யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் திட்டத்திற்கு மணல் அகழ்வதற்கான இடம் தெரிவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் திட்டத்திற்கு மணல் அகழ்வதற்கான இடம் தெரிவு!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் விநியோகம் மேற்கொள்ளும் அதேவேளை அதன் வருமானமும் வேலைவாய்ப்பும் அப்பகுதிக்கே கிடைப்பதனையும் உறுதிப்படுத்தப்படும்  என யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தினில் இதுவரை காலமும்  மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் விநியோகம் தடைப்பட்டமையினால் குறித்த தடை நீங்கும் வரையில் மாற்று ஏற்பாடாக புதிய இடத்தில் தற்காலிகமாக மணல் அகழ்வது தொடர்பில் இனம் காணப்பட்ட பிரதேசத்தின் பிரதேச அமைப்புக்கள், உள்ளூர்வாசிகளுடன் நேற்று முன்தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தினை அரச அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் தற்போது  இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி கட்டுமானப்  பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் இருப்பதற்காக மணல்  விநியோகம் மேற்கொள்ளும்  அதேவேளை அதன் வருமானமும் வேலை வாய்ப்பும் அப்பகுதிக்கே கிடைப்பதனையும் உறுதிப்படுத்தப்படவேண்டும். யாழ். குடாநாட்டில் மணல் விநியோகம் தடைப்படுமானால் மாவட்டத்திற்கு கிடைக்கும் வீட்டுத்திட்டமும் அபிவிருத்திகளிற்கான கட்டுமானப்பணிகள் பாதிப்படைவது மட்டுமன்றி தமது வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலமையே காணப்படும்.
இதேநேரம் மாவட்ட செயலக வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்ற 3 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைப் பகுதியாக வர்த்தகமானி அறிவித்தலைப் பிரகடணம் செய்தமையே அப்பகுதியில் இடம்பெற்ற மணல் விநியோகம் தடைப்படுவதற்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் அத் தடையை நீக்க நிர்வாக ரீதியில் நாம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். அதே நேரம் அரசியல் ரீதியாகவும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜாவும் , எம்.ஏ.சுமந்திரனும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேசத்தினை மீண்டும் வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து பெறமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக வனஜீவராசிகள் அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எமது தரப்பில் பிரதேச செயலாளரும்  நேரில் பங்கு  கொண்டு விபரங்களை வழங்கியுள்ளார். இதனால் அப் பி்தேசம் எந்த வகையிலும் மீளக் கிடைக்கும் என்றே நம்பப்படுகின்றது. இருப்பினும் அதற்குரிய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேறி வர்த்தகமானி அறிவித்தல் வரவேண்டும்.
அது சிலவேளைகளில் 3 மாதம் வரையில் செல்லக்கூடும் இந்த நிலையில் அதுவரையில் மணல் விநியோகம் இடம்பெறாமல் இருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே அம்பனையண்டிய குறித்த இடத்தில்லுள்ள உயர்ந்த திட்டியில் இருந்து இயந்திரங்களைப் பயன்படுத்தாது மனித வளங்களை மட்டுமே பயன்படுத்தி மணலை விநியோகிப்பதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் அந்தப் பகுதியில் உள்ளவர்களிற்கு வேலை வாய்ப்பினை வழங்கி மணல் விநியோகம் மேற்கொள்ளும்போது அவர்களிற்கு நிச்சயமாக தமது கிராமங்களில் அதிக அக்கறையிருக்கும் அதனால் பாதிப்பான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
அத்தோடு இங்கே கருத்துரைத்த அந்தப் பகுதியின் நிரந்தர வாசிகள் மற்றும் உள்ளூர் அமைப்புக்கள் கேட்டுக் கொண்டது போன்று ஏற்கனவே ஓர் நிறுவனம் மணல் விநியோகம் என்ற பெயரில் பாரிய குழிகள் மூலம் அப்பகுதிகளிற்கு ஆபத்தினையும் சுற்றுச் சூழல் பாதிப்பினையும் ஏற்படுத்தியபோதும் அதனை சீர் செய்யவில்லை. என குற்றம் சாட்டியிருந்ததோடு அந்தநேரம் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் கூட இதனை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ திராணியற்று இருந்ததோடு அதனை நிவர்த்தி செய்யவும் இல்லை  எனவும் உங்கள் மன ஆதங்கங்களை தெரிவித்திருந்தீர்கள்.
அந்தநேரம் அதனை தடுக்கவில்லை என்பதனை  நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இருப்பினும் அப்ப இருந்த சூழலில் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதனை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டிய நிலை இல்லை. இருப்பினும் இனியாவது அதனை அத்த நிறுவனத்தின் ஊடாக நிவர்த்தி செய்து தரவேண்டும் என்றீர்கள் அதனை ஆராய்கின்றோம். அதற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராய்ந்து அப்பகுதி மக்களிற்கும் தெரியப்படுத்தப்படும்.
எனவே குறிப்பிட்ட சில காலத்திற்கு சூழலுக்கு பாதிப்பில்லாத முறையில் மணல் விநியோகத்தில் ஈடுபட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila