அச்சத்தில் எதிர்கால சமூகம்..

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் பாரிய பின்னடைவை சந்தித்த வடமாகாணம் இன்று போரை விட கொடிய யுத்தத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது.
உள்நாட்டு யுத்தத்தின் போது சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை வயது வேறுபாடுகள் இன்றி கொல்லப்பட்டனர்.பின் அதன் வடுக்கள் மறையாத நிலையில் இன்று வடக்கை நோக்கி மீண்டும் ஓர் கொடிய யுத்தம் நகர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளது.இலங்கையில் ஏற்பட்ட போர் முடிவடைந்து தற்போது 7 வருடங்களை கடக்கின்றது.
கடந்த 7 வருடங்களுக்கு முன் வடக்கில் ஓர் இன அழிப்பு நிகழ்ந்துள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி ஓர் தமிழ் இனத்தை அழிக்கின்ற யுத்தம் அன்றைய ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் நடந்தேறி உள்ளது.
இதனை யாரும் மறுக்கவோ,அல்லது மறைக்கவோ முடியாது. தமிழ்த் தேசியத்திற்காக உரிமை கோரி போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க நினைத்த மஹிந்த அரசு இறுதியில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அழிக்க முயன்றது.
தமிழ் இனத்தை முழுமையாக அழிக்க நினைத்த அன்றைய கொடுங்கோள் ஆட்சியாளராக தமிழர்களினால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என வடக்கில் உள்ள தமிழர்கள் உற்பட இலங்கை தமிழர்கள் சபதமெடுத்தனர்.
அதன் விளைவாக இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மண் கவ்வ,மைத்திரி பால சிறிசேன நல்லாட்சி அரசில் ஆட்சி பீடம் ஏறினார்.ஆனால் இலங்கை அரசின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏதோ ஓர் வகையில் மீண்டும்,மீண்டும் ஏதோ ஓர் யுத்தம் இடம் பெற்று வருகின்றது.
அதன் ஓர் அங்கமே தமிழர்களை தலைகுனிய வைக்கும் ஓர் செயற்பாடாக போதைப்பொருள் விற்பனை இன்று வடக்கில் தலை தூக்கியுள்ளது.இலங்கையின் அயல் நாடாக காணப்படும் இந்தியாவில் இருந்து இலங்கை மக்களை அழிக்கும் ஓர் அங்கமாக 'கேரள கஞ்சா' போதைப்பொருளின் வினியோகம் தற்போது வடங்கில் தலை தூக்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுகின்ற பெரும் தொகையான கேரள கஞ்சாப்பொதிகள் இலங்கை வலைகுடா கடற்கரை பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு தலைமன்னார் கடற்கரைப் பகுதியூடாக காய் நகர்த்தப்படுகின்றது.தலைமன்னார்,பேசாலை,முசலி உற்பட மன்னார் கடற்பரப்பினூடாக அதிகலவான கஞ்சாப்பொதிகள் நாட்டிற்குள் கடத்தப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் வடக்கு கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினரின் அசமந்த போக்குடனே இலங்கைக்குள் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுகின்ற போதும் கடற்படையினரின் மறைமுக ஆதரவின் மத்தியிலே மன்னார் பகுதிக்கு இந்தியாவில் இருந்து கஞ்சா போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படி இருப்பினும் கடந்த 7 வருடங்களுக்கு முன் நாட்டில் பாரிய அளவில் போதைப்பொருட்களின் வினியோகம் இடம் பெறவில்லை.இலங்கையின் வடக்கில் மன்னார் தீவை தவிர பல பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வினியோகம் இடம் பெற்ற போது உரிமைக்காக போராடிய அவர்கள் உண்மையாக செயற்பட்டனர்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,விற்பனையாளர்கள்,ஏன் போதைப்பொருள் பாவனையாளர்கள் கூட தண்டிக்கப்பட்டனர்.அதன் ஓர் அங்கமாக அன்றைய கால கட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல வடக்கில் போதைப்பொருட்களின் நடமாட்டம்,பயண்பாடு பூச்சியமாக காணப்பட்டது.
ஆனால் தற்போது வடக்கில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தலை தூக்கியுள்ளது.தலைமன்னார் கடற்கரை பகுதியூடாக கடத்தி வரப்படுகின்ற பெருந்தொகையான 'கேரள' கஞ்சாப்பொதிகள் எப்படி கடற்படையினரின் கண்களில் இருந்து தப்பி கரை சேர்க்கப்படுகின்றது என்பது பலரது சந்தேகம்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகின்ற இலங்கை கடற்படை ஏன் கஞ்சா போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்ய முடியவில்லை என்பது பலரது கேள்வியாக காணப்படுகின்றது.ஆனால் தொடர்ச்சியாக தலைமன்னார் கடற்பரப்பினுள் வைத்து அதிகளவான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததன் காரணத்தினாலேயே கைது செய்யப்படுவதாக கடற்டை கூறுகின்றது.ஆனால் இந்திய மீனவர்களின் கைதுகளில் கூட பல சந்தேகங்கள் இன்று வெளி வருகின்றது.
இலங்கையின் வடக்கே தலைமன்னார் கடற்கரை பகுதிகளில் கைது செய்யப்படுகின்ற இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து இலங்கைக்கு கைமாற்றப்படவுள்ள 'கேரள' கஞ்சாப்பொதிகளை கடற்படை பறிமுதல் செய்வதாக மறைமுகமாக செய்திகள் வெளிவருகின்றது.
ஆனால் குறித்த கஞ்சாப்பொதிகள் எங்கே என்பது வினாவாக உள்ளது.
எனினும் தலைமன்னார் முதல் முசலி வரையும்,மாந்தை மேற்கு மற்றும் மடு வரையிலாக பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் இருந்து வேறு இடங்களுக்கு கடத்தப்படுகின்ற பெரும் தொகையான 'கேரள' காஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ச்சியாக கைப்பற்றியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பல கோடி ரூபாய் பெறுமதியான 'கேரள' கஞ்சாப்பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
தலைமன்னார்,பேசாலை,மன்னார்,முசலி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பெலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் குறித்த கஞ்சாப்பொதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றது.
கஞ்சாப்போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்கள் குறைவாக காணப்படுகின்றது.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சாப்பொதிகள் மீட்கப்படுகின்ற போதும் கடத்தல் காரர்கள் அல்லது விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவது இல்லை.
ஒரு சில சந்தர்ப்பத்தில் சிறிய தொகை பெறுமதியான கஞ்சாப்பொதிகள் கைப்பற்றப்பட்டால் சில நேரங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
தலைமன்னார் கடற்கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்படுகின்ற கஞ்சாப்பொதிகள் மன்னார் நகரினூடாக வேறு இடங்களுக்கும் வேறு மாவட்டங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகின்றது.
இதனால் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் சந்தேகமாக காணப்படுகின்றது.
இன்று வடக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றது.கொலை,கொள்ளை,பாலியல் துஸ்பிரையோகங்கள் என பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றது.இதனால் பாதிப்படைவது அதிகளவில் தமிழ் இனமாகவே காணப்படுகின்றது.
யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த தமிழ் இனம் இன்று சுய கௌரவத்தையும்,சுய மரியாதையும் பாதுகாக்கின்ற நிலையில் போதைப்பொருள் வினியோகம் பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளது.


