மைத்திரியின் யாழ், விஜயத்தில் அறிந்து கொள்ள முடிந்தது என்ன?

நல்லாட்சியில் முடிந்தளவு நீதியான நடவடிக்கையை நிலைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்துவருவதாக அவரது சில நடவடிக்கைகள் தெரிகின்றது.
இதனடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் சமகாலத்தில் அபிவிருத்தி நடவடிக்கையும் முன்னெடுப்போம் என புறப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சிந்திக்க வேண்டியவற்றை அவர்கள் செயற்பட , அதற்காக திட்டமிட மறந்தவற்றை ஜனாதிபதி சிந்தித்ததானது அவரது யாழ், விஜயத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.
அது அரசியல் ரீதியானதா? உண்மையான அக்கறையானதா? என்ற கேள்வியும் நிலவாமல் இல்லை. ஆனாலும் ஜனாதிபதியின் நல்லாட்சியை நிலை நிறுத்தும் முயற்சியில் பங்கத்தையும் அதற்கு சவாலாகவும் செயற்பட்டு வரும் சில அரச திணைக்கள அதிகாரிகளின், நடவடிக்கைள் ஜனாதிபதியின் உண்மையான மனோ நிலை முயற்சிக்கு இடம்கொடுப்பார்களா? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் நிகழ்வு ஒன்றில் எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறை அற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுகின்றன.
இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என முனைப்புடன் செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களினதும் அதிகார சபைகளினதும் அளவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சுமார் 25000 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை எதிர்வரும் காலபோகத்தில் மேற்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


மாரிகால கூடுதல் மழை வீழ்ச்சியின் போது இக்குளக்கட்டுக்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் இதன் கீழ் வாழும் குடும்பங்கள் அச்ச நிலையில் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக எத்தனையோ கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மாவட்டச் செயலர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் புதுப் புது பிரச்சினைகளை முன்னெடுத்து இதற்கான தீர்வை எட்டவிடாது தடுப்பதில் மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் முனைப்புடன் செயற்படுவது எம்மை விசனத்திற்கு உள்ளாக்குகின்றது. எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆன்மீகவாதி. அதற்கு அப்பால் ஒரு சிறந்த இந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவிருந்தவர். அவர் இவ்வாறான கருத்தை சொல்வது வெறும் அரசியல் கருத்தாக கொள்ள முடியாது.
அவர் எந்த சந்தர்பத்திலும் பொறுப்பற்ற கருத்துக்களையல்லாது நடமுறையின் அனுபவத்தை முன்வைத்து வரும் ஒருவர் என்ற அடிப்படையில் குறித்த திணைக்களங்களின் நடவடிக்கைள் கவனிக்கப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.
அன்மையில் முன்னாள் பொலிஸ்மா (ஓய்வு நிலை )அதிபர் சில குளப்ப அரசியல்வாதிளின் சொற்படி கடந்த ஆட்சியில் செயற்பட்டவர் என்ற செய்தி வெளியாகி விசாரணை என்றெல்லாம் பேசப்படுகின்றன.
குறித்த பொலிஸ்மா அதிபர் பால சூரியவும் அரசியல் வாதி அல்ல. அவரும் ஒரு திணைக்களத்தலைவர்தான்..
இவ்வாறே இவரைப்போன்ற பல திணைக்களத்தலைவர்கள் கடந்த ஆட்சியில் தாம் பதவி வகித்த திணைக்களங்களை சிங்கள மக்களின் திணைக்களங்களாகவும் பௌத்தத்தை பாதுகாக்கும் திணைக்களங்களாகவும் வழிநடத்தி வந்துள்ளனர். அதில் இருந்து அவர்கள் மீள சிரமப்படுகின்றனர்.
அதில் குறிப்பிடத்தக்க திணைக்களங்களாக தொல் பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், உள்ளிட்ட பல தமிழ் மக்களால் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் முற்றிலும் தமிழ் மக்களின் வளங்களை முடக்குதல், அபிவிருத்தியை தடை செய்தல், அவற்றை பறிக்க துணைபோதல் என கடந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்தப்பட்டவர்கள்.
இவர்களுக்கு நாட்டின் இனவாதிகள் குழப்பவாதிகளான பௌத்த துறவிகளின் நெருங்கிய தொடர்பு அதிகம். இவர்கள் நாட்டின் சட்டம் பற்றி கரிசனை கொள்ளாவிட்டாலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறை கருவியாக செயற்படுவதில்தான் அக்கறை அதிகம்.
ஆகவேதான் ஆட்சி மாறினாலும் காட்சி இன்னும் மாறவில்லை என்று சொல்லும் நிலமையை இந்த பழக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வடக்கு கிழக்கில் மேற் கொண்டு வருகின்றனர்.
இதனொரு விடயமாகவே வடக்கு முதலமைச்சரின் கருத்தை கொள்ள முடியும்.குறிப்பாக தமிழ் மக்களை இவர்கள் அடக்க சட்டத்தை வேண்டுமான வகையில் பயன்படுத்திய கதைகள் வடகிழக்கில் ஏராளமுண்டு,
கிழக்கில் பிரசித்தி பெற்று பேசப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களின் அழிப்பு கதைகள் ஏராளமுண்டு. அதில் அகத்தியர் ஸ்தாபன தமிழர்களின் தொல்பொருள் இட ஆக்கிரமிப்பும் முக்கியமானவை.
அதனை தொல் பொருள் திணைக்களம் வழமைபோல் கையகப்படுத்தி பௌத்த மயமாக்க முனைந்தது. அதனை கடுமையாக மக்கள் எதிர்த்து ஒருவாறாக தடை செய்யப்பட்டன. ஆனாலும் இந்த வன வள திணைக்கள அதிகாரிகளுக்கு அது பொறுக்கவில்லை.
அரச அதிபரின் அனுமதியுடன் குறித்த இடம் புனர் நிர்மாணம் நடைபெறுகையில் குறித்த திணைக்களம் அந்தப்பகுதியை அடையாள மிட்டு வன இலாகா எல்லைக்கற்களைப்போட்டன.
குறித்த தாபனத்தைச்சுற்றியிருந்த மக்களின் காணிகளையும் உள்வாங்கி இந்த எல்லைக்கல்லை போட்டனர்.
அதனையறியாத அப்பாவி தமிழ் மக்கள் தமது காணிக்குள் துப்பரவு செய்யமுயன்ற போது அங்கு சென்ற ஏழ விவசாயிகளைப்பிடித்து பெரும் காட்டில் மரத்தை வெட்டியதாக போலியான குற்றச்சாட்டின் பெயர் குறித்து வழக்கை போட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாம் மரம் வெட்டவில்லை. காணிதான் துப்பரவு செய்தோம் என பலமுறை கூறியும் திணைக்கள அதிகாரிகளின் சட்டவிடயம் கவனத்தில் எடுக்கப்பட்டு ஏழுபேருக்கும் தலா 20ஆயிரம் ரூபா நீதிமன்றம் தண்டம் விதித்தது. தனது ஆவணத்தை கொண்ட காணியை துப்பரவாக்கிய விவசாயி வேறு எங்கோ உள்ள பெரும் காட்டில் மரம் வெட்டியதாக வழக்கைப்போட்டு காட்டை பாதுகாத்த சம்பவம் இந்த நல்லாட்சிக்காலத்தில் மூதுாரில் இடம்பெற்றன.
இவ்வாறு இந்த திணைக்கள அதிகாரிகள் கடந்த அரசின் விசுவாசிகளாகவும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டு பழகி விட்டனர்.இதனால் மேலிடத்தில் என்னதான் முடிவுகள் வந்தாலும் கீழிடத்தில் அவை மக்களுக்கு பயன்தர மறுக்கின்றன.
இந்த வகையிலேதான் முதலமைச்சரின் சபை முயற்சிக்கும் அபிவிருத்தி முயற்சிக்கும் தடைகள் போடப்படுகின்றன. இது விடயத்தில் உடன் தலையிட்டு ஜனாதிபதி பேசி தீர்ப்பதாக பேசியது ஆறுதலான விடயம்.
ஆனாலும் கீழ் மட்டத்தில் செய்யப்படும் அதிகாரிகளின் இந்த அரசியல் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக ஜனாதிபதிக்கு கொண்டு வந்த வண்ணமிருக்க முடியாது.
நல்லாட்சியை ஏற்படுத்த முனையும் இந்த சந்தர்பத்தில் இந்த திணைக்களங்களும் தமது உண்மையானதும் நீதியானதும் மனிதாபிமானமானதுமான நேர்மையான நாட்டின் அபிவிருத்தியில் பற்றுக்கொண்டு நல்லாட்ச்சியுடன் செயற்படுதல் அவசியமானதாகும்.
பழைய தலைவர்களின் விசுவாசிகளாக வடகிழக்கில் பல்வேறு சுரண்டலுக்குதவியபோதும் பௌத்தம் காக்கிறோம் சிங்களைத்தை காக்கிறோம் என மக்களை இம்சைப்படுத்தி, பிளவு படுத்திய நிகழ்சி நிரலை விடுத்து செயற்பட வேண்டும்.
அவர்களும் அரசியல் செய்தால் நாட்டில் நல்லாட்சி என்பது சவாலான விடயமாகவே தொடரும். ஜனாதிபதியின் உண்மையான முயற்சியும் விழலுக்கிறைத்த நீராகிவிடும் .
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila