கைதான இளைஞர்கள் மீது புலி முத்திரை குத்துவது நியாயமா?

ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளோரில் 11 பேரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இருவரை பிணையில் விடுவித்திருக்கின்றார்.
கடந்த இரு வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 13 பேரும் நேற்று முன்தினம் கொழும்பு நீதிமன்ற நீதிவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சிறப்பு விசாரணை அறிக்கையொன்றினை மன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
ஆவா குழுவினரின் நோக்கம் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்துவதேயாகும் என்பது சாட்சியங்களின் ஊடாக உறுதியாகியுள்ளன.
புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் நிதிப்பங்களிப்புடன் இந்தக் குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை புரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக்குழு உருவாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கூறுவதைப் போன்று புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவரோ பலரோ இந்தக் குழுவுடன் இணைந்து செயற்பட்டிருப்பினும் கூட இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை எப்படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒருவர் தண்டனை சட்டக்கோவையின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றமொன்றினை புரிந்தால் அது தண்டனை சட்டக்கோவையின் கீழேயே விசாரிக்கப்படவேண்டும்.
வாளால் வெட்டி காயப்படுத்துகின்றமை மற்றும் அச்சுறுத்துகின்றமை ஆகியன தண்டனை சட்டக்கோவையின் கீழ் உள்ள குற்றங்களாகும். அவை தொடர்பில் எப்படி பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்த முடியும்.
இந்த அடிப்படையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அடிப்படை அற்றவகையில் இந்த இளைஞர்களை கைதுசெய்துள்ளனர் என்று வாதிட்டுள்ளார்.
யாழ். குடாநாடு உட்பட வடக்கில் ஆவா குழுவின் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியிருந்தது.
கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்ததையடுத்து சுன்னாகம் நகரில் வாள்களுடன் வந்த குழுவொன்று கடையொன்றில் அட்டகாசம் செய்ததுடன் அங்கு சிவில் உடையில் பணியிலிருந்த பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு பழிவாங்கும் வகையிலேயே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக ஆவா குழு எனும் பெயரில் உரிமையும் கோரப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களும் குடாநாட்டில் இடம்பெற்றன. இதனையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ராஜித சேனாரட்ண முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த ஆவா குழு உருவாக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆவா குழு தொடர்பான சர்ச்சை தென்பகுதியில் ஏற்பட்டிருந்தது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்னவின் கருத்தினை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மறுத்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஆவா குழுவை கட்டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தப் பிரிவினரே விசாரணைகளை மேற்கொண்டு இந்த 13 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரோ இந்தக் குழுவினர் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் இவர்களுக்கு பணம் அனுப்பி வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 13 பேரில் இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய தமிழ் இளைஞர் ஒருவரும் அடங்கியுள்ளார்.
உண்மையிலேயே இந்தக் குழுவின் பின்னணியில் இராணுவத்தின் செயற்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருந்த நிலையிலேயே இராணுவத்தில் கடமையாற்றிய இந்த இளைஞனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி இந்த இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதிலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க ஆகியோர் இந்தக்குழுவினருக்கும் புலிகளுக்குமிடையில் தொடர்பு இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆவா குழு என்று செயற்படும் இக்குழுவானது கப்பம் பெறும் குழுவாகவே செயற்பட்டு வருகின்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கருத்து தெரிவித்திருந்தார்.
இதேபோல் ஆவா குழுவில் 62 பேர் இருப்பதாகவும், அதில் 38 பேர் கைதுசெய்யப்பட்டு ஆறுபேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய 32 பேர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த குழுவினர் ஒப்பந்த அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இவர்களிடம் சமூகத்தில் பயங்கரவாத நடவடிக்கைக்கான முஸ்தீபு கிடையாது.
அவர்களது கைவசம் பெருமளவு பணம் இருக்கின்றது. வெளிநாடுகளில் இருக்கின்ற உறவினர்கள் மூலமே இவர்களுக்கு பணம் வருகின்றது என்றும் அமைச்சர் சாகல ரட்ணாயக்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைவிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போது இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கு புலிகள் உள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இது தவறான கருத்தாகும். தற்போது புலிகள் என்று எவரும் இல்லை. நாம் தனிப்பட்டவர்களின் இனவாதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு குழப்பமடையக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கருத்துக்களிலிருந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் நாட்டில் முற்றுமுழுதாக இல்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது.
ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இல்லை என்று சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி தற்போது எழுகின்றது. ஆவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் தாய்மார் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றிற்கு முன்னால் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.
ஆவா குழு எனும் பெயரில் எமது பிள்ளைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களது வாழ்வையே சீரழித்து விட்டதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய வகையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு அப்பாவிகள் பாதிக்கப்படாதவகையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டி யது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila