“தமிழீழத் தாய்நாட்டின் விடிவுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த, எமது இதயம் எங்கும் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழவேண்டுமென்ற சத்திய இலட்சியத்துக்காக எமது மாவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக் கொள்ளும் தேசிய நாள்” – தேசியத் தலைவரின் 2008 மாவீரர் நாள் உரை.
நவம்பர் 27 – தமிழீழ விடுதலைக்காக தம் உயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உன்னத நாள் இது.
தியாகசீலர்களான சூரியப்புதல்வர்களின் உயிர்க்கொடையை நினைவுகூரும் உயரிய நாள் இது.
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் தமிழீழம் சிக்கியிருந்தவேளையில், உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கையில், நவம்பர் 27ம் நாள் முதலாவது மாவீரர்களுக்கானதாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
வன்னியின் அடர்ந்த காடொன்றுக்குள் கந்தகத்தை மேனியில் சுமந்தவாறு, தமிழீழ தேசியத் தலைவர் 1989 நவம்பர் 27ம் நாளன்று முதலாவது மாவீரர் தின உரையை நிகழ்த்தினார்.
அவ்வேளையில் மாவீரர்களின் எண்ணிக்கையானது 1207ஆக இருந்தது.
“விடுதலைப் போராட்டத்தின் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செயற்பாடுகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக்கூடாதென்பதற்காகவும், சகல போராளிகளும் சமம் என்னும் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் தெரிந்தெடுத்தோம்” என்று 27 ஆண்டுகளுக்கு முன்னர் – 1989 நவம்பர் 27ம் நாளன்று முதலாவது மாவீரர் நாளில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது வரலாற்றுப் பதிவுக்குரியது.
முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்ட 30 ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழீழப் போரில், நாற்பதாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து உத்தம வீரர்களாகினர்.
“எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாக இருக்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது. உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது” என்று மாவீரர்களை விளித்துக் கூறியுள்ளார் தேசியத் தலைவர்.
தமிழீழத் தேசத்தின் கடலிலும் கரையிலும் கலந்து, விண்ணிலும் மண்ணிலும் இணைந்து, காற்றோடும் மூச்சோடும் உருத்தோடு உறவாடியவர்கள் மாவீரர்கள்.
இவர்கள் பாதம் பதிந்ததால் தமிழ்மண் புனிதம் பெற்றது; இவர்கள் மூச்சுக் கலந்ததால் விடுதலை உணர்வு செறிந்தது; இவர்கள் பார்வை பட்டதால் தமிழீழப் பற்று எங்கும் வியாபித்தது.
நீரிலும் நெருப்பிலும் தவழ்ந்து விளையாடி தமிழினத்தைக் காத்து நின்றவர்களின் வீரதீரத்துக்கு எண்ணுக்கணக்கில்லை.
விடுதலைப் போராட்டம் என்பது அக்கினிக் குழம்பில் நடந்து, நெருப்பு நதிகளில் நீந்தி, தியாகத் தீயில் மூழ்கி எழும் நீண்ட பயணம்.
இது ஒரு விளையாட்டுப் போட்டியன்று. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நடத்தும் வீரப்போர்.
ரிஷி மூலம், நதி மூலம், வம்ச மூலம், சான்றோர் மூலம் எனும் நால்வகை மூலங்களாலும் அடையாளம் காணமுடியாத தமிழ் மறவர், விடுதலை வேள்வியில் தங்களை ஈகம் செய்ததால் மாவீரர்களாகி எம்முள்ளும், எம்முன்னும் ஒளிபரப்பி நிற்கின்றனர்.
இதனையே தேசியத் தலைவர் தமது வரிகளில் “தமிழீழத் தாய்நாட்டின் விடிவுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த, எமது இதயம் எங்கும் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழவேண்டுமென்ற சத்திய இலட்சியத்துக்காக எமது மாவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக் கொள்ளும் தேசிய நாள்” (2008 மாவீரர் நாள் உரை) என்று இயம்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் தன்னையும் ஒருவனாக இணைத்து 1982 நவம்பர் 27ம் நாளன்று சிங்கள இராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்தவன் லெப். சங்கர்.
