யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம். அண்மைக்காலமாக கலைப்பீட மாணவர்களின் போராட்டத்தை கண்டோம். அதற்கு முன்னர் மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

இரண்டு போராட்டமும் வீதியோரத்தில் நடந்ததாயினும் ஒரு போராட்டம் படிக்க விடவேண்டாம் என்ப தாகவும் மற்றைய போராட்டம் படிக்க விடுமாறும் கேட்பதாக இருந்தது.

மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் இலங்கை மத்திய அரசின் கொள்கையுடன் சார்வுபட்டது என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிர்வாகம் அதற்கு பொறுப்பன்று, 

மாறாக கலைப்பீட மாணவர்களின் போராட் டத்திற்கு தீர்வு காணும்பொறுப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் சம்பந்தப் பட்டது. 

இதில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட மாணவர்கள் மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பொது மன்னிப்பு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம்.

மாணவர்களின் வயது என்ற விடயத்தின் அடிப்படையிலும் அவர்களின் எதிர்காலம் என்ற நோக்கிலும் மன்னிப்பு வழங்கப்பட்டமை மிகுந்த திருப்தி தருகிறது, மாணவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மனிதர்களை உருவாக்க முடியும்.

அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கிய மன்னிப்பு மாணவர்கள் திருந்தி தங்களை சாதனையாளர்களாக ஆக்குவதற்குப் பெருந்துணை புரியும் என நம்பலாம்.

அதே நேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றோம்.  

இவ் வேண்டுகோள்; அனைத்து இன மாணவர்களையும் விழித்தே முன்வைக்கப்படுகிறது. 
அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களே! இந்த மண் யுத்தத்தால் நொந்து போன மண். போராயுதம் இடித்த கட்டடங்கள், உடைத்த வீதிகள் இன்று செப்பனிடப்பட்டிருக்கலாம்.

ஆனால்,  நடமாடும் மக்களின் மனங்கள் சிதறுண்டு போயுள்ளதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புண்டு. எங்கள் மண்ணில் நடந்த யுத்தம் பறித்த உயிர்கள் கொஞ்சமல்ல. அந்த நினைவுகள் உயிருள்ளவரை நீங்காது. அந்த நினைப்புடன் நடமாடுகின்றவர்கள் இந்த நாட்டின் மக்கள், இந்த மண்ணில் வாழும் நம் அயலவர்கள் உறவுகள் இதனை யாரும் மறந்து விடக்கூடாது.

தவிர, காணாமல்போன பிள்ளைகளைத் தேடும் ஒவ்வொரு பெற்றோரும் உங்களைப்பார்த்து இவன் என்பிள்ளையோ! என்று ஏங்கி என்பிள்ளை இருந்தால், இப்படி இருப்பானோ! என பதகலிக்கும் பரிதாபம் நீங்கள் அறியாதது தான்.

 ஆதலால் தான் இக்கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றோம்.
ஒழுக்கத்தோடு கூடிய உத்தமர்களாக உங்களை ஆக்குங்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கக்கிடைத்த சந்தர்ப்பத்தை பேறாக நினைத்து உங்கள் கற்றலை முன்னெடுங்கள்.

இன்று எம் தமிழினம் படும்பாட்டை - தமிழ் அரசியல் தலைவர்கள் செய்யும் கூத்தை கண்டு; உத்தம சமூகத்தை உருவாக்குவதே தமிழினம் வாழ்வதற்கு ஒரே வழியயன்று கூறுங்கள்.

சிங்கள முஸ்லிம் மாணவர்களை சகோதர உறவுடன் அணுகி எங்களின் அவலத்தை; எங்களுக்கு நடந்த கொடூரத்தை எடுத்தியம்புங்கள். அவர்கள் எங்களிடம் வந்திருப்பதை எங்களுக்கான நல்ல சந்தர்ப்பமாக மாற்றுவோம். தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என சிங்கள மாணவர்கள் தென்பகுதியில் பிரசாரம் செய்யத் தூண்டுவோம். இது உங்களின் கடமை, உங்களால் செய்யக்கூடிய சாதனை.

இதைச்செய்யுங்கள் நீங்கள் எதற்காக மன்னிப்புக்கேட்டீர்களோ! அந்தச் செயலை அடியோடு கைவிடுங்கள்.

தமிழ் இனத்திற்காக சதா சிந்தியுங்கள்; செயற்படுங்கள். வெற்றியும் சாதனையும் சமாதானமும் நமக்குத் தானாக வந்து சேரும். 

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila