ஆச்சிரமம் ஒன்றில் கோபம் வராத சாமியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஓர் ஊருக்குச் சென்று ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டார்.
கோபம் வராத சாமியார் பற்றி கேள்வியுற்ற அந்த ஊர்ப் பாடசாலை மாணவர்கள் சாமியாரிடம் சென்றனர். சுவாமி! உங்களுக்குக் கோபம் வராதா? என்று ஒரு மாணவன் கேட்டான்.
இல்லைப் பிள்ளைகாள்! எனக்குக் கோபம் வராது என்றார் சாமியார். ஒவ்வொரு பிள்ளைகளும் மாறிமாறி சுவாமி! உங்களுக்குக் கோபம் வராதா? என்று கேட்க, இல்லைப் பிள்ளைகாள்! எனக்குக் கோபம் வராது என்ற பதிலை சாமியார் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
மாணவர்களின் ஒரே கேள்வியால் குழப்பம் அடைந்திருந்த நிலையில், ஒரு மாணவன் சுவாமி! உங்களுக்குக் கோபமே வராதா? என்று கேட்டான்.
இதற்குச் சாமியார், கோபம் வராது என்றால் வராதுதான் என்று கோபத்தோடு கூறினார். அந்தளவோடு மாணவர்கள் தமது பள்ளிக்குத் திரும்பிச் சென்றனர்.
கோபம் வராதசாமியாரின் கதையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கதையும் அமைந்துள்ளது.
எதிலும் நிதானம், பொறுமை, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற சம்பந்தப்பெருமான் நேற்று முன்தினம் திடீரென கோபவயப்பட்டவராக மாறினார்.
வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை நாங்களே கூட்டி வந்தோம். ஆகையால் அவர் எங் களுக்காக தேர்தல் பிரசாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர்களை எல்லாம் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர் என்றெல்லாம் கடுமையாகக் கூறியுள்ளார்.
இதுவரை காலமும் நிதானமாக இருந்த சம்பந்தர் ஐயா, திடீரென ஏன் இப்படிக் கோபம் கொண்டார்? வடக்கின் முதல்வர் மீது அவர் கோபம் கொள்வது எந்த வகையில் நியாயம். நாங்களே நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களைக் கூட்டி வந்தோம். ஆகையால் அவர் எங்களுக்காகத்தான் கதைக்க வேண்டும் என்று சம்பந்தர் கூறுவதெல்லாம் நியாயமானதா? அவர்கள் கூட்டி வந்ததற்காக அவர்கள் செய்கின்ற விரோதத்தனத்திற்கு வடக்கின் முதல்வர் ஆமாப் போட வேண்டுமா? அப்படியான தொரு நிபந்தனையோடுதான் விக்னேஸ்வரன் அவர்களைக் கூட்டி வந்தீர்களா?
இந்த நாட்டில் நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மிகவாதி, நேர் மையானவர். ஓய்வுக்குப் பின்னும் நீதிக்குப் பங்கம் ஏற்படாமல் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற ஓர் உத்தம மனிதர். இவரை அரசியலுக்குக் கூட்டி வரும்போது அவர் நினைத்திருப்பார்; எச் சந்தர்ப்பத்திலும் நீதியோடு நடந்ததால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அழைத்து வருகின்றது என்று.
ஆனால் நீங்கள் உங்களின் கண் அசைவுக்கு அவரை அசைக்கலாம் என்று நினைத்தீர்கள். ஆக, உங்களுக்கு ஆமாப் போட்டு; அரசுக்குத் தாளம் போட்டு; பல்லவி பாடக் கூடியவராக நீதியரசர் விக்னேஸ்வரன் இருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்கள் தவறு.
அது சரி, தேர்தல் முடிந்த கையோடு சம்பந்தர் ஐயா! ஆத்திரப்பட்டிருந்தால் கூட நியாயம். கூட்டி வந்த மனிதனுக்கு கோபம் வந்தது. பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் மற்றவர்கள் கோபப்பட்ட போது அவர்களை ஆற்றுப்படுத்திய சம்பந்தர் ஐயா! இப்போது ஏன் கோபாவேசம் கொண்டார் எனில், எல்லாம் ஆனந்தசங்கரி ஐயாவின் சமர்ப்பணம்தான்.
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்றால் உதயசூரியன் கட்சியை அவரிடம் அப்படியே கொடுத்து விடுவேன் என்றாரே சங்கரி அதுதான் சம்பந்தர் ஐயாவுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம். உதயசூரியன் மீண்டும் உதித்து விடுமோ என்ற பயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.