அத்துடன் இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன், குறித்த செய்திக் கட்டுரையை தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக கனேடிய தமிழர் சமூக அமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனவரி மாதம் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனின் வருகையின் போது நடைபெற்ற நிகழ்வுகளில் முதலமைச்சருடன் ஒரு மாலை என்கின்ற விருந்து நிகழ்வும் ஒன்றாகும். இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதியில் முதலமைச்சரதும் அவரது குழுவினருதும் வருகை மற்றும் நிகழ்வுக்கான செலவுகள் போக மீதியானது முதலமைச்சர் முன்னெடுக்கும் மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு கையளிப்பதற்காக இந் நிதிசேர் நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந் நிதிவிடயங்களின் கணக்கு விபரங்கள் கனடிய தமிழர் சமூக அமையத்தினால் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந் நிதியானது முதலமைச்சர் அவர்களுடைய ஆலோசகர் நிர்மலன் கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை நிர்மலன் கார்த்திகேயன் தவறாகக் கையாண்டார் எனவும், அதனடிப்படையில் இலங்கையின் பணமோசடிக் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனும் தலைப்புடன் உண்மைக்குப் புறம்பான செய்திக் கட்டுரை ஒன்றை டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் (David Buell Sabapathy Jeyaraj) தனது இணைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
சமகாலத்தில், இலங்கையின் வடமாகாண சபையின் சில அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை நடவடிக்கைகள் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட இன்னும் சிலரும் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்கள்.
இவ்வாறான முதலமைச்சருக்கு எதிராக விடயங்கள் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழலில் வெளியிடப்பட்ட இச் செய்திக் கட்டுரையானது அந்தச் சூழலை மேலும் குழப்பிய ஒன்றாகவே பலராலும் பார்க்கப்பட்டது.
இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்தியைப் பிரசுரித்தமையானது முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் உட்பட இவ்விடயங்களை முன்னெடுத்து நடாத்திய சமூக அமைப்பான கனடியத் தமிழர் சமூக அமையத்தினரதும் முதலமைச்சர் வருகைக்கான ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து இயங்கிய அனைத்து அமைப்புக்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தியது.
இதனடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் சட்டநடவடிக்கை ஒன்று கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது.
இச்சட்ட நடவடிக்கையின் பரஸ்பரத் தீர்வாக டி.பி.எஸ் ஜெயராஜ் தான் இழைத்த தவறினை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருதல் உட்பட எமது நிபந்தனைகளுடன் உடன்படுவதான தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கு அமைவாக அவர் தனது இணையத்தளத்தில் தவறுக்காக மன்னிப்புக் கோருதலுடன் அத் தவறான செய்தியையும் மீளப்பெறுகின்றார்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தமது செய்திகள், ஆக்கங்கள் மற்றும் மறுபிரசுரவிடயங்களில் அவற்றை பிரசுரிக்க முன்னர், அவை தொடர்பிலான உண்மைத் தன்மையினை ஊடகதர்மம் சார்ந்து உரிய விளக்கம் பெற்று மக்களுக்கு எடுத்துச் சென்று தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
அதேவேளை, பல ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மேற்சொன்ன விடயம் தொடர்பாக எம்மை அணுகி விடயங்களின் உண்மையையும், அதன் தரவுகளையும்
பிரசுரித்திருந்தமையைச் சுட்டிக் காட்ட விரும்புவதுடன் அதற்கான நன்றியையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.