தமிழர்களுக்கான நிழல் அரசாங்கமொன்றின் தேவை!

தமிழர்களுக்கான நிழல் அரசாங்கமொன்றின் தேவை!

2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக இயங்கிவருகிறது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடிய ஒரு வலுவான ஜனநாயக தலைமையாக மேலெழும்ப முடியவில்லை. இதற்கு கூட்டமைப்புக்குள் காணப்படும் ஒருகட்சி மேலாதிக்கமும், சில நபர்களின் ஆதிக்கமுமே பிரதான காரணமாகும். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தலைமையாக இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் அவர்களின் முழுமையான மேலாதிக்கத்தின் கீழேயே இருந்தது. இவ்வாறானதொரு சூழலிலேயே விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை இல்லையென்று சம்பந்தனும் அவருக்கு ஆதரவானவர்களும் மறுக்கலாம். அவ்வாறு மறுப்பவர்களிடம் இப்பத்தி மிகவும் இலகுவானதொரு கேள்வியை முன்வைக்கின்றது. அதாவது, பிரபாகரன் இருக்கின்ற போது அவரது அனுமதியின்றி வட கிழக்கில் இவ்வாறானதொரு அமைப்பை உருவாக்குவது சாத்தியமான ஒன்றுதானா? அது இயலக்கூடிய காரியம்தானா? இதற்கான பதில் என்னவென்பது அனைவரும் அறிந்த ஒன்றே!
2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே, தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக உருவெடுத்தது. ஆனாலும், கூட்டமைப்பால் இன்றுவரை ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழுச்சியடைய முடியவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக முரண்பாடுகளினதும் உட்பூசல்களினதும் களமாகவே கூட்டமைப்பு நீடித்துவருகிறது. ஒருவேளை, சிலர் வாதிடுவது போன்று கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லையெனின், கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னால் இருந்தவர்கள் ஏன் கூட்டமைப்பை முரண்பாடுகளிலிருந்து விடுவித்து, பலப்படுத்தும் பணியை முன்னெடுக்கவில்லை? கடந்த ஏழு ஆண்டுகளில் அவ்வாறானவர்கள் கூட்டமைப்பைப் பலப்படுத்த எடுத்த முயற்சிகள்தான் என்ன? கடந்த ஏழு ஆண்டுகளில், கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் தலைமையாக பலப்படுத்த வேண்டுமென்னும் குரல்கள், கூட்டமைப்புக்குள்ளும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக ஒலித்தவாறே இருக்கிறது.
ஆனாலும், இப்பத்தியாளர் மேலே குறிப்பிட்டவாறு கூட்டமைப்புக்குள் நிலவும் குறித்த மேலாதிக்கப் போக்கானது, அதற்கு இடமளிக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் மேற்படி தனிநபர் போக்கையும், ஒருகட்சி மேலாதிக்கத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்னும் கேள்வியெழுந்தது. இக்கேள்விக்கான பதிலாக பலரும் வட கிழக்கில் சிவில் சமூகத்தை பலப்படுத்துவதை ஒரு உபாயமாக முன்வைத்தனர். இதனடிப்படையில் சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தமிழ் மக்கள் பேரவை என்னும் அமைப்பும் தோற்றம்பெற்றது. ஆனால், இதன் மூலமும் எதிர்பார்த்த தாக்கங்களைப் பதிவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் ஆரம்பத்தில் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செய்யும் ஒரு சிலருக்கு அச்சத்தை கொடுத்தது உண்மையே. ஆனால், அவ்வச்சத்தை முன்கொண்டுசெல்லும் வகையில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னகர முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் அடுத்தது என்ன? என்னும் கேள்விக்கான பதிலைத்தேட இப்பத்தி விழைகிறது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான சூழலை எடுத்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, அனைத்துத் தரப்பினருக்கும் அவரவரது நலன்கள் முக்கியம். ஆனால், தமிழர் தேசம் மட்டும் தனது நலனுக்காக குரல் கொடுக்கக் கூடாதென்பதே அனைவரதும் போதனையாக இருக்கிறது. அவ்வாறு குரல் எழுப்பினால், அது கடும்போக்கு வாதமாகும். மேலும், அது ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியாகவும் சித்தரிக்கப்படுகிறது. இதனை சற்று ஆழமாக நோக்கினால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தமிழர் தேசம் எதிர்கொண்டிருக்கின்ற பிரதான அரசியல் சவால், தமிழர் தலைமையை கடும்போக்காளர்கள் மென்போக்காளர்கள் என்றவாறு பிரித்தாளுவதற்கான இடைவெளிகள் அதிகரித்திருப்பதுதான். இதனை எவ்வாறு எதிர்கொள்வது?
