முனிபுங்கவர் ஒருவர் நீராடுவதற்காக ஆற்றங்கரைக்கு வந்தார். ஆற்றங்கரையில் மக்கள் கூட்டம்.
தன் கையில் வைத்திருந்த கமண்டலத்தை எங்கு வைப்பது என்று சில நிமிடங்கள் முனிபுங்கவர் சிந்தித்தார்.
மண்ணைத் தோண்டி கமண்டலத்தை புதைத்து விட்டு அதன் மேல் மணலால் சிறிய கும்பம் அமைத்து அடையாளப்படுத்திவிட்டு ஆற்றில் நீராடச் சென்றுவிட்டார்.
முனிபுங்கவரின் இச்செயலைப் பார்த்தவர்கள் கமண்டலம் புதைக்கப்பட்டிருப்பதை அறியாமல் மண்ணினால் சிறிய கும்பம் செய்ததை மட்டுமே கவனித்தனர்.
அட, முனிபுங்கவர் ஆற்று மண்ணைக் குவித்து விட்டு நீராடச் சென்றுள்ளார். இந்த ஆற் றில் நீராடுவதென்றால், முதலில் ஆற்று மணலில் கும்பம் செய்துவிட்டுத்தான் நீராட வேண்டும் என்று நினைத்தனர்.
நினைத்தது மாத்திரமல்ல அவ்வாறே செய்து விட்டு நீராடுவதற்காக ஆற்றில் இறங்கினர். இப்படியே அனைவரும் ஆற்றங்கரை மணலில் கும்பம் செய்துவிட்டு நீராடச் சென்றனர்.
இப்போது முனிபுங்கவர் நீராடி விட்டு கரைக்கு வருகிறார். என்னே அதிசயம்! எங்கும் ஆற்று மணலில் சிறிய சிறிய கும்பங்கள் செய்திருப்பதைக் கண்டு திகைக்கிறார்.
தனது கமண்டலத்தை எங்கு தேடுவது எல்லாம் ஒரே மாதிரியான அடையாளம்.
தான் கொண்டு வந்த கமண்டலத்தை இழந்து வெறுங்கையோடு முனிபுங்கவர் ஆச்சிரமம் செல்கிறார்.
இந்தக் கதையை நாம் கூறும்போது இது எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் எங்களோடு தொடர்புபட்டதுதான்.
இன்றைய அரசியலில் தமிழ் மக்கள் கமண்டலத்தைப் புதைத்த முனிபுங்கவரின் நிலையில்தான் உள்ளனர்.
ஆம், மண் மீட்புப் போராட்டம் என்ற உன்னதமான வேட்கையுடன் நடந்த தியாகம் ஒன்று தான்.
அந்தத் தியாகம் இன்று எங்குள்ளது - யாரிடம் உள்ளது என்று தெரியாமல் இருக்கிறது.
முனிபுங்கவரைப் பார்த்தவர்கள் எங்ஙனம் அவர் செய்த மண் கும்பம் போல தாங்களும் செய்தனரோ அதுபோல தமிழ் அரசியலில் இருக்கக்கூடிய அத்தனைபேரும் உரிமைக்கான தியாகத்தை தங்களுக்குரியதாகக் காட்டுகின்றனர்.
ஆக, முனிபுங்கவரின் கமண்டலம் ஒரு மண் கும்பத்துக்குள்தான் இருக்கிறது. ஏனைய மண் கும்பங்களுக்குள் கமண்டலம் இல்லை.
ஆனாலும் கமண்டலம் உள்ள மண் கும்பம் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண வீச்சில் நம் தமிழ் மக்களும் அங்கும் இங்குமாகப் பிரிந்து நின்று தமக்கான உரிமையை இழந்து நிற்கின்றனர். அவ் வளவுதான்.