இன்று சர்வதேசமும் இலங்கை அரசும் சிங்கள பேரினவாத அமைப்புக்களும் தமிழர்கள் சிலரும் கூட இலங்கையின் இனப் பிரச்சினையை வெறும் விடுதலைப் புலிகளின் காலத்துக்குள்ளேயே நின்று ஆராய முற்பட்டுள்ளனர்.
அதாவது பல தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் எனச் சொல்லுகின்றனர். ஆனால் எம்மிடம் ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. அதாவது, தமிழர்கள் கொல்லப்பட்டதால் விடுதலைப் புலிகள் உருவானார்களா? விடுதலைப்புலிகள் உருவானதால் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா? என்பதே அது. இதற்கான பதில் மீண்டும் இலங்கையில் எழுதப்படுகின்றதா? என எண்ணத் தோன்றுகின்றது.
அதாவது தமிழ் மக்கள் மீது இலங்கையில் உள்ள சிங்கள இனவாத அமைப்புக்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகத் தீவிரமான இன ரீதியான புறக்கணிப்புகள் மற்றும் இனப் படுகொலைகளுக்கு எதிராக உருவாகிய விளைவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விரும்பியோ விரும்பாமலோ அந்த விளைவே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது.
இன்று இலங்கையில் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக உருவாக்கம் பெற்ற விடுதலைப் புலிகள் என்ற விளைவு அழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த விளைவை உருவாக்கியதற்கான காரணங்கள் இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்த நல்லாட்சியில் அது மேலும் தீவிரமடைந்து செல்வதையே காணமுடிகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இலங்கையில் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக தென்னிலங்கையில் உருவாக்கம் பெற்ற இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னர் அது வடகிழக்கிற்கு வியாபித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நாட்டில் இனவாதம் தலை தூக்கிய சம்பவங்கள் பல பதிவாகி இருந்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் என்பது மந்த கதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் விஸ்வரூபம் எடுக்கும் இனவாதம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் என்னும் விகாராதிபதி முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச காலத்தில் இருந்து தனது இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட விகாராதிபதி மட்டக்களப்பு பொங்கு தமிழ் நிகழ்விலும் உரையாற்றியிருந்தார். அப்போதெல்லாம் ஒரு மத குருவாக செயற்பட்ட விகாராதிபதி யுத்தம் நிறைவு பெற்றதற்கு பின்னர் அரசாங்கத்தினதும் சிங்கள இனவாத அமைப்புக்களினதும் பிரதிநிதியாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார். இன்று மட்டக்களப்பில் சிங்கள பௌத்த பிரகடனத்தை வெளியிட்டு வரும் விகாராதிபதி மட்டக்களப்பில் 35 ஆயிரம் சிங்கள மக்களை குடியேற்றும் வரை ஓயமாட்டேன் என பகிரங்கமாகவே கூறியதோடு அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலீஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மின்சாரசபை உத்தியோகத்தர் எனப் பலருடனும் முரண்பட்டு அவர்களைத் தாக்க முயன்ற அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இனவாத செயற்பாடுகள் கடந்த 11 ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கெவிலியாமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த பகுதியில் கடமையாற்றிய கிராம சேவையாளரை மிகவும் மோசமான தூசன வார்த்தைகளின் ஊடாக ஏசி இனவாதத்தை கக்கிய விதம் அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இனவாத முகத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளதுடன் தமிழ் மக்கள் குறித்து சிங்கள, பௌத்த தேசத்தில் உள்ள இனவாதிகள் கொண்டுள்ள மனநிலையை தெட்டத் தெளிவாக மீண்டும் பதிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் ஊடாக மிக வேகமாக பரவிய அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இனவாதம் பேச்சுக்களை கக்கிய வீடியோவானது இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியிலும் மனித உரிமை அமைப்புக்கள் ரீதியாகவும் பல நெருக்கடிகளை உருவாக்கியதுடன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. அது மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தில் விகாராதிபதியின் செயற்பாட்டை கண்டித்தும் விகாராதிபதியை கைது செய்யக் கோரியும் பிரதேச செயலகங்களுக்கு முன்னாள் அரசியல் வாதிகளும் கிராம சேவையாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்றம் வரை விகாராதிபதியின் செயற்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விகாராதிபதியை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் மீண்டுமொரு அதிரடியை விகாராதிபதி அறிவித்திருந்தார். விகாராதிபதியின் பௌத்த பிரகடனம் செங்கலடி-பதுளை வீதியிலும் விகாரை ஒன்றை அமைக்கப் போவதாக சூழுரைத்திருந்தார்.
