பருவகாலம் என்பது இயற்கை கொண்ட ஒழுங்கமைப்பாகும். பருவகாலத்தின் ஒழுங்கில் இயற்கை தனது கொடுப்பனவை இந்தப் பூமிக்கு வழங்கிக் கொள்கிறது.
பருவகாலம் மாறி குழப்பமடையுமாக இருந்தால் எல்லாமுமே குழப்பமாகும். பருவ காலத்தில் குழப்பங் கள் ஏற்பட்டால் அஃது இயற்கையின் சீற்றமாக மாறிக்கொள்ளும்.
எனவே கோடை, மாரி என்ற பருவகாலங்கள் ஒரு ஒழுங்கு முறையில் - சீரான அசைவில் ஏற்படும் போது மனிதர்கள் உட்பட இந்தப் பூமியில் வாழக்கூடிய அத்தனை ஜீவராசிகளும் தங்கள் வாழ்க்கையை தத்தம் கால அளவுக்கேற்ப சுகமாக வாழ்ந்து முடிக்கும்.
இவை இயற்கையின் பாற்பட்ட பருவகாலம் பற்றியது. இயற்கை தன் கொடுப்பனவை வழங்குவதற்கான பருவகாலம் சில நாடுகளில் பயங்கரமாக இருப்பதும் உண்டு.
வெள்ளப்பெருக்கு, அதிகூடிய வெப்பம், மோசமான சூறாவளி என்றவாறான பருவகால ஒழுங்கீனங்கள் மனித வாழ்க்கையைச் சிதைத்துவிடும்.
இத்தகையை சிதைவிலிருந்து இன்றுவரை விடுபட முடியாத துன்பத்துக்குள் சிக்குண்டிருக்கும் மக்கள் ஏராளம்.
நம் தமிழர் தாயகத்தில் கோடை, மாரி என்ற பருவகால கட்டமைப்பு ஒரு வருடத்தின் இரு பகுதிகளாகி யுள்ளன. இந்தப் பருவகாலமே இயற்கையுடனான எங்கள் வாழ்வை தீர்மானிக்கின்றதென்பது அனை வரும் அறிந்த உண்மை.
இவை ஒருபுறம் இருக்க; கோடை, மாரி என்ற பருவகாலம் போல எங்கள் வடபுலத்தில் சில சம்பங்கள் மாறிமாறி வந்து நம்மை வதைத்துச் செல்கிறது.
இதில் களவு, கொலை, விபத்து என்பன முக்கியமானவை. விபத்து என்பது இப்போது வருடம் 365 நாட் களும் என்றாகிவிட்டது. விபத்தும் அதனால் ஏற்படுகின்ற படுகாயங்களும் இறப்புகளும் இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவில் நிலைமை வந்துவிட்டது.
வீதியில் இறங்குபவர் வீட்டுக்கு வந்தால் உண்டு என்று நினைக்குமளவில் எங்கள் மண்ணில் விபத் தெனும் கொடூரம் தடுக்க முடியாத சண்டமாருதமாக வீசுகிறது. எனவே விபத்து என்பது நாளாந்தம் நமக்கு அழிவு செய்யும் ஒன்றாகிப்போக,
கொலை, களவு என்பன இன்றைய பருவகால சீரழிவாகி தமிழ் மக்களின் வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது.
இப்போதெல்லாம் களவு மிகமோசமாக நடந்து வருகிறது. அண்மைக்காலமாக கட்டுப்பாட்டில் இருந்த களவு மீண்டும் தலைதூக்கி இருப்பதை அவதானிக்க முடியும்.
பட்டப்பகலில் நடக்கக் கூடிய இக் களவு தொடர்பில் இன்னமும் கைதுகள், விசாரணைகள் நடப்பதான தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
சிறிதுகாலம் களவில்லை என்ற நிம்மதியில் இருந்த மக்களைப் போதைப்பொருள் கடத்தலும் விபத்து மரணங்களும் உலுப்பவே செய்தன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, களவு என்ற பருவகாலம் மீண்டும் வழமை பெற்றுள்ளது.
தவிர, இடையிடையே கொலைக் கலாசாரங் களும் வந்துபோவது நாம் அறிந்ததே.
எனவே எங்கள் தமிழ் மக்களின் வாழ்வென்பது திட்டமிட்டு நம் எதிர்காலத்தை சிதைக்கின்றவர்களின் கெடுஞ் செயலால் அவதியுறுகிறது.
இதிலிருந்து விடுபடுவதென்பது சாதாரண விடயமல்ல. போதைவஸ்தைக் கட்டுப்படுத்தினால் களவு; களவை நிறுத்தினால் கொலை என்பதாக எங்கள் வாழ்வின் அவலம் தொடரவே செய்கிறது.
இதிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், பொலிஸ் பாதுகாப்பு என்பதில் எங்கள் மக்களுக்கான வகிபங்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.