ஏவிளம்பியில் ஆரம்பித்த வன்மம் ஏவிளம்பியில் தீர்ந்து போகாதோ!


ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. துர்முகி ஆண்டின் முடிவோடு அடுத்த பிறப்பு ஏவிளம்பி.
அறுபது ஆண்டுகள் என்ற சுற்றைக் கொண்ட  தமிழ் ஆண்டுச் சக்கரத்தில் ஏவிளம்பி என்ற இப்புத்தாண்டு இதற்கு முதல் 1957 - 1958 ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்திருந்திருக்கும்.
1957 - 1958 ஆம் ஆண்டு இன்று வரை தமிழ் மக்களால் உச்சரிக்கப்படுகின்ற ஆண்டுகள்.

1958 கலவரம் என்பது உலகம் இருக்கும் வரை உச்சரிக்கப்படக்கூடியது. அந்த ஆண்டில் தான் தமிழ் மக்கள் மீது பேரினவாதம் தனது வன்மத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

அறுபது ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் இன்று வரை தமிழ் மக்கள் அந்தப் பேரினவாதத்தின் கொடும்பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
அறுபது ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டு செல்கிறது. 

ஆட்சியாளர்கள் மாறி மாறி அரியணை ஏறுகின்றனர். புத்தாண்டுகளும் தமிழ்- சிங்களப் புத்தாண்டுகளாக வந்து போகின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கான விமோசனம் இன்று வரை ஏற்படவில்லை.

ஏவிளம்பியில் ஆரம்பித்த கொடுமைத்தனம் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்பாக உச்சம் பெற்றது.

தடுப்பாரும் இல்லை தட்டிக் கேட்பாரும் இல்லை  என்பதாக தமிழினத்தின் அவலம் நீள்கிறது.
இப்போது இருக்கக்கூடிய அரசு நல்லாட்சியாம். ஆசியாவின் ஆச்சரியம் என்று விளம்பிய ஆட்சி போய், இப்போது நல்லாட்சி வந்துள்ளதாகத் தகவல்.

நல்லாட்சி என்று பெயர் வைத்தது யார்? எனக்கேட்பதற்குக் கூட ஆளில்லாமல், வைத்த பெயரை உச்சரிக்கின்ற வழமையால் இப்போது நடப்பது நல்லாட்சி எனலாயிற்று.

நல்லாட்சியில் நடக்கின்ற மக்கள் போராட்டங்கள் கொஞ்சம் அல்ல. காணாமல்போனவர்களை மீட்டுத் தாருங்கள் எனக் கேட்பவர்கள் ஒருபுறம், கேப்பாப்பிலவு போல தொடர் போராட்டம் நடத்தி எங்கள் சொந்த இடத்தில் குடியமர வழி விடுங்கள் எனக் கோரிக்கை முன்வைப்பவர்கள் மறுபுறம், படித்துப் பட்டம் பெற்று இன்று வேலையில்லாப் பட்டதாரிகள் நாம், போராட்டம் நடத்துவது தான் நமக்கு வேலை என்று வேலை கிடைக்கும் வரை போராட்டம் நடத்தும் பட்டதாரிகள் இன்னொருபுறம் இப்படியாக நல்லாட்சியில் மக்கள் போராட்டம் நடக்கிறது.

நல்லாட்சியோ நம் ஆட்சியில் ஜனநாயகப் பண்பு மலிந்திருப்பதால் தான் நீங்கள் போராட முடிகிறது என்று சொல்லி மக்களின் போராட்டத்தைக் கூட தமக்குச் சாதகமாக்கி உலக அரங்கில் விருது பெறக்காத்திருக்கிறது.

அந்தோ என் செய்வோம்! 1957 - 1958 ஏவிளம்பியில் ஆரம்பித்த வன்மம் 2017 - 2018 ஏவிளம்பியில் தீராதோ? என்ற ஏக்கத்தின் மத்தியில் இனப்பிரச்சினைக்குத்  தீர்வு தாருங்கள் என்று அரசிடம் கேட்டு; சர்வதேசத்திடம் முறையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த பிரச்சினை அறுபது நிறைவோடு முடியட்டும். இப்புத்தாண்டில் இது எங்கள் பிரார்த்தனையாகட்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila