கவிஞர் முருகையன் நம் ஈழத்து மண்ணின் மிகச் சிறந்த படைப்பாளி. அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று ‘தேள் கண்டார் தேளே கண்டார்’ என்பது.
கவிதை தரும் பொருள் பற்றி மட்டும் இங்கு பேசலாம். ஒரு வீட்டில் தேள். அந்த தேளை அடிப்பதற்கு வீட்டில் இருந்தவர்களும் அயல்வீட்டாரும் ஒன்று கூடி விட்டனர்.
தேளை அடிப்பதற்கு ஆயுதம் எடு என்றார் ஒருவர். இன்னொருவர் சூள்கொண்டு வா என்றார். ஒரே களே பரம். அவ்வேளை ஒரு சிறுவன் அங்கு வருகிறான். தேள் சமாச்சாரம் அறிந்த அவன் தேளுக்கு அண்மை யாகச் சென்று பார்க்கிறான்.
உடனடியாக அந்தத் தேளை வாலில் பிடித்துத் தூக்கியபடி வருகிறான். அங்கு நின்றவர்கள் அனைவரும் அதிசயிக்கின்றனர். எப்படி இது முடியும்? என்ற வினா அந்த அதிசயிப்புக்கூடாகத் தெரிகிறது.
எனை அப்பு இது செத்துப்போன தேள் என்கிறான் சிறுவன். அப்போதுதான் வாள்கொண்டு வா! சூள் கொண்டு வா! என்ற கத்தியவர்களுக்கு வீட்டில் கிடந்த தேள் ஏற்கெனவே செத்துப்போன தேள் என்பது தெரியவருகிறது.
அட! தேளுக்கு அருகில் சென்று பார்த்திருந்தால் நிலைமை தெரிந்திருக்குமல்லவா? நாங்கள் அது பற்றிச் சிந்திக்கவேயில்லை. ஆனால் அந்தச் சிறுவன் எத்துணை கெட்டிக்காரன்...
அங்கு நின்றவர்களின் சிந்தனை இப்படியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவே கவிஞர் முருகையனின் தேள் கண்டார் தேளே கண்டார் என்ற கவிதையின் கருப்பொருள்.
இந்தக் கவிதை ஊடாக கவிஞர் சொல்லவந்த விடயம், செத்த தேளை அடிப்பதற்கு பெரியவர்கள் ஓடித் திரிகின்றனர். ஆனால் அந்தச் சிறுவனோ தேளை வாலில் பிடித்துக்கொண்டு வருகிறான்.
ஆக, இப்படியான சம்பவங்கள் நம் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு. பெரியவர்கள் சிந்திக்காமல் செயற்படும் நிலைமைகளும் இருக்கவே செய்கின்றன என்பதுதான்.
அது சரி கவிஞர் முருகையனின் கவிதை இந்த இடத்தில் எதற்கானது? என்று நீங்கள் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது.
எல்லாம் காரணத்தோடுதான். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் முன்வரைபு வருவது கண்டு நம் அரசியல் தலைவர்கள் சிலர் புளகாங்கிதம் அடைகின்றனர்.
ஆகா! புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் வந்து விட்டால் எங்கள் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அவர்கள் மகிழ்ச்சியடைவது கண்டு வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
செத்த தேளை அடிப்பதற்கு வாளும் சூளும் எடுத்த வர்கள் போல அரசியலமைப்புச் சீர்திருத்த முன் வரைபு வெளிவர இருப்பதிலேயே மகிழ்ச்சி ஆரவாரம் கொள்வோர் உண்மையில் தமிழினத்தின் - தமிழ் மக்களின் உணர்வுகளை அறியாதவர்கள் என்று அடித்துச் சொல்ல முடியும்.
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பது நாட் டில் சில ஏற்றத்தாழ்வுகளை, அதிகார எல்லைகளை சமப்படுத்துவதாக அமையுமேயன்றி அதுவே இனப் பிரச்சினைக்கான தீர்வாகமாட்டாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆத்மார்த்தமானது. தமிழர் தாயகத்தோடும் தமிழ் மக்களின் ஆழ் மனத்து உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டவை.
உயர் பாதுகாப்பு வலயத்தில் முச்சந்தியில் உள்ள அரச மரத்தின் கீழ் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற் றப்படாதவரை; பாதுகாப்பு என்ற பெயரில் படையினர் தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் வரை; இது பெளத்த சிங்கள நாடு என்று தென் பகுதியினர் மார்தட்டும்வரை ; சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க முடியும் என்று கூறுகின்ற அருவருப்பு மனநிலை இருக்கும்வரை
எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தம் வந்தாலும் இனப்பிரச்சினை தீராது. இந்த உண்மையை உணராமல் செத்த தேளை அடிக்க முற்படுவோரை என் செய்வோம் பராபரமே.