
இனியும் வடக்கு – கிழக்கு மக்களுக்கான மறுப்புகளும், கஷ்டங்களும் தொடர்வதை அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியிலும், அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே காணப்படுகிறது. இந்த நிலைமையை இனியும் அனுமதிக்க முடியாது.
எதிர்ப்பார்ப்புகளுடன் பல ஆண்டுகளாக காத்திருந்த மக்கள் தற்போது களைப்படைந்து விடடனர். எனவே இனியும் காலத்தை போக்காது வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
வடக்கு- கிழக்கு இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி 2017ஆம் ஆண்டில் அம்மக்களின் புனர்வாழ்வு, வீடமைப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.