வடக்கு – கிழக்கு இணைந்த, சமஷ்டி அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலான அரசியலமைப்பே வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டச் சமூக ஆர்வலர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்துக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
‘வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி அதிகாரப்பகிர்வே நாம் கோரும் அரசியல் தீர்வு, கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நடந்தேறிய சித்திரவதை மற்றும் படுகொலைகளை விசாரிப்பதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிருஸ்டியன் நோயல் இமானுவேலிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.
அரசாங்கத்திடமிருந்து தீர்வை எதிர்பார்த்து நீண்டகாலமாக காத்திருந்த தமக்கு இன்னும் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையிலேயே ஐ.நா.வை நாடவேண்டி ஏற்பட்டுள்ளதாக, ஆயர் கிருஸ்டியன் நோயல் இமானுவேல் குறிப்பிட்டுள்ளார்.