வடக்கு மாகாண சபையில் நடக்கும் திருக்கூத்துக்களை மக்கள் நன்கு பார்த்து வருகின்றனர். வடக்கு மாகாண சபையைக் குழப்பியது, குழப்புவது யார்? என்பது மக்களுக்கு நன்கு புரியும்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல்களில் கூட்டம் கூடி முதலமைச்சருக்கு எதிராகக் கடிதம் எழுதி உறுப்பினர்களிடம் கையயழுத்து வாங்கியது முதல் சமுகமளிக்காத உறுப்பினர்களின் கள்ளக் கையெழுத்து போட்டது வரை வடக்கு மாகாண சபையைக் குழுப்புகின்ற முயற்சியில் ஈடுபடுவது யார் என்பதை தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு தடவை வெற்றி பெற்றவர்கள் தாங்களே தொடர்ந்தும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்று நினைக்கின்றனர். இந்த நினைப்பு எல்லாரிடமும் இல்லை என்பதையும் கூறித்தானாக வேண்டும்.
மிகப்பெரியதொரு யுத்த அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தங்களின் பொன்னான வாக்குகளை மன விருப்போடு அளித்தது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
யுத்தத்தில் இரண்டு கால்களையும் இழந்தவர்கள் கூட அரைந்தும் தவழ்ந்தும் வாக்களிக்கச் சென்றதைப் பார்த்து நெக்குருகாதவர்கள் இல்லை எனலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே தலைமையின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்க,
வீட்டுச் சின்னத்தில் தும்புத்தடி போட்டியிட்டாலும் வெல்லும் என்றிருந்த நிலைமையில், மாகாண சபையில் பதவியைப் பெற்றவர்கள் உளர்.
நிலைமை இதுவாக இருந்த போதிலும் இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் சிலர் கொழும்பு தமிழ் அரசியல் தலைமையின் ஏவலில் வடக்கு மாகாண சபையைக் குழப்பி, வடக்கின் முதலமைச்சரை தாமாகப் பதவி விலகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் அந்தச் சதித்திட்டங்கள் வெற்றி பெறவில்லையாயினும் தமிழ் மக்களுக்கான சேவையை வடக்கு மாகாண சபை வழங்க முடியாத அளவில் களநிலைமையை மோசமாக்கி தமிழ் அரசின் செயற்பாட்டை நாசமறுத்தனர்.
இத்தகையவர்கள் சிறிது காலம் அமைதியாக இருந்தனராயினும் இப்போது மீண்டும் வடக்கு மாகாண சபையின் இயல்பு நிலைமையைக் குழப்பத் தலைப்பட்டுள்ளனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை - உரிமையைத் தரும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகக் கூறியமைதான்.
அதாவது மேற்போந்தவாறு வடக்கின் முதலமைச்சர் கூறுவது, கொழும்பு ஆட்சியாளர்களுக்குத் தாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகும் என்ற ஏக்கம் சிரசுக்கேற, வடக்கு மாகாண சபையை மீண்டும் குழப்பும் கொடுமைத்தனம் அரங்கேறியது என்பதே நிஜம்.
அதிலும் மிக நுட்பமாக வடக்கு மாகாண சபையை கடுமையாகக் குழப்புவது பின்னர் தாம் ஒற்றுமை போல நடித்து தமிழ் மக்களை ஏமாற்றுவது என்ற கபட நாடகம் தமிழினத்துக்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகத்தனமாகும்.
எதுவாயினும் அன்புக்குரிய தமிழ் மக்களே! நீங்கள்தான் உயர்ந்த நீதிபதிகள் பத்திரிகையில் இவ்வாறு எழுதப்பட்டு விட்டது என்பதற்காக நீங்கள் இதை ஏற்க வேண்டும் என்றில்லை.
நீங்களே சிந்தியுங்கள். வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் யார் யார் எப்படி நடந்தனர், நடக்கின்றனர் என்பதை அவதானியுங்கள். நீங்கள் நீதிபதிகள். அடுத்த தேர்தலில் உங்கள் தீர்ப்புத்தான் அடுத்த மாகாண அரசிலும் இதே குழப்பமா? கூத்தா? அல்லது இந்த சபை அடுத்த சபைக்கு நல்ல பாடமா? என்பதைத் தீர்மானியுங்கள்.
உங்கள் தீர்ப்பு தெளிவாக இருக்கட்டும். தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்ற வள்ளுவனின் குறளை மன திருத்தி வடக்கு மாகாண சபையின் அமர்வுகளை முன்னோக்கியும் பின்நோக்கியும் பாருங்கள்.
நீங்கள் வழங்கும் தீர்ப்பு சிலரின் அரசியல் துறவுக்கு அடி கோலட்டும்.