிரந்தர வாழ்விடங்களை அத்துமீறி அபகரித்துள்ள இராணுவம் அப்பகுதியில் பாரிய இராணுவ முகாம்களையும், புத்தர் சிலையையும் அமைத்து அப்பகுதியில் வெள்ளரசம் மரத்தையும் நாட்டி மக்களிடம் கையளிக்காது தமது சொந்தமாக்கும் நோக்குடன் கட்டிடங்களையும் அமைத்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள் தமது நிரந்தர வாழ்விடங்களைத் தம்மிடம் வழங்குமாறு கோரி இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனினும், இராணுவ அதிகாரியும் பொறுப்பு வாய்ந்த உயரதிகாரிகளும் மக்களை விரைவில் மக்களது காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதாகக்கூறி ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் நேற்று முதல் தமது வாழ்விடங்களைத் தம்மிடம் வழங்குமாறு கோரிதொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் இன்று மாலை 5.30 மணியளவில் செய்தி சேகரிக்கச் சென்று செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான சி.சிவேந்திரன், ச.விமல் ஆகிய இரு ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் தாம் ஊடகவியலாளர்கள் எனவும், தாம் மக்களின் காணி விடுவிப்புப் போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்பதாக கூறியதனையடுத்து இது இராணுவ முகாம், இது எங்களின் பகுதி இதை நீங்கள் புகைப்படமெடுக்க முடியாது, எங்களின் அனுமதியின்றிச் செய்தி சேகரிக்க முடியாது.
அப்படிப் புகைப்படம் எடுத்துச் செய்தி சேகரிப்பதாகவிருந்தால் இராணுவத் தலைமையகத்தின் அனுமதியுடன் வாருங்கள் எனக் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் அச்சுறுத்தும் பாணியில் கூடியதுடன் அவ்விடத்தை விட்டுச் செல்லுமாறும் ஊடகவியலாளர்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்கள்
மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி மக்களால் போராட்டம் இடம்பெற்று வரும் பரவிப்பாஞ்சான் மக்களின் நிரந்தர வாழ்விடப் பகுதியிலுள்ள மக்களின் காணிகள் எவையென இனங்காட்டுவதற்காகவே மக்களின் காணிகளை ஊடகவியலாளர்கள் புகைப்படம் பிடித்துள்ளதாக இராணுவத்தினரிடம் மீண்டும் கூறியபோது இது எங்களின் பகுதி இது, எமது இராணுவ முகாம், இதை நீங்கள் புகைப்படம் எடுக்கவோ இது பற்றிச் செய்தி சேகரிக்கவோ முடியாது என அச்சுறுத்தும் பாணியில் கூறி ஊடகவியலாளர்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila