அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் எழுக தமிழ் வேண்டாம்-தமிழரசுக்கட்சி

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு
உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்றிரவு இடம்பெற்றது இதில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரங்கள் நீடித்தது.

தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் இணைத்தலைவர் மருத்துவர் லக்ஸ்மன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் சிவன்சுதன், பேராசிரியர் சிவநாதன், மருத்துவர் பாலமுருகன் மற்றும் மேலும் மூவர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேரணி நடாத்தப்படுவதற்காக முன்வைக்கப்படுகின்ற காரணங்களும், கோரிக்கைகளும் சரியானவையாக இருக்கின்ற பொழுதும் இந்தப் பேரணியினால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும் என்றபடியினால் இந்தப் பேரணியை நடாத்தாது தவிர்க்கும்படி தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்கள் பேரவையினரை கேட்டுக்கொண்டார். ஆனால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை முன்வைத்து நடாத்தப்படுகின்ற ஒரு போராட்டத்தை நிறுத்திவிட முடியாது என்று பேரவையினர் பதிலளித்தனர்.

புதிதாக எழுதப்படுகின்ற அரசியலமைப்பு சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வு ஒன்றை கொண்டுவரும் என்று தான் நம்புவதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். “ஆனால், தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விடுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் நாம் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றும் அவர் கூறினார். அப்பொழுது, “எமக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம் எதனையும் நடத்தாமல் காத்திருந்துவிட்டு, பின்பு ஏமாறச் சொல்லுகிறீர்களா என்று பேரவைத் தரப்பிலிருந்து பேராசிரியர் சிவநாதன் கேட்ட பொழுது, “ஏற்கனவே அறுபது வருடங்களாக நாங்கள் எத்தனையோ தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இன்னுமொரு தடவை கூட நாங்கள் ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை. அவ்வாறு நாங்கள் ஏமாற்றப்பட்டால், அதன்பின்பு போராட வேண்டிய தேவைகள் எதுவும் இருக்கின்றதா எனவும், மாற்று வழிகள் என்ன இருக்கின்றன எனவும் நாங்கள் தேடலாம்” என்று எம்.ஏ. சுமந்திரன் பதிலளித்தார்.

அதற்கு, அறுபது வருட காலங்களாக நம்பிக்கை தரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்ட நாங்கள் இன்னொரு தடவையும் அவ்வாறு ஏமாற்றப்படக்கூடிய சூழல் இருப்பதாக நீங்களே கூறுவதால், அவ்வாறு ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து இந்த “எழுக தமிழ்!” பேரணியை நிச்சயமாக நடாத்தியே தீரவேண்டும் என்று பேரவையினர் பதிலளித்தனர்.

இருந்தாலும், இந்த “எழுக தமிழ்!” பேரணிக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லையென்றும், தாம் அதில் பங்குபற்ற மாட்டோம் என்றும் அந்தப் பேரணியை நடத்தாது நிறுத்திவிடும்படியும் தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila