கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு நாராஹேன்பிட்ட பகுதியில் வைத்து நடராஜா ரவிராஜ் இனந்தெரியாத நபர்களினால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
எனினும், இந்த கொலை வழக்கில் பல சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என ஜூரிகள் முடிவு செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஜூரிகள் சபையின் ஒருமனதான முடிவின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கொலை வழக்கில் 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் முதலாவது பிரதிவாதி உயிரிழந்து விட்டதாக வழக்கின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதனின் குழுவை சேரந்த இருவரும் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.