ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின்னர். அவரின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது அங்கு தமிழ் மக்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம் செய்வர் என தாம் ஏங்கிக் கொண்டதாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரியின் இந்தக் கருத்து, பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது, தமிழ் மக்கள் பேரணி நடத்தினால் - அவர் முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தால்,
அது தொடர்பில் பான் கீ மூனுக்கு தான் பதிலளிக்க வேண்டிவந்திருக்கும். ஆனால் பேரணியோ, ஆர்ப் பாட்டமோ நடக்கவில்லை என்பதால் யுத்தம் நடந்த வடபுலத்தில் எல்லாம் அமைதியாக உள்ளது.
இயல்பு நிலை ஏற்பட்டுவிட்டது என்றே பொருள்படும். இதனால் பெரிதான உத்தரவாதங்களை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தான் வழங்கவேண்டிய தேவை இருக்கவில்லை என்பதாகும்.
ஆக தமிழ் மக்களின் மெளனம் அல்லது அமைதி வடபுலத்தில் ஓர் இயல்பு நிலையை - எந்த விதமான பிரச்சினைகளும் அற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றே பொருள்படுகின்றது.
ஆனால் உண்மை அதுவன்று. தமிழ் மக்களின் வாழ்விடங்களில் புத்தவிகாரைகள் இன்னமும் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்து விடுபடவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் சிறைவாசம் தொடர்கிறது. காணாமல்போனவர்களின் உறவுகள் முடிவு எதுவும் தெரியாத நிலையில் அழு கண்ணீருடன் அலைகின்றனர்.
இதைவிட யுத்தத்தில் இறந்தவர்கள், அங்கவீனமானவர்கள் தொடர்பில் இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனினும் இதுபற்றி உலகிற்கு உரக்க எடுத்துக் கூறுவதற்கு நம்மிடம் ஆளில்லாமல் போய்விட்டது.
தமிழ் மக்களின் மேற்போந்த பிரச்சினைகளை சொல்ல வேண்டியவர்கள் அரசுடன் இணைந்து கொண்டுள்ளனர். மேற்படி விடயங்களை அழுத்திக் கூறுவது நல்லதல்ல என்பது அவர்களின் நிலைப்பாடு.
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மட்டும் நேர்மை திறத்துடன் தமிழ் மக்களின் சமகால சூழ்நிலையை வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் அரசுக்கும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
இருந்தும் இதுகண்டும் நம் அரசியல் தலைமை ஆகாது, கூடாது என்கிறது.
இத்தகையதோர் நிலையில் தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனநாயக ரீதியில்; அகிம்சை வழியில்; அமைதியான முறையில் கட்சிப்பேதங்களை மறந்து தமிழ் மக்களின் உச்சநலன் மட்டுமே என்ற நோக்குடன் நடத்தவிருக்கும் எழுக தமிழ் என்ற பேரணி தமிழ் மக்களின் ஆதங்கத்தை, சமகால பிரச்சினையை, தீர்வைத் தாமதிப்பதன் ஆபத்தை தெட்டதெளிவாக இலங்கை அரசுக்கும் உலகுக்கும் எடுத்தியம்பும்.
இந்தப் பேரணியில் தமிழ்மக்கள் திரண்டெழும் போது அதனைக் காரணம் காட்டி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள், தமிழர் பகுதிகளில் வைத்த புத்தர் சிலைகளை அகற்றுங்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்புடைய பதிலை வழங்குங்கள் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க முடியும்.