இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பான்கீ மூன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பிரத்தியேகமாக சந்திப்பதை இலங்கை அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இணைந்து தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் போர் குற்றங்கள் தொடர்பிலான பன்னாட்டு விசாரணை தொடர்பிலும் மிகவும் உறுதுியான நிலைப்பாட்டில் இருக்கும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பேங் கீ மூன் சந்தித்தால் பல விடையங்களை அவர் பகிரங்கமாக அவரிடம் தெரிவிப்பார் என்று கருதியே இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு நேற்று விஜயம்செய்துள்ள பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று வெளியாகியுள்ள பான்கீ மூன் நிகழ்ச்சி நிரலில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. எனினும் எதிர்வரும் செப்டெம்பர்இரண்டாம் திகதி கொழும்பில் வைத்து எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பிற்கு தன்னை அழைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.