இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் ஒன்றிணைந்த கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் போராட்டங்களினால் அங்கு மோதல் நிலைமைகளோடு ஒரு வித பதற்ற நிலையும் ஏற்பட்டன.
குறித்த போராட்டத்தில் பொலிஸார் உட்பட இருபதிற்கும் மேற்பட்டோர் இந்த பதற்ற சூழலில் தாக்கப்பட்டும் உள்ளனர். எனினும் மோதல் நிலைமைக்கு மத்தியிலும் பலத்த பாதுகாப்புடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முதலீட்டு வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று கொண்டுதான் இருந்தது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு ஒப்படைக்கவும் 15,000 ஏக்கர் காணியை தொழில் வலயம் அமைப்பதற்காகவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கூட்டு எதிர் கட்சி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தியிருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்றுதான் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. அதன் ஒரு கட்டமாகவே அம்பாந்தோட்டை நீதவான் நீதி மன்றத்தில் எதிர்ப்பு பேரணியை நடத்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் மகிந்த அமரவீர கூட்டு அணி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு நீதி மன்றம் இரண்டு வாரங்கள் நீதிமன்ற தடை உத்தரவினை பிறப்பித்திருந்தது.
எனினும், பிரதமர் தலைமையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மோதல் இடம்பெற்று பரபரப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. அன்றைய தினம் விகாரை ஒன்றுக்கு அருகில் பிக்குகள், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டபோதே பதற்ற நிலை உச்சத்தை கண்டது.
இது இப்படி ஒருபுறமிருக்க மறுபுறம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கும் வருகை தந்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்ட வண்ணம் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கும் பேரணியினர் வந்து கல் வீச்சுக்களை மேற் கொண்டிருந்ததாகவும் இதனால் இருபக்கமும் மோதல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனை கட்டுப்படுத்த முடியாமல்தான் கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை போன்றன பிரயோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை கிலோ மீட்டர் தூரம் வரை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியுள்ளனர்.
இவ்வாறான பதற்ற சூழலிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக முதலீட்டு வலயத்திற்கான நினைவு படிகளை திறந்து வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் 20 பேரிற்கு மேல் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர்வரை இது வரை கைது செய்யப்பட்டும் இருந்தனர்.
நீண்ட கால பொருளாதார இலக்குகளை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசியல்வாதிகள் இதனை தடுக்க நினைப்பது துரதிஸ்டமான விடயமாகும்.
போராட்டம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, அது மட்டும் அல்ல தடை உத்தரவும் பிறப்பித்திருந்தது.
எனினும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த விடயம் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படும் விடயமாகும்.
தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தவே மகிந்த தரப்பினர் இவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அங்கு வந்துள்ளார்.
அவர் ராஜபக்சர்களின் கோட்டை பறி போய்விடும் என்ற அச்சத்தில்தான் அதனை தடுக்க வந்திருப்பார் என பலரினால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளிப்பதிவு ஒன்றும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் கோட்டை எனக் கூறப்படும் ஹம்பாந்தோட்டையில் இவ்வாறான பொருளாதார மையம் அமைப்பது ராஜபக்சவின் வலுவை குறைக்கும் அத்தோடு அவர் ஆட்சியின் போது நிறைவேற்றப்படாத ஒரு விடயமே இப்போது நடந்து வருகின்றது.
இந்த காரணத்தினால் தான் எதிர்ப்பு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளதாகவும் இவை நல்லாட்சியை கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி எனவும் பலர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.