அதாவது ஆயுத ரீதியிலும், அரசியல் ரீதியில் தமிழ் சமூகத்தை தோல்வி அடைந்த சமூகமாக வெளிக்காட்ட முனைந்தது.
ஒரு மன்னராட்சியைப் போன்று இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டை வெற்றி கொண்டதன் பின்னர் அந்த நாட்டு மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்துகின்ற மனோநிலையிலேயே கடந்த அரசாங்கம் இருந்தது.
எந்தவிதத்திலும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி நடப்பதற்கான அறிகுறியை காணமுடியவில்லை.
குறிப்பாக வெற்றி கொள்ளப்பட்ட தமிழ் மக்களது காணிகளையும், அவர்களது உரிமைகளையும் பறித்தது.
மேலும் அவர்களது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இல்லாமல் செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மறுபுறத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும்,
சர்வதேச தேசத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு அல்லது அவர்களை ஏதோ ஒரு விதத்தில் மயக்கி அல்லது அவர்களின் நலன்களுக்கு துணை புரிவதாக உறுதியளித்து தமிழ் மக்களின் மீது மனித குலமே வெட்கி தலைகுனியும் வகையில் ஒரு தாக்குதலை நடத்தி, கொல்லப்பட்டவர்கள் தனது நாட்டு மக்கள் என்பதையும் மறந்து வெற்றி வாதத்தில் மிதந்தது.
இதன்போது, சர்வதேச சமூகத்திற்கும், அந்த அந்த நாடுகளுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் கடந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
போருக்கு ஆதரவளித்தவர்களோ அல்லது போருக்கு பின் மஹிந்த அரசை எதிர்த்தவர்களோ தமிழ் மக்களைப் பற்றியும் அவர்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும் கரிசணை செலுத்தியிருப்பதாக தெரியவில்லை.
சர்வதேச சமூகம் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தமது ஏமாற்றத்திற்கு பழிவாங்குவதற்காக ஒரு ஆட்சி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்த விரும்பியது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று துடித்த பெரும்பான்மைத்துவ அரசியல்வாதிகளுக்கும், சர்வதேச அழுத்தத்தில் இருந்து நாட்டை ஓரளவுக்கேனும் ஆசுவாசப்படுத்த விரும்பியவர்களுக்கும் இது வாய்ப்பாகவும் அமைந்தது.
ஜனாதிபதி பதவியில் அமர வைப்பதற்கு சர்வதேசத்திற்கு ஒரு நபர் தேவைப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் ஆதரவைப் பெற்று இருந்த போதிலும் அதன் தலைவருக்கு மக்கள் செல்வாக்கை வென்றெடுக்க கூடிய ஆற்றல் போதுமானதாகவில்லை என்பதை அந்த நாடுகள் உணர்ந்திருந்தன.
வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்தவிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்தது.
மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கியஸ்தர்களும் கூட தாங்கள் ஓரம்கட்டப்படுவதாக கருதியதால் ஒரு அதிருப்தி நிலவியது.
ஆகவே, சர்வதேசத்தின் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மஹிந்தவிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவதற்குமான ஒரு சமரசத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியும் வரவேண்டிய தேவை ஏற்பட்டது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் தமது விருப்பத்திற்குரிய ஒருவரை ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக தன்னை முற்றிலும் நம்பியிருந்த தமிழ் தலைமையையும் பயன்படுத்தியிருந்தது.
இதன்விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
வெற்றிவாதத்தை பலவீனப்படுத்துவற்கு ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்தையே நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் பயன்படுத்தப்பட்டார்.
இந்த இடத்தில் தங்களுக்கு என்ன நன்மை என்பதை சிந்திக்காமலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டிய சூழலுக்குள் சிக்கிக் கொண்டது.
உள்நாட்டினதும் சர்வதேச சமூகத்தினதும் முன்னெடுப்புக்களினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
புதிய ஆட்சியைக் கொண்டு வருவதற்கு தாம் பெருமளவில் பங்காற்றினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவாதம் பேசியது.
புதிய அரசாங்கத்திடமிருந்து இலகுவில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த கூட்டமைப்பினருக்கு ஏமாற்றமே தொடர்ந்தும் மிஞ்சியது.
