இந்து சமயத்துக்கு சனாதன தர்மம் என்றொரு பெயர் உண்டு.
தர்மத்தை மையமாக வைத்து வாழ்க்கை நெறியை வகுத்ததனால் இந்து சமயத்துக்கு அப்படியொரு பெயர் ஏற்படலாயிற்று.
இந்து சமயம் ஒரு கூட்டமைப்பு. இதை நாம் சொன்னால் ஐயா! உங்களுக்கு வேறு வேலையில்லையா? சனாதன தர்மம் என்று போற்றப் படும் இந்து சமயத்தை ஒரு கூட்டமைப்பு என்று கூறுகிறீர்களே! இது நீதியாகுமா? தகுமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பீர்கள்.
என்ன செய்வது கூட்டமைப்பு என்ற சொற்பதம் உங்களுக்கு வெறுப்பாகவும் கசப்பாகவும் அமைந்ததால் அப்படியொரு நினைப்பு உங்களிடம் ஏற்படலாயிற்று.
ஆனால் உண்மையில் இந்து சமயம்தான் சரியான கூட்டமைப்பு. அறுவகைச் சமயங்களை ஒன்றுபடுத்தி இந்து தர்மத்தை நிலை நாட்டுவதால் அதுவே கூட்டமைப்பு எனலாம்.
உலகில் எந்தச் சமயத்துக்கும் இல்லாத பெருமையும் சிறப்பும் இந்து சமயத்துக்கு ஏற்படக் காரணம் இந்து சமயம் தன்னகத்தே அறுவகைச் சமயங்களை உள்ளடக்கி இருப்பதாகும்.
அறுவகைச் சமயங்களும் தனித்தனியாக இயங்கவல்லவை. அந்தச் சமயங்களுக்கு தனித்தனியான முழுமுதற் கடவுளர்களும் உளர்.
அதேநேரம் கூட்டமைப்பு என்று வந்தவுடன் காத்தல், படைத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அமைச்சுகளுக்கும் பொறுப்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒற்றுமை கருதி ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுக்களை ஒருவரே பொறுப்பெடுத்து வைத்திருக்கின்ற முறைமையும் உண்டு.
இருந்தும் கூட்டமைப்பில் எல்லோருக்கும் சமத்துவம் உண்டு. நான் பெரியவன். நீ பெரியவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அனைவரும் தர்மத்தின் வடிவங்கள். தெய்வீகத்தின் தலைவர்கள். இதுவே இந்து சமயத்தின் கூட்டமைப்புக் கோட்பாடு ஆகும்.
இதை வேறு எந்தக் கூட்டமைப்புடனும் ஒப்பிட்டுப் பார்த்து விடாதீர்கள். ஒப்பிட்டால் ஆபத்தாகிவிடும்.
இது ஒருபுறமிருக்க, இந்து சமயத்தின் தத்துவங்கள், செயன்முறைகள், வழிபாட்டு ஒழுங்குமுறைகள், அன்பின் முக்கியத்துவம் என்பன பிற சமயத்தவர்களையும் வியக்க வைக்கும்.
இருந்தும் பிற சமயத்தவர்களை தம் பக்கம் வலிந்து இழுப்பது தர்மத்துக்குக் குந்தகம் என்பதால், எவர் எச் சமயத்தில் நின்றும் இறையனுபவத்தைப் பெற முடியும் என இந்து சமயம் உலக மக்களுக்குப் போதிக்கிறது.
அன்பு, இரக்கம், ஈகை, தெய்வீகப்பண்பு இவையே மனிதர்களிடம் ஏற்பட வேண்டு மேயன்றி, சமய வேறுபாடு அல்ல என்பது இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவம்.
அது சரி இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். இந்து சமயத்தில் வீடுகளுக்கு நவக்கிரக சாந்தி என்றும் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் என்றும் கிரியை முறைமை வகுக்கப்பட்டுள்ளது.
காலத்துக்குக் காலம் இக்கிரியைகளைச் செய்வதன் மூலம் மீள் சக்தி ஏற்றப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வீடுகளுக்கு நவக்கிரக சாந்தி செய்து தீயவற்றை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் வீட்டில் - வீட்டால் நல்லது நடக்கும்.
இது நாம் கட்டிய வீட்டுக்கு மட்டுமல்ல. நாம் நம்பிய வீட்டுக்கும் மிகப் பொருந்தும்.
ஆம், வீட்டுக்கு நவக்கிரக சாந்தி செய்து தீயவற்றை வெளியேற்றுவதே இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும்.