‘மாநாடு’ என்ற சொற்பதத்தின் கனதி மிகவும் பெறுமதியானது. மாநாடு என்ற பதம் சூட்டுவ தாக இருந்தால் அதற்கென்றொரு வரன் முறைகள் உண்டு.
அறிஞர் பெருமக்கள், ஆட்சித் தலைவர்கள், சமயப்பெரியவர்கள், வெளிநாட்டுப் பிரதி நிதிகள், அரசியல் தலைவர்கள் என்போர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்வர்.
மாநாட்டில் துறைசார் நிபுணர்கள் அந்த நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வரும் ஆர்வலர்கள்,
பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
ஆனால் இன்று அந்த நிலைமை கிடை யாது.
மாநாடு என்ற சொற்பதத்தை சர்வசாதா ரணமாக சூட்டிவிட்டு பத்துப் பேருடன் அந்த மாநாட்டை முடித்து விடுகின்ற துன்பம் மாநாடு என்ற சொல்லின் கனதியைக் கடுமையாகக் குறைவுபடுத்தியுள்ளது.
அதேநேரம் மாநாட்டை ஏற்பாடு செய்வோர் அந்த மாநாட்டை நடத்தி முடிப்பதற்காகக் கடு மையாகப் பாடுபடுகின்றனர் என்ற உண்மை யையும் நாம் மறந்துவிட முடியாது.
இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செல விட்டு நடத்தப்படுகின்ற மாநாடுகளில் பங்கு பற்றுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது எங்கள் இனத்தின் எதிர்காலம் எப்படியா கும் என்ற ஏக்கம் எழவே செய்யும்.
இப்போதெல்லாம் சமயம், மொழி சார்ந்த கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பங்குபற்று வோர் மிகக்குறுகிய அணியினராக இருப்ப துடன் எல்லா இடங்களிலும் இவர்களே பங்கு பற்றுபவர்களாகவும் உள்ளனர்.
ஆக, மாநாடுகள், கூட்டங்களில் கூறப்படும் அருமந்த கருத்துக்கள் மக்களை சென்றடை யாமல் போகின்றது.
இதுதவிர, கூட்டத்தில் கதிரை நிரப்புதல் என்பதற்காக சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்து அவர்களை இருத்தி விட்டு கூட்டத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பு நடத்து வதும் ஏற்புடையதன்று.
நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுக ளில் மாணவர்கள் கலந்து கொள்வதென்பது அவசியம்.
எனினும் மாநாட்டின் பேசுபடு பொருள் என்ன; அங்கு கூறப்படும் கருத்துக்களை உய்த்தறியக்கூடிய மாணவர்களின் வய தெல்லை யாது என்பனவெல்லாம் ஆராய்ந்தே மாணவர்களின் பங்கேற்பு அமைய வேண்டும்.
ஆனால் அண்மைக்காலமாக யாழ்ப்பா ணத்தில் நடைபெறும் மாநாடுகளில் சிறுவர் இல்லத்துப்பிள்ளைகளை இடநிரப்புக்காகப் பயன்படுத்தும் முறை அமுலாகி வருவது போலத் தெரிகிறது.
சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது கட்டாயம்.
ஆனால் அந்தப் பங்குபற்றல் இடநிரப்பலுக் காகவோ அன்றி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பதைக் காட்டுவதாகவே அமையுமாக இருந்தால், அது ஒரு துன்புறுத் தலாகவே மாறிவிடும்.
எனவே மாநாடுகளை, கூட்டங்களை நடத்து வதற்கு முன்னதாக குறித்த மாநாட்டின் இலக் கினர் யார்?
மாணவர்களின் பங்கேற்பு எத் தனை வீதமாக இருக்க வேண்டும்? பொதுமக் களை வரவழைப்பதற்கான உபாயம் யாது? என்பது பற்றியயல்லாம் ஆராய்ந்து;
பார்வையாளர்களின் வருகையை உறுதி செய்யும் பொறுப்புக்களைப் பிரித்துக்கொடுத்து,
பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை அவர் களின் முழுமையான பங்குபற்றுகை என்பன உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமே மாநாடுகள், கூட்டங்கள் பெறுமதிமிக்கவையாக அமையும்.