ஆசிரியர்களின் போராட்டத்தை மீறி வெளியேற முற்பட்ட செயலாளர் (சம்பவத்தால் பதற்றம்; ஆசிரியர் காயம்)


ஆசிரியர்களின் போராட்டத்தினை மீறி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தை விட்டு வெளியேற முற்பட்டதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் ஆசிரியர் ஒரு வரும் காயமடைந்தார்.

நியமனத்தின் பிரகாரம் இடமாற்றத்தினை வழங்கக்கோரி வெளிமாவட்டங்களில் 5 வருடங்களை பூர்த்தி செய்த சேவையில் உள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினம் வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன் காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் தமக்குரிய தீர்வினை எழுத்துமூலம் தருமாறு கோரி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டிருந்த போது மாலை 5 மணியளவில் செயலாளர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளார். 

தமக்குரிய தீர்வினை தராது வெளியே போக வேண்டாம் எனக் கோரி ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் செயலாளருடைய காரையும்  மறுபகுதியினர் செயலாளாரையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செயலாளருடைய காரை வழிமறித்த ஆசிரியர் ஒருவர்  காயத்துக்குள்ளானார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள் கல்வி திணைக்கள முன்றலுக்கு சென்று மறியல் போராட்டத்தினை மேற்கொண்டனர். அதன் காரணமாக செயலாளர் பிறிதொரு வழியாக வெளியேறி வேறு ஒரு வாகனத்தின் மூலம் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன் அப்பகுதியை விட்டு செல்லாமல் ஆசிரியர்கள் முற்றுகையிட்டு நின்றிருந்தனர்.  அச் சமயம் சம்பவ இடத்துக்கு வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர் சிவாஜிலிங்கம் வருகைதந்து ஆசிரியர் களுடன் கலந்துரையாடி, சுமுகமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததுடன் இன்றைய தினம் நண்பகல் 1 மணியளவில் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் குறித்த ஆசிரியர்களுக்கும் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து அதில் உரிய தீர்வினை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர். முன்னதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் முற்பகல் வேளையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila