வடக்கு மாகாண அரசில் நடந்த குழப்பங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததன் காரணமாக மக்கள் குழப்பமடைந்தனர்.
அதன் வெளிப்பாடுகள் பல கோணங்களில் சீறிப்பாய்ந்ததை பார்த்தோம். ஒரு கால மணித்தியால இடைவெளிகளில் வட மாகாணம் முழுமையும் கடையடைப்பு நடைபெற்றது. முதலமைச்சருக்கு ஆதரவாகப் பேரணிகள் நடைபெற்றன.
இவற்றைக் கூறுவது முதலமைச்சருக்காக அல்ல. மாறாக தமிழ் மக்கள் முதலமைச்சர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைத் தெரியப்படுத்துவதற்காக.
அரச பணியாளர்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவே பணி செய்கின்றனர்.
அதனால்தான் பக்தி மொழியாகிய நம் தமிழ் மொழி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனக் கூறிக் கொண்டது. மக்கள் பணி என்பது இறைவனுக்கானது.
ஆகையால் பொதுப்பணி, சமூகப் பணி, சமயப் பணி செய்கின்ற அத்தனை பேரும் மக்களுக்காகப் பணி செய்கின்றனர்.
எனவே மக்கள் எங்கு நிற்கிறார்களோ! அவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ! அதில் நியாயம் இருக்கும் - நீதி இருக்கும்.
ஊர் ஓடினால் ஒத்து ஓடு. ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டல்லவா?
அதன் பொருள் மக்கள் எங்கு ஒன்றாக ஒருமித்து நிற்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பதுதான் ஏற்புடையதும் நியாயமானதாகும்.
உண்மையில் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தமிழரசுக் கட்சி ஒரு போதும் கொண்டு வந்திருக்கக்கூடாது.
மாகாண சபையின் இளம் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருக என வேகப்படுத்தினால், அதனை இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா போன்ற மூத்த - பழுத்த அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் பற்றி போதனை செய்ய வேண்டும்.
இதைவிடுத்து வீடு எரிக்கிற ராசாவுக்கு நெருப்பு கொடுக்கும் மந்திரியாக இருந்தால் நிலைமை மோசமாகுமேயன்றி சீராகாது.
தவிர, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்ததை எதிர்த்து மக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்துகின்றனர், கடையடைப்பு முழுமையாக நடக்கின்றது.
அகத்திலும் புலத்திலும் இருந்து நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுங்கள் என்ற அழுத்தம் தமிழரசுக் கட்சியை உலுப்புகிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழரசுக் கட்சியில் ஆழ்ந்தறிந்த அரசியல்வாதி இருந்திருந்தால் எமது மக்களின் கோரிக்கையை மதிக்கின்றோம். எங்கள் அரசியல் பணி மக்களுக்கானது. எனவே நீங்கள் விரும்பினால் உங்கள் தமிழரசுக் கட்சி அதனை நிறைவேற்றும்.
நீங்கள் நடத்திய பேரணிக்கும் கடையடைப்புக்கும் நாங்கள் தலைசாய்த்து மதிப்பளிக்கிறோம்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுகிறோம்.
நடந்த கசப்பான நிகழ்வுக்காக மனம் வருந்துகிறோம். தொடர்ந்தும் எங்கள் அரசியல் பணி மக்கள் பணியாக முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தால் தமிழரசுக் கட்சியின் பெருமையும் புகழும் வானுயர்ந்திருக்கும்.
என்ன செய்வது பெருந்தன்மை இப்போது குறைந்து விட்டது. பரவாயில்லை மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் முயற்சி ஒரு சுமுகமான சூழலைத் தந்தது.
இதனை தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவோம். சதா அழுது கொண்டிருக்கும் எங்கள் மக்களின் எங்கள் உறவுகளின் வாழ்வுக்காக நீதியோடும் தர்மத்தோடும் அரசியல் பணி செய்வோம் என்று உறுதி கொள்வோம்.