அச்சுவேலி முக்கொலை வழக்கின் தொடர் விசாரணை மூன்றாவது நாளாக நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றைய தினம் வழக்கின் ஆரம்பத்தில் எதிரியின் பிள்ளையை எதிரியிடம் காண்பிக்கப்பட்டது.
அப்பா செத்திட்டார்
எதிரி தனது பிரதான கோரிக்கையாக
தனது மகனை காட்டுமாறு நீதிபதியிடம் கோரியிருந்தார். அதற்கமைய மனிதாபிமான அடிப்படையில் அவருடைய மகனை அவர் கண் முன் காண்பிக்குமாறு எதிரியின் மனைவிக்கு அறிவித்ததுக்கு அமைய நேற்றைய தினம் எதிரியின் மகனை அவர் கண் முன் காண்பித்தனர்.
குறித்த மகனிடம் எதிரிக்கூண்டில் நிற்பவர் யார் என நீதிபதி கேட் டபோது யாரென்று தெரியாது என கூறினான். பின்னர் உனது அப்பா எங்கே என கேட்ட போது அவர் செத்திட்டார் என தெரிவித்தான்.
பின்னர் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் தந்தை யார் என தெரியாது குறித்த சிறுவன் எதிரிக்கூண்டில் நிற்கும் தன்து தந்தையுடன் சைகை மூலம் கதைத்துக் கொண் டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.
சாட்சிகள் வாளை அடையாளம் காட்டினர்.
குறித்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து கைப்பற்றப்பட்ட வாள் அடங்கிய சான்றுப் பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து நேற்றைய தினம் மன்றுக்கு எடுத் துவரப்பட்டிருந்தது. குறித்த சான்றுப்பொருளை அடையாளம் காட்டுவதற்கு 4 ஆம் சாட்சியான தர்மிகா 5 ஆம் சாட்சியான யசோதரன் ஆகியோர் மீண்டும் மன்றுக்கு அழைக்கப்பட்டனர். குறித்த சாட்சிகள் இருவரும் குறித்த வாளை அடையாளம் காட்டியிருந்தனர். இரத்தத்தில் மூழ்கியபடி முனங்கிக்கொண்டு இருந்தார்கள்.
10 ஆம் சாட்சியான அச்சுவேலி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க சாட்சியமளிக்கையில்,
கடந்த 2015.05.04 அன்று நாம் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒருவர் இறந்துள்ளதாக அதிகாலை 2 மணியளவில் என க்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது, சம்பவ இடத்துக்கு நான் விரைந்த போது, வீட்டின் விறாந்தையில் இரத்தம் சூழ்ந்து உடலில் இரத்தம் வெளியேறிய நிலையில் பெண் ஒருவர் விழுந்து கிடந்தார். வீட்டின் பின்பக்க அறையில் அனுங்கல் சத்தம் கேட்டது. அங்கு போய் பார்த்த போது ஆண் பெண் இருவர் இரத்தத்தில் மூழ்கியபடி இருந்தார்கள். அந்த அறை முழுவதும் இரத்தம் தேங்கி இருந்தது. அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்கள்.
அடுத்த அறைக்குள் சென்ற போது ஒரு மெத்தை இருந்தது. அதில் ஏறத்தாழ 2 வயது நிரம்பிய ஒரு குழந்தை எந்தவித சலனமும் இன்றி உறங்கிக்கொண்டு இருந்தது. அக்குழந்தையை அணைத்து தூக்கி தடவினேன். அப்போதும் அக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. காயம் ஏதும் இருக்கிறதா என பார்த்தேன். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. அக் குழந்தையையும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தேன்.
பின்னர் வைத்தியசாலைக்கு சென்றேன். அப்போது 3 பேர் இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பில் எனது புலன் விசாரணைகளை ஆரம்பித்தேன்.
அயலவரின் வாக்கு மூலம் மற்றும் வேறு பல விசாரணைகள் இரகசிய தகவல்கள் மூலமும் சந்தேகம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் என பொ. தனஞ்சயன் என்பவரை 2015.05.04 அன்று 5.30 மணியளவில் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய தோம். எதிரியின் வாக்கு மூலத் தின் அடிப்படையில் அவர் சம்பவத்தன்று பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கத்தி, மற்றும் அவருடைய உடைகள் என்பவற்றை கைப்பற்றிக்கொண்டோம். குறித்த சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டன என சாட்சியமளித்தார். அத்துடன் 13 ஆம் 16 ஆம் பொலிஸ் சாட்சிகள் விசாரணை தொடர்பில் சாட்சியமளித்தனர்
கொடூர வெட்டுக்காயங்கள்
15 ஆம் சாட்சியான யாழ் போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கந்தையா ரட்ணசிங்கம் சாட்சியமளிக்கையில்
த. தர்மிகா என்பவரை பரிசோதனை செய்து சட்டவைத்திய அறிக்கை தயாரித்தேன். தான் கணவனால் வெட்டப்பட்டதாக தெரிவித்தார். அவரது உடலில் 15 வெட்டுக் காயங்கள் இருந்தது. அதில் 8 கொடூரமான காயங்கள் இருந்தது என சாட்சியமளித்தார்.
7 ஆம் சாட்சியான சட்டவைத்தி அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியமளிக்கையில்
அருள்நாயகி, சுபாங்கன், மதுசா ஆகியோரின் மரணப்பரிசோதனை மேற்கொண்டிருந்தேன். அதில் அருள் நாயகிக்கு கழுத்து மற்றும் தலை உச்சிப்குதியில் மண்டையோட்டு எலும்பு வரை வெட்டப்பட்ட காயங்கள் உட்பட 8 வெட்டு காயங்கள் காணப்பட்டது. யசோதரன் என்பவருக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதி உட்பட 8 வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
மதுசா என்பவருக்கு கழுத்து மற்றும் நெத்தி பகுதி உட்பட 8 வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இவர்கள் மூவருடைய இறப்பும், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய கொடூரமான வெட்டுக்காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக இடம்பெற்றுள்ளது. யசோதரன் என்பவரை பரிசோதித்த போது அவருக்கு 8 காயங்களும் அதில் 3 காயங்கள் கொடூரமானதாக காணப்பட்டது.
எதிரியை பிரிசோதித்த போது அவருக்கு 6 புதுக்காயங்களும் 1 பழைய காயமும் இருந்தது அவை உராய்வுக்காயங்களாக இருந்தன. எதிரி உள ரீதியான நலமுடன ;இருந்தார் என சாட்சியமளித்தார்.
4 சிவில் சாட்சியங்களும், 5 உத்தியோகபூர்வ சாட்சியங்களும் 2 நிபுணத்துவ சாட்சியங்களுமாக 11 சாட்சிகளின் சாட்சியப்பதிவு இடம் பெற்று அரச தரப்பு சாட்சியப்பதிவு அனைத்தும் நிறைவு செய்யப்பட் டது.
வாளால் தாறுமாறாக விசுக்கி னேன்
எதிரி பொ. தனஞ்சயன் சாட்சிய மளிக்கையில்,
எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை, எனது மனைவி பிள்ளை மற்றும் மனைவியின் குடும்பத்தை எனது குடும்பமாக நினைத்து இருந்தேன். எனக்கும் மனைவிக் கும் இடையில் பிரச்சனை இல்லை, மனைவியின் அக்காவின் திருமணம் தடைப்பட்டதில் இருந்து என்மேல் சந்தேகம் கொண்ட எனது மனைவியின் குடும்பத்தினர் என்னை எதிர்தனர். ஆனால் உண்மையில் நான் அவ்வாறான பிழையை செய்யவில்லை. மனைவியையும் பிள்ளையையும் பிரிந்து மிகவும் விரக்தியில் வாழ்ந்து வந்தேன்.
குறித்த சம்பவத்துக்கு முதல் நாள் மனைவியின் வீட்டுக்கு சென்ற போது மனைவியின் தம்பியால் தாக்கப்பட்டு அவமானப்பட்டு திரும்பி வந்தேன். எனது பிள்ளையை பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் முயற்சி செய்தும் அவமானப் பட்டு வந்தேன். களவாக வீட்டுக்கு சென்று எனது பிள்ளையை பார்த்தேன்.
எனது மாமியர் ஒருமுறை எனக்கு தொலைபேசியில் பேசும் போது, எனது மனைவியிடம் இருந்த விவாகரத்து பத்திரம் வரும் அதை எடுத்து வைத்திரு என தெரிவித்தார். மிகவும் மன உழைச்சலுக் குள்ளானேன்.
முன்னர் பிள்ளையை பார்க்க செல்வது போல் சம்பவ தினத்தன்று இரவு 10.30 மணியளவில் அங்கு சென்றேன். மதிலால் ஏறி வீட்டுக்குள் சென்று வீட்டின் அறையை எட்டிப்பார்த்தேன். முன்பு அந்த அறையில் எனது மனைவி மச்சான் மாமி மற்றும் மகன் ஆகியோர் படுத்துறங்குவார்கள். ஆனால் அன்றைய தினம் எனது பிள்ளைக் கருகில் ஒரு ஆணும் பெண்ணும் இருப்பதை கண்டேன். அன்று மாமி எனக்கு சொன்னது நினைவில் வந்த போது எனது மனைவிக்கு வேறு திருமணம் நடைபெற்று விட்டதா என்ற சந்தேகத்தில் செய்வதறியாது ஆக்ரோசமடைந்து கதவை தட்டிடேன்.
அப்போது அடுத்த அறையில் இருந்து மனைவியின் தம்பி வந் தான் அவர் ஒரு கத்தியால் எனக்கு எறிந்தார் அதை நான் கைப்பற்றிக் கொண்டேன். கோபத்தில் தாறுமாறாக வெட்டினேன். இருட்டில் யார் என தெரியவில்லை. அப்போது தான் எனது மனைவி அந்த அறையில் இருந்து கத்திய படி வெளியே ஓடுவதை கண்டேன். சத்தத்தை வைத்து ஏனையவர்கள் யார் என கண்டு பிடித்தேன். அந்த நேரத்தில் தான் குறித்த அறையில் இருந்து மனைவியின் அக்காவும் அத்தானும் வந்தார்கள். அத்தான் எனக்கு றீப்பையால் அடித்தார் அதை தடுப் பதற்கு நான் கத்தியால் விசுக்கினேன். இடையில் அக்காவும் வந்து அகப்பட்டு கொண்டார்.
பின்னர் அவ் இடத்தை விட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்று விட்டேன் நவக்கிரிப்பகுதியில் ஆட்டோ எரிபொருள் தீர்ந்தமையால் அதிலே நிறுத்திவிட்டு வாழைத்தோட்டத்தினால் வரும் போது கத்தியை வீசிவிட்டு ஊரெழுவில் உள்ள எனது வீட்டுக்கு சென்று விட்டேன். காலையில் தான் எனக்கு தெரியும் 3 பேர் உயிரிழந்து விட்டதாக உடனே கோப்பாய் பொலிஸில் போய் நான் சரணடைந்தேன்.
நான் செய்தது மிகப்பெரிய குற்றம், 3 பேர் சாவதற்கு காரணமாக இருந்துள்ளேன். மனைவி கூறியது போல் நான் அவரை தூக்கி வைத்து வெட்டவில்லை. சந்தேகத்தில் கோபம் ஏற்பட்டு அவ்வாறு செய்து விட்டேன். நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை எனது நிலை அவ்வாறு ஏற்பட்டு விட்டது. என சாட்சியமளித்தார்.
வழக்கின் சாட்சிய பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை இன்றைய தினம் அறிவிப்பதாக நீதிபதி மன்றில் தெரிவித்து வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.