இது குறித்து மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி கூறும் போது. தற்போது என்னைப் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் ஏன் அவ்வாறு நடக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் நான் வேண்டுமென்றே பிரச்சினையை தூண்டவில்லை. மட்டக்களப்பு-செங்கலடியில் அமைந்துள்ள ஏ5 பதுளை வீதி பிரதேசப் பகுதியில் காணப்பட்ட அநுராதபுர காலத்திற்குரிய விகாரை ஒன்று அழிக்கப்பட்டது. அதே போன்று பல்வேறு விகாரைகள் மட்டக்களப்பில் அழிக்கப்பட்டுள்ளன.
இவை பௌத்தத்திற்கு நேர்ந்த அவல நிலையாகும். இவற்றினை தட்டிக் கேட்க முற்பட்ட வேளையிலேயே என்னை இனவாதியாக சித்தரிக்கின்றார்கள். நாட்டில் பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அவல நிலை தொடர்பில் அனைவரும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால் இவை அனைத்தும் எனது இலாபங்களுக்காக நான் செய்யவில்லை. இலங்கையில் பௌத்தம் காக்கப்பட வேண்டும். அதற்காக அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். மட்டக்களப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்களை காக்க நான் முன்வருவேன். இன்னும் 5 நாட்களில் செங்கலடி ஏ5 வீதியில் நான் போராட்டம் செய்வேன். தனியாகச் சென்றேனும் நான் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.
சொன்னதைச் செய்த விகாராதிபதி சொன்னபடியே சர்ச்சைக்கு பெயர் போன மட்டக்களப்பு விகாராதிபதி கடந்த 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு-பதுளை வீதியில் அமைந்துள்ள பன்குடாவெளி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த காணியொன்றில் இருந்த அரச மரத்தடியில் அமர்ந்து கொண்டதுடன் வெளி மாவட்டத்தில் இருந்து பல சிங்கள குடும்பங்களையும் அழைத்திருந்தார்.
குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத் தலம் இருந்ததாகவும் கூறிய விகாராதிபதி அவர்கள் தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்து கொண்டதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அரச மரம் மற்றும் புராதன பௌத்த அடையாளங்கள் இருப்பதால் இந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கப் போவதாகக் கூறி அவ்விடத்தை விட்டு போகமாட்டேன் என மறுத்திருந்தார். இந்த தகவல் உள்ளுர் மக்களிடையே பரவி பிரதேச மக்கள் அங்கு ஒன்று கூடினர். இந்தப் பகுதியில் சில சிங்களவர்களும் வந்திருந்தனர்.
விகாராதிபதி காணிக்குள் உட்பிரவேசித்தது தொடர்பாக கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டு தோரருடன் பேச்சுவார்தையில் ஈடுபட்ட போதிலும் பயனளிக்கவில்லை. அங்கு வருகை தந்த தொல் பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரிகளும் விகாராதிபதியிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கருத்துக்களை அலச்சியம் செய்த விகாராதிபதி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாவட்டச் செயலாளர் குறித்த இடத்துக்கு வருகை தர வேண்டும் எனக் கூறினார்.
இதே நேரம் குறித்த இடத்துக்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமுல்படுத்தி பௌத்த பிக்கு உட்பட அனைவரையும் குறித்த காணியிலிருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும் என பொலிஸாருக்கு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பொலிசாருக்கும் பௌத்த பிக்குவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அங்கிருந்து கலைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்றனர். குறித்த பிரதேசமானது இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமான தனியார் காணி என்பதுடன் அங்கு பௌத்த விகாரை இருக்கவில்லை என்றும் முன்னர் இராணுவ முகாம் இருந்ததாகவும் இராணுவ முகாம் அமைப்பதற்கு கொண்டு வரப்பட்ட கற்தூண்களையே விகாராதிபதி பௌத்த விகாரை இருந்ததற்கான அடையாளம் என கூறிக் கொண்டு திரிகின்றார் என ஊர்ப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்து குறித்த தனியார் காணிக்குள் அத்துமீறி நுளைந்து இனக் கலவரத்தை புத்த பிக்கு உருவாக்க முயற்சித்தால் அவரை கைது செய்வதற்கான நீதிமன்றத் தடை உத்தரவை கரடியனாறு பொலீசார் ஏற்கனவே பெற்றிருந்தும் கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குவை பொலீசார் கைது செய்யவில்லை.
தனியார் காணிக்குள் அத்துமீறி நுளைந்த மங்களராமய விகாராதிபதியை பொலீஸ் அதிகாரிகள் கைது செய்யாது அவரை சமாதானப்படுத்தவே முயன்றனர். ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் கரடியனாறு பொலீஸ் அதிகாரிக்கு குறித்த காணிக்குள் பௌத்த பிக்குவும் ஏனையவர்களும் அத்துமீறி நுளைவதற்கான தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தும் அதனை மீறி பௌத்த பிக்கு செயற்பட்டிருந்தார்.
கரடியனாறு பொலீசாரின் முறைப்பாட்டிற்கு அமைய கடந்த 2016.11.16 ஆம் திகதி குறிப்பிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் மங்களராமய விகாராதிப ஈடுபடவுள்ளதாகவும் இதனால் குறித்த பிரதேசத்தில் இன வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, வீதியில் ஊர்வலமாக வருவதற்கும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் மேற்படி தனியார் காணிக்குள் அத்துமீறி செல்லவும் அக்காணியில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான வேலைகளைச் செய்வதற்கும் அல்லது சின்னம் மற்றும் மரம் நடுவதற்கும் கூட்டம் நடத்துவதற்கும் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க இலங்கை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை 106(1) பிரிவின் கீழ் நீதிமன்றின் ஊடாக பொலிஸாருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு இதனை மீறிச்செயற்பட்டால் குறித்த விகாராதிபதியை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருந்தும் பொலீஸ் அதிகாரிகள் விகாராதிபதியை கைது செய்யாது குறித்த பிரதேசத்திற்குள் உரிமையாளர் உட்பட யாரும் நுளையக்கூடாது என கூறியதுடன் அங்குள்ள கற்கல் உட்பட எதையும் உரிமையாளர் எடுக்க கூடாது எனவும் கட்டளை பிறப்பித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியதுடன் இந்த நல்லாட்சியிலும் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் என்கின்ற நிலை தொடர்வதாக குற்றம் சாட்டினர்.
இதே நேரம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதிக்கு புலம்பெயர் சமூகத்தில் இருந்து பலர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சுவிஸ், பிரன்ஸ், அவுஸ்திரோலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பலர் தன்னை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக சுமனரத்தின தேரர் பொலீசாரிடம் கூறியதுடன் பல தொலைபேசி இலக்கங்களை வழங்கி விசாரணை நடத்துமாறு முறையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் மேற்படி செயற்பாடுகளின் பின்னணியில் அமைச்சர் ஒருவரும் அரசாங்க நிர்வாக உயர் அதிகாரி ஒருவரும் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விகாராதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு குறித்த அமைச்சரே ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த அமைச்சரே அண்மையில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தி ஆர்ப்பாட்டம் நடாத்த ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் ஆதரவு தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு குறித்த அமைச்சர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச அதிகாரி ஒருவரிடம் நீங்கள் இன்று அந்த பிக்குவுக்கு 30 ஏக்கர் காணியை வழங்க மறுத்தால் பின்னர் 600 ஏக்கரை வழங்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் ஊடாக குறித்த அமைச்சர் இன முரன்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அதற்காகவே குறித்த பிக்குவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனிடம் முறையிட்ட பட்டிப்பளை கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், கடந்த(17) வியாழக்கிழமை மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதியினால் மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில் வைத்து தனக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான பயமுறுத்தலுக்கும் இனவாத நிந்தனைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவும் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோகணேசன், கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட-ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு நான் அறிவித்துள்ளேன். அதே போல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளேன் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.