புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரப்பகிர்வின் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வானது அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அமையவேண்டியது இன்றியமையாதது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டியை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களது கோரிக்கையாக உள்ளது. கடந்த ஆறு தசாப்தகாலத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தசாப்தகாலத்திற்கும் மேலாக மிதவாத அரசியல் தமிழ் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளை நிலைநாட்டக்கோரி போராட்டங்களை நடத்தினர். அந்தப்போராட்டங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் தட்டிக்கழிக்கப்பட்டதையடுத்து 80களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமை உருவானது. மூன்று தசாப்தகாலமாக ஆயுதப்போராட்டம் இடம்பெற்றது. இந்த கொடூர யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும் துன்ப துயரங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.
ஆனாலும் இன்னமும் இந்த கொடூர யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது நல்லாட்சி அரசாங்கமானது அரசியல் தீர்வு காண்பதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை இறுதி செய்வது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில்தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அரசியல் தீர்வானது முழுமை பெற்றதாக அமையவேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். கடந்த 27ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாவீரர் தினமானது உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கௌரவமான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து வலியுறுத்தி உள்ளார்.
எமது தலைவர்கள் விலைபோய்விடுவார்களோ, அரைகுறைதீர்வை தம்மீது திணித்துவிடுவார்களோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண மக்கள் எத்தனித்துள்ளனர். துயிலும் உள்ளங்கள் எமது மக்களுக்கு துயர் வருவதற்கு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மக்கள் தங்களை உணரத்தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை அவர்கள் உணர்ந்துள்ளனர். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கி விட்டனர். எமது உணர்வுகளை மக்கள் மாவீரர் தினநாளில் வெளிக்காட்டியுள்ளனர். மக்களிடையே ஒருவித பயம் பிறந்துவிட்டது. விடுதலை வீரர்கள் வலம்வந்த காலத்தில் ஈழத்தைவிட எல்லாம் தருவோம் என்ற சிங்கள அரசியல்வாதிகள் இன்று சொற்களால் எமக்கு சுகம் தரலாம் என்று எண்ணுவதைப் பார்த்து இவ்வளவுதான் கிடைக்குமா, எமது அபிலாஷைகள், அடிப்படை வேண்டுதல்கள் நிறைவேறாதா என்ற பயம் பீடித்துள்ளமையினால் மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்டு மனநிறைவு காண எத்தனித்துள்ளனர் என்று முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
புதிய அரசியல்யாப்பின் மூலம் அரைகுறை அரசியல்தீர்வு திணிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவரிடம் காணப்படுகின்றமையினாலேயே மாவீரர் தின எழுச்சி தொடர்பில் இத்தகைய கருத்தினை முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.
இதனைவிட நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவின் தூதுவர் பிரைஸ் கச்சஸ்ஸனை முதலமைச்சர் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போதும் அதிகாரப்பகிர்வின் அவசியம் குறித்து அவர் எடுத்துக்கூறியுள்ளார். அதிகாரப்பகிர்வினை தரமுடியாமல் போகும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் எமக்கு ஏற்படும். அதிகாரப்பகிர்வினை எமக்கு உச்சபட்சமாக வழங்குமாறுதான் நாம் அரசிடம் கோரி வருகின்றோம். அதற்கு அரசாங்கம் இணங்கினாலும் தென்பகுதியிலுள்ள சில பேரினவாதிகள் நாம் ஏதோ தனிநாடு கேட்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
நாம் கோரும் அதிகாரப்பகிர்வினை தர முடியாது போகும் பட்சத்தில் தனிநாடு கோரிக்கைக்கான அவசியம் எமக்கு ஏற்படும் என்று முதலமைச்சர் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்றே யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான கனடா தூதுவர் மற்றும் நோர்வே தூதுவர் ஆகியோருடனான சந்திப்புக்களின்போதும் முழுமையான அதிகாரப்பகிர்வின் அவசியம் குறித்து முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.
தற்போதைய நிலையில் புதிய அரசியல்யாப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதியும் அரசியல்யாப்பு சபையில் இது குறித்தான இறுதிநாள் விவாதம் நடைபெறவிருக்கின்றது. இந்த இடைக்கால அறிக்கையின் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் ஒற்றையாட்சிக்குள்ளேயே சமஷ்டியற்ற தீர்வு வழங்கப்படும் என்று அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்புக்கான அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் இவர்கள் தீர்வைக் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை காணமுடியும் என்றும் மத்தியிலுள்ள அதிகாரங்கள் மாகாணத்திற்கு பகிரப்படும் அடிப்படையிலும் வழங்கப்படும் அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறாதவகையிலும் இடைக்கால அறிக்கையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சமஷ்டி என்ற பெயர் குறிப்பிடப்படாவிடினும் சமஷ்டிக்கு ஒத்த விடயங்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். இடைக்கால அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கிழக்கில் பொதுமக்களை அறிவுறுத்தும் கூட்டங்களும் கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் கூட்டங்களின் போது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை விளக்கிக்கூறி வருகின்றது.
ஆனாலும் இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படுமா? அதற்கான அனுமதியினை பேரினவாத கட்சிகள் வழங்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. அரசியல்யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணி கடுமையாக எதிர்த்து வருகின்றது. இந்த இடைக்கால அறிக்கையினை கைவிட வேண்டுமென்று பொது எதிரணி உட்பட இனவாத சக்திகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நான்கு பெளத்த பீடங்களும் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியை கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இலங்கையர்கள் மத்தியில் பேசும் போது சமஷ்டியை ஒத்த தீர்வை ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்று கூறியிருக்கின்றார். இவ்வாறான நிலையில் இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் இறுதி செய்யப்படுமா என்ற பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது இடைக்கால அறிக்கையினை விட முன்னோக்கி செல்ல முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அது எந்தளவு சாத்தியம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இத்தகைய நிலையில்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது அரைகுறையானதாக இருக்கக்கூடாது என்றும் அத்தகைய அரைகுறை அரசியல் தீர்வை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஏற்று விடக்கூடாது எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி வருகின்றார். தற்போதைய நிலையில் முதலமைச்சரின் இத்தகைய அழுத்தங்களும் அவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வில் உறுதியாக இருக்கின்றனர். ஆனாலும் நாம் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தீர்வைக்காண முனைகின்றோம். அதற்கு தென்பகுதி தலைமைகள் சாதகமான சமிக்ஞையை காண்பிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமை கோரக்கூடிய சூழலை முதலமைச்சரின் அழுத்தங்கள் உருவாக்கி வருகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் விடாப்பிடியான நிலைப்பாடு
Posted by : srifm on Flash News On 03:57:00
Add Comments