இணக்க அரசியல் செய்துவரும் கூட்டமைப்பின் தலைமைக்கு தனக்கு இருக்கும் அதிகாரம், செல்வாக்கு என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத நிலையிலேயே உள்ளது.
மக்களின் இறைமையைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தங்களையே தமிழ் மக்கள் பெருமளவில் விரும்புவதாகவும், நம்புவதாகவும் கூறிக் கொள்ளும் கூட்டமைப்பின் தலைமை அதற்கு பாத்திரமாக செயல்படுகிறதா...? என்ற கேள்வி இன்று பல தரப்பிலும் எழுந்திருக்கிறது.
தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுவிட்டோம், ஆட்சியை மாற்றிவிட்டோம் என்ற வெற்றிக் களிப்பில் மிதக்கும் கூட்டமைப்பின் தலைமை அந்த வெற்றியைக் கொண்டு சாதித்தது என்ன என்பதை சிந்திக்க மறந்துவிட்டது.
வெற்றி வாதத்தில் திளைந்த மஹிந்தவுக்கு என்ன நடந்தது என்பதை கூட்டமைப்பின் தலைமை உணர்ந்து கொள்ளும் காலம் நெருங்கி வருகிறது.
இதன்வெளிப்பாடுகளே மக்கள் அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை என்று முடிவெடுத்து தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி தாமே வீதிகளில் இறங்கிப் போராட முன்வந்துள்ளமை.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, புதிய காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு என்று பல்வேறு விடயங்களை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வீதிகளில் இறங்கிவிட்டனர்.
வாக்கிற்காக அவர்களிடம் மீண்டும் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் கூட அரச ஆதரவு சார் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கூட்டமைப்பின் தலைவரால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மக்களையும், கட்சியையும் வழிநடத்த வேண்டிய தலமை அதை விடுத்து மக்களின் பின்னால் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உலகில் வேறு எங்கும் நடந்திருப்பதாக தெரியவில்லை.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்காற்றியதாக சொல்லும் கூட்டமைப்பின் தலைமை அதனை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையில் இருந்தும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் இருந்தும் விலகி நிற்பதாகவே தெரிகிறது.
கருமங்கள் நடப்பதாகவும், அதன் வேகம் போதுமானதாக இல்லை என்றும் தெரிவிக்கும் கூட்டமைப்பின் தலமை தாம் நிறைவேற்றிய கருமங்களை பட்டியலிட தவறியிருக்கிறது.
யுத்த சூழலில் பாதுகாப்பு தரப்பினால் அபகரிக்கப்பட்ட காணிகளை யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் எத்தகைய நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அதை சாதிக்க தவறிவிட்டது.
அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்ட தமிழர்களை யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எத்தகைய நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிலர் குற்றங்கள் செய்திருந்தால் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விடுவிக்கப்படடிருக்க வேண்டும்.
இந்த இரண்டையும் அழுத்தம் கொடுத்து செயற்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தலமை தவறியிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தி உண்மையை வெளிக் கொணர்வதற்கு போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு சிறிய நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
இந்தக் கேள்வியைக் கூட கூட்டமைப்பின் தலைமை இதுவரை கேட்டதாக தெரியவில்லை.
ஆக இவைகள் எவையும் தங்களால் முடியாத பட்சத்தில் மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கி ஜனநாயக ரீதியாக போராடி இருக்க வேண்டும். அதையும் செய்ய தவறியிருக்கின்றது.
இந்த நிலையில் மக்களின் இறைமை, மக்கள் ஆதரவு என்பவற்றைப் பெற்றுக் கொண்டதாக கூறிக்கொண்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், பதவிகளுடன் வெற்றிவாதத்தில் திளைக்கும் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக,
தமிழரசுக் கட்சி மக்களின் மீது உண்மையான அக்கறை செலுத்தி இதயசுத்தியுடன் தமது மக்களை காப்பற்ற முன்வருமா..?
அல்லது மக்கள் தங்கள் வழியை தாங்களே தீர்மானிப்பதற்கு வழிவிடுமா...? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.