கடந்த ஏழு ஆண்டுகால அனுபவங்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது, சிவில் சமூகம் என்னும் அடிப்படையில் வட கிழக்கில் வலுவான மக்கள் அமைப்பொன்றை கட்டியெழுப்புவது சாத்தியமற்றதாகியிருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே பிரதான அரசியல் கட்சிகளின் வழியாக அணிதிரளும் மக்களாக இருந்திருக்கின்றனரேயன்றி கட்சிசாராத செயற்பாடுகளினால் அவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டதில்லை. பொங்குதமிழ் போன்ற அரசியல் செயற்பாடுகளும் விடுதலைப் புலிகளது, நிழலின் கீழ்தான் நிகழ்ந்ததேயன்றி, அதனை மக்களின் தன்னிச்சையான எழுச்சியாக கொள்ள முடியாது. மக்கள் எழுச்சி அதனை வழிநடத்துவதற்கான ஒரு தலைமையின்றி நிகழ்வதுமில்லை. அது வரலாற்றில் எங்கும் நிகழ்ந்ததுமில்லை. ஆனால், அவ்வாறானதொரு சூழல் உருப்பெறும்வரையில் கிடைத்திருக்கும் ஜனநாயக வெளியை அதியுச்சமாகப் பயன்படுத்தும் உபாயங்கள் குறித்து தமிழர் தரப்புக்கள் சிந்திக்க முடியும். அவ்வாறான ஒரு உபாயமாகவே இப்பத்தி நிழல் அரசாங்கமொன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
அது என்ன நிழல் அரசாங்கம் (Shadow Government)?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதனது செல்வாக்கின் கீழ் இயங்கும் வடக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாணத்தின் அமைச்சர்கள் ஆகியோரை மேற்பார்வை செய்வதற்கும், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்குமான ஒரு கட்டமைப்பையே இப்பத்தி நிழல் அரசாங்கம் என்கிறது. இதற்கென நடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அனைவரையும் இதற்குள் உள்வாங்கலாம். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்களிலிருந்து ஆற்றலும் அனுபவமும் உள்ள இருவரை நிழல் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவராக நியமிக்க முடியும். தமிழர் தேசத்தின் அரசியல், பொருளாதாரம், காணி, கல்வி, கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளை (துறைகளை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்) மேற்பார்வை செய்வதற்கென துறைசார் செயலர்களை ஏற்படுத்த முடியும். இவர்கள் கூட்டமைப்பினதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபையினதும் செயற்பாடுகளை கண்காணித்து மேற்படி துறைசார் அடிப்படையில் ஆலோசனைகளையும் அழுத்தங்களையும் வழங்கலாம். இதற்கு ஆலோசனை வழங்குவதற்கென வட கிழக்கில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக அதிகாரிகளை நியமிக்க முடியும்.
இதன் ஊடாக அதிகாரத்திலுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இரண்டு வகையான அச்சுறுத்தலை வழங்க முடியும். ஒன்று, உங்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தாது விட்டால் அடுத்த முறை உங்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியாது. இரண்டு, எங்களைக் கேள்வி கேட்க எங்களுக்குள் எவருமில்லை என்னும் ஒரு சிலரது எதேச்சாதிகாரப் போக்கை இதன் மூலம் கேள்விக்குள்ளாக்கலாம். மேலும், கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களின் அறிக்கைகள் உரைகள் தொடர்பில் நிழல் அரசின் தலைமை தனது எதிர்வினைகளையும் ஆற்ற வேண்டும். இதன் மூலம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்புடன் பேசுவதற்கான புறநிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம்.
அவ்வாறில்லாதவிடத்து, அதற்கான நிழல் அரசாங்கத்தின் எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும் என்றவாறான அழுத்தத்தை கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கலாம். நிழல் அரசாங்கம் என்னும் சொற்பதத்தில் பிரச்சினையிருப்பதாக கருதினால் இதற்கு நிழல் கூட்டமைப்பு (Shadow TNA) என்றும் பெயரிடலாம். இதேபோன்று தங்களின் கட்சியை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று எண்ணுபவர்கள் தங்களின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு உபாயமாகவும் இந்த அரசியல் எண்ணக்கருவை பயன்படுத்த முடியும். உதாரணமாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையினது செயற்பாடுகளில் அதிருப்தியடைவோர் அதனை தோற்கடிக்கும் ஒரு உக்தியாக நிழல் தமிழரசு கட்சியொன்றை (Shadow ITAK) உருவாக்க முடியும். அதன் மூலம் தங்களின் தலைமையின் தவறான போக்குகளை முடக்க முடியும். மொத்தத்தில் திரைக்கு முன்னால் நடப்பவற்றை அல்லது நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதை திரைக்கு பின்னாலிருந்து இயக்கும் ஒரு உக்தியே மேற்படி நிழல் அரசாங்கம் என்னும் எண்ணக்கருவாகும்.
இவ்வாறான ஒன்றை ஈழத்தில் பயிற்சி செய்ய தமிழ்த் தேசிய சக்திகள் முயற்சிக்குமெனின் அதனை கொழும்பால் தடுக்கவும் முடியாது. ஏனெனில், இது மேற்குலக ஜனநாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற ஒரு விடயமுமாகும். எனவே, கிடைத்திருக்கும் ஜனநாயக வெளியை மிகவும் உச்சமாக பயன்படுத்த தமிழர் தரப்புக்கள் விரும்பின், அவர்களுக்கு முன்னாலுள்ள ஒரு சிறந்த தெரிவு தொடர்பிலேயே இப்பத்தி வாதிடுகின்றது. புலம்பெயர் சமூகம் இதற்கான பொருளாதார பலத்தை வழங்க முடியும். புலம்பெயர் அரசியல் செயற்பாட்டாளர்கள் தங்களது பார்வைகளை மேற்குலகில் சுழல விடுவதற்கு மாறாக களத்தின் மீது திருப்ப வேண்டும். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் களத்தின் மீதே அனைத்துலகின் பார்வை திரும்பியிருக்கிறது. களத்திலுள்ள மக்களின் புரிதல் என்ன? அவர்களின் அசைவு என்ன? என்பதே தமிழர்களின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கப் போகிறது. களத்திலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கிடைதிருக்கும் ஜனநாயக வெளியை அதியுச்சமாக கையாளுவதற்கான உதவிகளை வழங்குவது ஒன்றுதான் புலம்பெயர் சமூகம் ஆற்றவேண்டிய பிரதான பணியாகும்.தமிழர்களுக்கான நிழல் அரசாங்கமொன்றின் தேவை!
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila