ஜெனீவாவில் நடந்து வரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெற்றிருந்தது.
நவம்பர் 15, 16ஆம் திகதிகளில் நடந்த இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கு, இலங்கையில் இருந்து 11 பேர் கொண்ட குழு, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஜெனீவா சென்றிருந்தது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை தொடர்பான இணக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் அதிக பிரதிநிதிகளை ஜெனீவாவுக்கு அனுப்பியது இதுவே முதல்முறை.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்த, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட கூட்டத்தொடருக்குக் கூட, இலங்கையிலிருந்து இந்தளவு பிரதிநிதிகள் ஜெனீவா சென்றிருக்கவில்லை.
ஆனால், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் கூட்டத்தொடரில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
ஏனென்றால், இது தனியே போருடன் தொடர்புடைய விவகாரம் மாத்திரமல்ல. போருக்குப் பிந்திய தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், விமர்சனங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய ஒரு கூட்டத்தொடராக இருந்தது.
இலங்கையில் சித்திரவதைகள், கைதுகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பன போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மீளாய்வு செய்யும் கூட்டத்தொடர் இது.
இந்த மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் கட்டமைப்பில் உள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய தரப்புகள் மீது பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இப்படிப்பட்ட நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருந்தது. இன்னும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய கடமையும் அரசாங்கத்துக்கு இருந்தது.
அதைவிட, மீறல்கள் விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக இருக்கிறது. மீறல்களை கண்டுகொள்வதில்லை, மீறல்கள் தொடர்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்பவில்லை.
ஏனென்றால், அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு மற்றொரு சவால் காத்திருக்கிறது. அதைவிட, சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வரும் சூழலில், இத்தகைய குற்றச்சாட்டுகள் அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்து, ஐ.நா. நிபுணர் குழுவுக்கு விளக்கமளிக்க வேண்டியது அரசாங்கத்தின் சர்வதேச கடப்பாடாகும்.
அந்த வகையில், ஜெனீவாவில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தொடருக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து அதிகளவு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தமை ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைக் குழுவினர், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
சாட்டுப் போக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ளும் வகையில் இது இருக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, நழுவலாகப் பதிலளித்து விட்டு நகர்ந்து போகும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு, கடந்தவார ஜெனீவா அமர்வு அத்தகையதாக இருக்கவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. நிபுணர்கள், அரசாங்கப் பிரதிநிதிகளிடம் குறுக்குக்கேள்விகளை எழுப்பினர். அறிக்கைகளில் உள்ள குறைபாடுகள், தவறுகளை சுட்டிக்காட்டினர். அறிக்கைகள் விளக்கம் போதாமல் இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பினர்.
அவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விகள் ஒன்றும் மறைமுகமானதாக இருக்கவில்லை. அப்பட்டமாக, சம்பவங்களை முன்னிறுத்தி எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகள், இலங்கை அரச பிரதிநிதிகளுக்கு நிச்சயம் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து சட்டத்தரணி ஒருவர் எவ்வாறு கேள்விகளை எழுப்புவாரோ அத்தகைய பாணியில் தான், இந்த இரண்டு நாள் அமர்வு இடம்பெற்றிருந்தது.
இந்த அமர்வுக்கு, இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட குழுவில், இருந்தவர்களில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான சிசிர மென்டிஸும் அடங்கியிருந்தார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர், எவ்வாறு சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. கூட்டத்தொடரில் ஒரு அரச பிரதிநிதியாகப் பங்கேற்க முடியும் என்பதே, மனித உரிமை அமைப்புகளினது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதி இலங்கையில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் உச்சம் பெற்றிருந்த காலமாகும். இந்தக் காலகட்டத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பாக இருந்த சிசிர மென்டிஸ் எவ்வாறு சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என்று ஆர்.எஸ்.எவ். எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பும், ஜே.டி.எஸ். எனப்படும், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் கேள்வி எழுப்பியிருந்தன.
இந்தக் காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டமை என்பன போன்ற மீறல்களில் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கானவரை இலங்கை அரசாங்கம் தனது குழுவில் இடம்பெறச் செய்ததை இந்த ஊடக அமைப்புகள் கண்டித்திருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிசிர மென்டிசிடம், ஐ.நா. நிபுணர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் கோரியிருந்தன.
அதேவேளை, ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றின் அறிக்கையில், சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்று பெயரிடப்பட்டிருந்தவரை, ஐ.நாவுக்கான கூட்டத்தொடருக்கு அரசாங்கம் தனது பிரதிநிதியாக அனுப்பியது, பாதிக்கப்பட்டவர்களையும், ஐ.நாவையும் அவமதிக்கும் செயல் என்று கூறியிருந்தார், ஐ.நா. முன்னாள் நிபுணரும், மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலைவருமான யஸ்மின் சூகா.
2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் விசாரணைகளை நடத்தும் சித்திரவதை அறைகள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டத்தொடர் ஒன்றுக்கு சித்திரவதைகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டவரை அனுப்புவது அபத்தமான விடயம் என்பது அரசாங்கத்துக்கு தெரியாத விடயமாக இருந்திருக்காது.
ஆனாலும், சர்வதேச ஆதரவு தமக்கு இருக்கிறது என்ற மெத்தனப்போக்கே அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், சர்வதேச சமூகத்தையும், ஐ.நாவையும் இது போன்ற விடயங்களில் எவ்வாறு கையாண்டதோ அதே அணுகுமுறையைத் தான் தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது.
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்ட, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் 2010ஆம் ஆண்டு ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியில் அமர்த்தியது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர் அந்தப் பதவியில் இருந்தார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்ட, ஐ.நாவின் அமர்வுகளில், அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் என்று நம்பப்பட்டவரே இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்றார்.
இதுகுறித்து சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்புகள் எழுந்த போதிலும், கடைசி வரையில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
அது அரசாங்கத்தின் ஒரு வகை தந்திரமாக இருந்தது.
அண்மையில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் சுரேஷ் சாலியும் கூட, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கைத் துதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுத்துறை பல்வேறு மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர், ஐ.நாவுக்கான தூதரகத்தில் உயர் பதவியில் அமர வைக்கப்படவுள்ளார்.
ஐ.நாவை ஒரு விளையாட்டு மைதானமாக இலங்கை அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒரு பேட்டியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், அதிகாரிகள் மாறவில்லை. அதனால், மாற்றங்களை செய்ய முடியாதிருப்பதாக கூறியிருந்தார்.
ஐ.நா. விடயத்தில் அதிகாரிகள் மாத்திரம் முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்று கூற முடியாது. அரசாங்கமும், இதற்குப் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.
ஐ.நா. போன்ற பொறுப்புவாய்ந்த சபைகளை, அரசாங்கம் எந்தவுக்கு மதிக்கிறது என்பதை, இதுபோன்ற விடயங்களில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.
கசாப்புக்கடை வைத்திருப்பவரை தர்மஉபதேசத்துக்கு அனுப்புவது எந்தவகையில் பொருத்தமற்றதோ, அதுபோலத் தான், முன்னைய, இப்போதைய அரசாங்கங்களினது செயல்களும் உள்ளன.
ஆட்சி மாற்றம் என்பது, அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறையில் எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தவில்லை.