தமிழீழப் போரில் முதற் பலியானவனின் நாளையே மாவீரர் நாளாக தேசியத் தலைவர் தெரிந்தெடுத்தது சிறப்பும் மகிமையும் கொண்டது.
கார்த்திகை மாதத்தை ‘அழல்சேல் குட்டம்’ என்று சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.
கார்த்திகை என்றால் அழல் என்றும் எரியென்றும் பொருள் தருகிறது. இறைவனை நெருப்பு வடிவில் உருவாகக் கொண்டு வணங்கும் தமிழர் மரபின் குறி இது.
பஞ்சபூதங்களின் வடிவில் நின்று உலகை இயக்குவதை அக்கினி ஒளியில் காண்பதே இதன் அர்த்தம்.
ஒளியூட்டும் உயரிய வழிபாட்டுக்குரிய கார்த்திகை மாதமே மாவீரர் மாதமாகி, வீரத் தியாகிகளுக்கு ஒளியேற்றும் நாளைக் கொண்டதாக அமைந்திருப்பது உத்தமமானது.
உலக மகாயுத்தங்களின்போது மரணித்த போர்வீரர்களுக்கு தனித்தனியாகக் கல்லறை அமைக்கப்பட்டதில்லை. ஒற்றை நினைவுச் சின்னங்கள் மட்டுமே அமைக்கப்படும்.
ஆனால், தமிழீழ விடுதலைப் போரில் உயிர் கொடுத்த ஒவ்வொரு மாவீரருக்கும் தனித்தனியாக கல்லறை அமைக்கப்பட்டு, அதன்மீது நடுகல் நாட்டப்பட்டு, பண்டைய தமிழர் வழிபாட்டுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழத்தின் வடக்கேயுள்ள கோப்பாயில் அமைந்த இராசபாதையில் உருவான முதலாவது மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று, 1991ம் ஆண்டு “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற மாவீரர் பாடல் முதன்முறையாக இசைக்கப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து படிப்படியாக தாயகமெங்கும் துயிலும் இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டன. விடுதலை வேண்டி நின்றவர்களின் சின்னமான இவ்வில்லங்களை எம்மக்கள் மதிப்புக்குரிய புனித இடங்களாக போற்றித் துதித்து வருகின்றனர்.
இன்று அந்த இல்லங்கள் அங்கில்லை. விடுதலைப்போர் என்ற புனிதத்தின் மகிமை அறியாத சிங்களப் பேரினவாதம் அவைகளை நிர்மூலமாக்கி, அங்கு இராணுவ முகாம்களையும் பௌத்த விகாரைகளையும் அமைத்து மகிழ்வு கொண்டாடுகிறது.
மண் மகிழ வந்து, அம்மண்ணுக்காகப் போராடி, கண் நெகிழ வித்தான மாவீரரின் விடுதலை உணர்வின் அடையாளமாக இந்த நிலம் என்றும் நிலைத்து நிற்கும் என்பதை காலம் காத்திருந்து சொல்லும்.
தாயகத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்கும் புலம்பெயர் உறவுகளைக் கூறுபோட்டு வேறுபடுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தேசியத் தலைவர் தெளிவான தீர்க்கதரிசனமாக 2007ம் ஆண்டு மாவீரர் உரையில் பின்வருமாறு தெரிவித்தார்;:
“புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளில் பலம் பொருந்திய சக்தியாக நின்று தமிழீழப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவை திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…..
சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும், அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர் மக்கள் அரசியல் போராட்டங்களையும், மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்க முடியவில்லை…..
எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்குமிடையிலான உறவுப்பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகிறது”.
தேசியத் தலைவரின் இந்தத் தீர்க்கதரிசனத்தை புரியாதவர்கள் தமிழரின் விடுதலைப் போரினது உயரிய நோக்கத்தையும் மாவீரர்களின் மாதியாகத்தையும் உய்த்துணர விரும்பாதவர்களே!
“தேச விடுதலைப் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கு எனது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர் வழியில் சென்று எமது இலட்சியத்தை அடைவோமென்று உறுதியெடுத்துக் கொள்வோமாக” என்ற தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் முக்கிய கூற்றை இதயசுத்தியோடு மனதில் பதித்து இயங்குவோமாக!