நடுவீதியில் வைத்து வெள்ளை வானில் வந்தோரால் முன்னாள் போராளி விலங்கிட்டு கைது!

கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு கைது செய்து சென்றுள்ளனர்.
யார் கைது செய்தது? ஏன் கைது செய்தனர்? எங்கு கொண்டு சென்றுள்ளனர்? என்று எவருக்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவினர்கள் உடனடியாக கிளிநொச்சி இரனைமடுவில் அமைந்துள்ள பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளளனர். இதனையடுத்து உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று போது அங்கும் குறித்த முன்னாள் போராளியை கைது செய்தது யார் என தங்களுக்கு தெரியாது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உறவினர்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரிக்குமாறும், சில வேளை வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஒருவரை கைதுசெய்யும் போது அவர் வாழும் பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும். யாரை என்ன காரணத்திற்காக கைது செய்கின்றோம். எங்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று அல்லது கைது செய்யப்படுகின்றவரின் உறவினருக்கு தாங்கள் யார் என்தனையும் எதற்காக கைது செய்கின்றோம் என்பதனையும் தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறான எவ்வித நடைமுறைகளும் இன்றி இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் கைது சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila