சுமார் இரண்டு தசாப்த காலங்களுக்கு மேல் சிறையில் வாழ்நாட்களை கழித்துவரும் தமது உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென, சர்வதேச கைதிகள் தினமான இன்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச கைதிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கைதிகளின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நீதித்துறையால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வரும் அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பாராமுகமாக நடந்துகொள்வதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதோடு, தமது விடுதலைக்காக அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அர்த்தமற்று போயுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இனத்திற்காக போராடியவர்கள் இன்று பூட்டிய அறைக்குள் எவ்வித விசாரணைகளும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈழத்துப் பிள்ளைகளுக்கு பூட்டிய சிறைதான் புதைகுழியா என அவர்களது உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமது உறவுகளின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், சமத்துவமும் நல்லிணக்கமும் சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிந்தார்.
சர்வதேச கைதிகள் தின தேசிய நிகழ்வானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இன்று பிற்பகல் பொரளை சிறைச்சாலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.