ஏதாவது கருத்துக் கூறினால் அது தங்களை ஆபத்தில் மாட்டிவிடலாம் அல்லது உயிரைக் காவு கொண்டு விடலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மட்டுமன்றி, மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபின்னரும் வெள்ளை வான்களின் ஓட்டம் நின்றபாடில்லை.
இப்போது திடீரென இந்நிலையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த மாதம் 6ம் திகதி வெளிவந்த ஷநந்திக்கடலுக்கான பாதை| என்னும் புத்தகம்.
இதனை எழுதியவரை மையப்படுத்திய கருத்துகளும் விமர்சனங்களும் மட்டுமன்றி, இதன் உண்மைத்துவம் மற்றும் பின்புலம் பற்றியும் பலரும் பேசுகின்றனர்.
தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வடக்கைத் தங்கள் மடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் சிங்கள இராணுவம் அங்கு மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் வர்த்தகம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.
இக்காணிகளில் எந்தச் செலவுமின்றி விவசாயம் செய்யும் இராணுவம், அந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கே அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்துகின்றது.
இதனால் இப்பகுதி மக்கள் இருமுனைத் தாக்குதலைச் சந்திக்கிறார்கள். தமது காணியில் விளையும் பொருட்களைத் தாமே பணம் கொடுத்துப் பெற வேண்டிய துயரம் முதலாவது. அங்குள்ள மற்றைய விவசாயிகள் தமது உற்பத்திகளை இராணுவத்துடன் போட்டியிட்டு விற்பனை செய்ய முடியாததால் சந்திக்கும் பண ந~;டம் அடுத்தது.
“இராணுவம் வர்த்தக நோக்கில் அங்கு விவசாயம் செய்யவில்லை. தமது சொந்தத் தேவைக்கே இதனைச் செய்கின்றனர்” என்று இராணுவப் பேச்சாளர் றொசான் செனிவிரட்ன இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்படியானால், இராணுவ வண்டிகளில் அங்குள்ள சந்தைகளுக்கு எதற்காக உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்பதற்கு அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு முதுகெலும்பு இல்லைப்போல் தெரிகிறது.
ஏ-9 வீதி எனப்படும் யாழ் – கண்டி பட்டுப்பாதையின் இருமருங்கிலும், பிரதான வீதிச் சந்திப்புகளிலும், படை முகாம்களுக்கு முன்னாலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் தேநீர்க் கடைகளையும் சிற்றுண்டிச் சாலைகளையும் நிறுவி இராணுவம் வர்த்தகம் செய்யவில்லையா?
ஏற்கனவே இவ்விடங்களில் இயங்கி வந்த உள்;ர் மக்களின் பல உணவுச் சாலைகள் இராணுவத்துடன் போட்டியிட முடியாது போனமையால் மூடப்பட்டு வருவதை இங்கு எழுதித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.
இதே இராணுவத்தினர் புதிதாக ஆரம்பித்திருக்கும் புத்தக வியாபாரத்தை இனிப் பார்ப்போம்:
இலங்கையின் பிரதான போர்க்குற்றவாளிகள் என்று இனங்காணப்பட்டவர்களில் முக்கியமான ஒருவரே ஷநந்திக்கடலுக்கான பாதை| என்ற நூலை எழுதியவர்.
விடுதலைப் புலிகளின் பிரதான தளபதிகள் உட்பட தேசியத் தலைவர் பிரபாகரனின் சிறுவயது மகன் பாலச்சந்திரனினதும் கொலைகளுக்குப் பொறுப்பான 53வது படையணியின் பொறுப்பதிகாரியாகவிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்த மாதம் 5ம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற மறுநாள் இவரது நூல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியிடப்பட்டது.
770 பக்கங்களைக் கொண்ட இந்நூலில், முக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துகளையும் பார்வைகளையுமே இப்போது ஊடகங்கள் சுட்டிவருகின்றன.
“திரு. பிரபாகரன் ஒழுக்கமான தலைவர். உறுதியான முடிவுகளை எடுப்பவராக இருந்தார். தமது நடவடிக்கைகளுக்கு சரியான தருணம்வரை காத்திருப்பார். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடமிருந்தன. தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணி வந்தார். அவருடன் தொடர்புபட்ட சுமார் பத்தாயிரம் ஒளிப்படங்களில் ஒன்றில்கூட அவர் மது அருந்தியதைக் காணமுடியவில்லை. பெண் போராளிகளை ஒருபோதும் தவறாக அவர் பயன்படுத்தவில்லை….” என்று தேசியத் தலைவரின் குணாம்சங்களை கமால் குணரத்ன இங்கு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் நற்பண்புகள் குணாம்சங்கள் பற்றி இவர் சொல்லித்தான் உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை.
2009க்கு முன்னரே இவ்வகையான விபரங்களைக் கொண்ட பல கட்டுரைகள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. பல சிங்கள அரசியல்வாதிகள்கூட இதே கருத்துகளை மறைப்பின்றி வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒழுக்கம், கட்டுப்பாடு, திடமான கொள்கை, விட்டுக்கொடாத தாயக தேசிய தன்னாட்சிக் கோட்பாடு என்பவைகளின் மொத்த வடிவமே தேசியத் தலைவர் பிரபாகரன் என்பது பரகசியம்.
இதனாற்தான் இவரை மட்டுமே தமிழ் மக்கள் தேசியத் தலைவர் என்று வரிந்து கொண்டனர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
நிலைமை இப்படியாக இருக்கையில் கமால் குணரத்ன இவைகளை தமது நூலில் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் என்ன?
1. விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இவரால் காணப்பட்ட குணாம்சங்கள் இவரிடமோ அல்லது இவரது சிங்கள இராணுவத்திடமோ இல்லாதிருந்தமையால் ஏற்பட்ட வியப்பும் ஆச்சரியமும் முக்கியமானது.
2. போர்க்காலத்தில் சிங்கள இராணுவம் செய்த இழிநிலைத் தவறுகளையும் குற்றங்களையும் சுயபரிசோதனை செய்யும் பொழுது மனச்சாட்சிக்கு விரோதமாக அவைகளை மறுக்க முடியாத நிலையில் குறிப்பிட்டிருக்கலாம்.
3. கமால் குணரத்னவின் ஆங்கில, சிங்கள எழுத்தாற்றலுக்கான மொழிப்புலமை தொடர்பாக கொழும்பு ஊடகவியலாளர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர். எனவே இவர் கூறியவைகளை வைத்து நூலாக்கிய எழுத்தாளருக்கு உண்மையை எழுத வேண்டி நேர்ந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருக்கலாம்.
4. பல வருடங்களுக்கு முன்னரே சர்வதேச நிறுவனமொன்று தம்மிடம் கேட்டதற்கு இணங்கவே இதனை எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார். இதனூடகப் புலப்படுவது என்னவெனில், ஆங்கில மூலத் தயாரிப்பில் கைதேர்ந்த ஒருவரின் பங்களிப்பு இருந்திருக்கும் என்பதால், உலகம் ஏற்றுக் கொண்ட தலைவரின் உண்மையான குணாம்சங்களை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிருக்கலாம்.
5. முக்கியமான காரணமாகப் பார்க்க வேண்டிய ஒன்றுண்டு. ஏதாவது பொய்யை மற்றவர்களிடம் நம்ப வைக்க வேண்டுமென்றால், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சில உண்மைகளை கட்டாயம் அங்கு கூறவேண்டும். இது ஒரு தந்திரம். இதனூடாகவே தாம் கூறும் பொய்களையும் அவர்களிடம் ஷவிற்க| முடியும். இதனையே கமால் குணரத்ன கச்சிதமாக இங்கு செய்திருக்கிறார். இதனை ஒரு வணிக முயற்சியாகவே கொள்ள வேண்டும்.
சமாதானப்படை என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்ட இந்திய இராணுவம் மனித வேட்டையை நடத்தியது.
மூன்றரை வருடங்களின் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து தங்கள் அனுபவம் தொடர்பான விடயங்களை மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், சர்தே~; பாண்டே ஆகியோர் நூல்களாக வெளியிட்டனர்.
தங்கள் நாட்டை விட்டுக்கொடாத இந்திய இராணுவ அதிகாரிகள், அதேசமயம் விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிடிப்பையும், யுத்த யுக்திகளையும் தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாடான குறிக்கோள் நேர்மையையும் தெரிவிக்கத் தவறவில்லை.
இந்திய இராணுவத்தின் புலனாய்வு அதிகாரியாகப் பலாலியில் செயற்பட்ட கேர்ணல் ஹரிகரன் இப்போதும் இது சம்பந்தப்பட்ட விடயங்களை கட்டுரையாக எழுதி வருகிறார்.
இந்த வரிசையில் இலங்கையில் இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றிய ஒருவரின் முதலாவது யுத்த கால அனுபவ நூல் ஷநந்திக்கடல் பாதை|.
இவர்கள் அனைவருக்குமிடையிலுள்ள பொதுவான ஒரு ஒற்றுமை, இவர்கள் எல்லோருமே போர்க்குற்றவாளிகளாக் காணப்படுவதே! நீதியான விசாரணை நடத்தப்படுமானால் கமால் குணரத்ன மரணதண்டனை பெறவேண்டிய ஒருவர்.
யுத்தவேளையில் வேறுவகையாகப் பிழைப்பு நடத்திய இவர் இப்போது தேசியத் தலைவரின் புகழ்பாடும் புத்தக வியாபாரியாக மாறியுள்ளார். தேசியத் தலைவரின் புகழ் பாடினால் நல்ல பிழைப்பு நடத்தலாம் என்று தெரிந்தே இதனைச் செய்துள்ளார்.
யுத்தகால இராணுவத் தளபதியாகவிருந்து இப்போது பின்கதவால் அமைச்சராகியுள்ள சரத் பொன்சேகாவும், தமது யுத்த அனுபவங்களைப் புத்தகமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்தது யார்? ஏனைய போர்க்குற்றவாளிகளான சவேந்திர சில்வா, சார்லி கலகே, பொனிபஸ் பெரேரா என்று… இறுதியாக கோதபாய இராஜபக்ச புத்தகம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுதான், இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ள ஆகப்பிந்திய துரித பிழைப்பு!