மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது.
உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு.
என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் இனம் சார்ந்தது.
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என் பதை நீங்கள் உண்மையிலேயே உணரவில் லையா? அல்லது உணர்ந்தும் உங்கள் நலனுக்காக அதை மறைப்புச் செய்கிறீர்களா? அல்லது உங்களுடன் இருப்பவர்கள் தவறாக வழிப்படுத்துகின்றனரா? என்பதை எங்களால் அறிய முடியவில்லை.
ஆனால் உண்மையை தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டியது உங்கள் தார்மீகக் கடமை. வன்னிப் போரில் பேரிழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்த தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் நீங்களோ அன்றி உங்களோடு இருப்பவர்களோ நடந்திருக்கக்கூடாது.
அவ்வாறு நடந்து கொள்வதென்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடத்திய வன்னிப் போரை விடக் கொடுமையானது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் தராது என்பது நிறுதிட்டமான உண்மை.
இலங்கை அரசாங்கம் எங்களுக்கு எதுவும் தரவில்லை என்பதற்காக உங்களைக் கடிந்து கொள்வது நியாயமன்று.
இருந்தும் உங்கள் நடைமுறைகள் உங்களின் அரசியல் போக்குகள் தமிழ் மக்களை ஆத்திரமூட்டியுள்ளன என்பது சத்தியவாக்கு.
இதற்குக் காரணம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அருமந்த சந்தர்ப்பங்களை நீங்களும் உங்கள் பக்கத்தவர்களும் விற்றுத் தள்ளி விட்டதுதான்.
ஆம், விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இல்லாமல் போனபோது வெறுங்கையாயினர்.
இருந்தும் இலங்கை அரசாங்கம் நடத்திய கொடூர யுத்தம், தமிழின அழிப்பு, போர்க்குற்றம் என்பன சர்வதேச சமூகத்தை தமிழ் மக்கள் பக்கம் திருப்பியது.
ஐ.நா சபை வரை எங்கள் பிரச்சினை எடுத் துச் செல்லப்பட்டது. புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்கள் உழைப்பையும் கைவிட்டு கால் நடையாக ஐரோப்பிய வீதிகளில் நடந்து பேரணி நடத்தி சர்வதேச சமூகமே! ஈழத் தமிழினத் தைப் பார் என்று கதறினர்.
இவற்றின் காரணமாகவும் சர்வதேச கள நிலைமை தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்தது.
ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தவில்லை. மாறாக அற்பசொற்ப சலுகைக்காக இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்தீர்கள்.
சர்வதேசத்தின் உதவியை உதறித் தட்டினீர்கள். இன்று ஒன்றுமில்லாத ஒன்று வந்திருக்கிறது.
அதிலும் ஒரேநாடு, ஒற்றையாட்சி என்பதைக் கூறுவதால் நீங்கள் பாராளுமன்றத்தில் காட்டிய வார்த்தை வடிவங்களை நினைக்க எங்களுக்கே கவலையாக உள்ளது.
ஐயா! அவர்கள் ஒன்றும் தரமாட்டார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆறுதலடையுங்கள்.