எனவே வடக்கில் போதைப்பொருள் கடத்தல் தினம் தினம் அதிகரித்து காணப்படுகின்றது.பொலிஸாரும்,போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் சல்லடை போட்டு போதைப்பொருட்களை கைப்பற்றுகின்றனர்.
ஆனால் கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.மன்னார் மாவட்டத்தில் என்றும் இல்லாத அளவிற்கு தற்போது 'கேரள கஞ்சா' போதைப்பொருளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
-இதனால் எதிர்கால சந்ததிகளின் நிலை அச்சத்தில் காணப்படுகின்றது.பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் குடும்பத்தலைவர்கள் வரை குறிப்பிட்ட சிலர் கஞ்சா போதைப்பொருளின் பாவனைக்கு ஏதோ ஒரு வகையில் அடிமையாகியுள்ளனர்.


இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.சமூகத்தில் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவுகளுக்கு முதற்காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
எனவே வடக்கு மக்கள் மீண்டும் ஓர் மௌன போராட்டத்தை முகம் கொடுக்காத வகையில் கொடிய யுத்தமாக போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
கஞ்சா போதைப்பொருள் கடத்தல் காரர்கள்,விற்பனையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும்.சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றவாளிகள் எவ்வாறு தண்டிக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்படுகின்றதோ அதே போன்று மன்னார் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


இதற்கு சமூக ஆர்வலர்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காவல் துறை உண்மையாகவும்,நேர்மையாகவும் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் ஓர் வெற்றியை எதிர்கால சந்ததிக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.
எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமான சூழலுடன் பாதுகாத்துக்கொள்ள முடியும்.இது அனைவரது தார்மிக கடமையும்,பொறுப்பும் ஆகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila