சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் புகுந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு நீதிகோரி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் முற்பகல் 10.00 மணியளவில் சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெற்றது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆயுதந்தரித்த இராணுவத்தினரால் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர் பலர் காயமடைந்தனர்.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் படுகொலை செய்யப்பட்ட கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு ஒருதொகை இழப்பீடும் வழங்குவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது. இதில் படுகொலைசெய்யப்பட்ட கைதிகளின் உறவினர்கள் 50இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.