அறிஞர்கள் சிலர் நடந்து கொள்ளும் முறை கண்டு மக்கள் சமூகம் திகைத்ததுண்டு.
இத்திகைப்புக்குக் காரணம் அறிஞர் என்ற பெருமைக்குரியவர்கள் அறியாமையாக நடந்து கொண்டதுதான்.
அறிஞர் ஒருவர் தன் வீட்டில் உள்ள தாய்ப் பூனைக்கும் குட்டிப் பூனைக்கும் சிறு வீடு கட்டினார்.
அதில் இரண்டு பாதைகள் வைத்திருந்தார். ஒரு பாதை பெரியது. மற்றைய பாதை சிறியது.
அதைப்பார்த்த சிலர் ஐயா! ஏன் இரண்டு பாதைகள் என்று அவரிடம் கேட்டனர். அதற்கு அந்த அறிஞர் தாய்ப் பூனைக்கு பெரிய பாதை; குட்டிப் பூனைக்கு சிறிய பாதை என்றார்.
அறிஞரின் பதிலைக் கேட்டவர்கள் திகைத்துப் போயினர். இதென்ன! தாய்ப் பூனை போகின்ற பெரிய பாதையால், குட்டிப் பூனையும் போகும் தானே. இந்த அறிஞருக்கு இது விளங்கவில்லையா? என்று தமக்குள் நினைத்தவர்கள், சிலவேளை அறிஞரிடம் வேறு காரணமும் இருக்குமோ என்று எண்ணியபடி;
ஐயா! தாய்ப் பூனை போகின்ற பாதையால் குட்டிப் பூனையும் போகும்தானே. குட்டிப் பூனைக்கென்று தனியான பாதை எதற்கு என்று கேட்டனர்.
அப்போதுதான் அந்த அறிஞர் விழித்துக் கொண்டார். அட, பெரிய பாதையால் பூனைக் குட்டியும் போகும்தானே!
இவ்வாறாக அறிஞர்களும் சில இடங்களில் அறிவிலிகளாக நடந்து கொள்வதுண்டு.
இது ஒருபுறமிருக்க, இப்போது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் பாராளுமன்றில் காணி பற்றி அதிகமாகக் கதைப்பதைக் காண முடிகிறது.
தமிழ் மக்களின் நிலங்களை படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பது இன்று நேற்றல்ல.
எனினும் சம்பந்தர் அவர்கள் முன்பு இது பற்றி பாராளுமன்றத்தில் கதைத்தது மிகக் குறைவு.
ஆனால் கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் சம்பந்தரின் உரை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணி பற்றியதாகவே இருக்கிறது.
இதற்கு என்ன காரணம்.
ஒன்று, கேப்பாப்பிலவு-பிலவுக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டம் வெற்றி கண்டமையால்,
தங்களின் மரியாதை குறைந்து விடுமல்லவா? அதை நிவர்த்திக்க காணி பற்றிக் கதைப்பது.
இரண்டாவது முக்கிய காரணம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணியைக் கதைப்பதன் மூலம் ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் கால அவகாசத்தை தமிழ் மக்கள் கண்டு கொள்ளாமல் செய்வது.
ஆம், தாய்ப் பூனை செல்லும் பெரிய பாதை யால் குட்டிப் பூனையும் செல்லும் என்பதை அந்த அறிஞர் அறியாதிருந்தார் என்பது உண்மையாயினும் எங்கள் பெரியார் சம்பந்தர் அவர்களுக்கு, பெரிய பாதையைத் திறந்தால் சின்னப் பூனையும் போகும் என்பது நன்கு தெரியும்.
ஆம், கால அவகாசம் வழங்காமல் ஐ.நா வின் தீர்மானங்களை இலங்கை அரசு அமுல்படுத்தினால், படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்பது சம்பந்தருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் அரசைக் காப்பாற்றி ஐ.நாவில் கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்காக காணி பற்றிக் கதைத்து கால அவகாசத்தை மறைப்புச் செய்வதே அவரின் நோக்கம். ஆகையால்தான் எங்கள் அறிஞர் இப்படி யெரு நாடகம் ஆடுகிறார்.