நல்லாட்சியின் செலுட்டுத்தனம் மகிந்தவின் மே தினத்தில் தெரிந்தது


இப்போதெல்லாம் தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் உரிமைக்கான; ஊதியத்துக்கான;  உழைப்புக்கான நாளாக இல்லாமல், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை அடையாளப்படுத்துகின்ற நாளாகிவிட்டது.

மே தினத்தில் அரசியல் கட்சிகள் நடத்து கின்ற ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் தமக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை அரசியல் கட்சிகள் காட்டுகின்ற நாளாக மே தினத்தைக் கூறிக் கொள்ளலாம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம் கலந்து கொண்டமை பலரையும் மகிந்தவை நோக்கி திசை திருப்பியுள்ளது.

நல்லாட்சி என்ற பெயரில் தேசிய அரசு ஆட்சி  செய்கின்ற வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் மே தினக் கூட்டத்தில் காலிமுகத்திடலில் அலையயன மக்கள் கூட்டம் திரண்டமை மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சி மீது எங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பதை தென்பகுதி மக்கள் காட்டுவதாகப் பொருள்படுத்தலாம். அவ்வாறு பொருள்படுத்துவது பொருத்தமானதல்ல எனில்,

ஜனாதிபதி மைத்திரி - பிரதமர் ரணில் ஆட்சியில் எங்களுக்கு திருப்தியில்லை என்பதைக் காட்டுவதற்காகவே மகிந்தவின் மே தினத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோம் என்று தென்பகுதி மக்கள் கூறுவதாகவும் பொருள்படுத்தலாம்.  

எதுஎவ்வாறாயினும் நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடந்த மகிந்த ராஜபக்சவின் மே தினக் கூட்டத்தில், அலைகடலென திரண்ட மக்களின் ஆதங்கமெல்லாம் நல்லாட்சி என்பது ஒரு ஆளுமையானது அல்ல என்பதுதான். 

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று வரை  தீர்வு காணப்படவில்லை. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் போடப்பட்ட வீதிக்குப் பின்னர் வீதி திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எதிலும் மந்த கதி; பொருட்களின் விலை ஏற்றம், திணைக்களங்கள்; அரச கூட்டுத்தாபனங்களிடம் வினைத்திறனும் இல்லை. எந்த முறைப்பாட்டுக்கும் உரிய நடவடிக்கை இல்லை.  விரைவு, வேகம் என்ற பேச்சுக்கே நல்லாட்சியில் இடமில்லை.

அரச வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும் அவற்றின் பெறுபேறுகளும் வெளிவரவில்லை. நியமனங்களும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நல்லாட்சி என்பது சேடம் இழுக்கின்ற ஆரோக்கியத்திலேயே இருப்பதாகத் தென்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

மறுபுறத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள எத்தனையோ பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கான தீர்வு முன் வைக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது.

மகிந்த தரப்புக்கு பயந்த வண்ணம் நல்லாட்சி செயற்படுவதாக இருந்தால், மகிந்தவே ஆட்சி செய்யட்டும் என்று தென்பகுதி மக்கள் நினைத்திருக்க முடியும்

ஆக, மகிந்த ராஜபக்ச­வின் மே தினக் கூட்டம் நல்லாட்சிக்கான வால் முறுக்கல். இதை உணர்ந்தால் உய்வுண்டு. இல்லையேல் அடுத்த  தேர்தலில் ஆசியாவின் ஆச்சரியம்தான் மீண்டும் ஆட்சி செய்வது தவிர்க்க முடியாததாகி விடும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila