சத்தியலிங்கம், டெனீஸ்வரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்! - ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையாம்!

 
 
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தற்போது வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள், அவை தொடர்பில் பெறப்பட்ட வாய்மூல மற்றும் ஆவண சான்றுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தற்போது வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள், அவை தொடர்பில் பெறப்பட்ட வாய்மூல மற்றும் ஆவண சான்றுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
           
இதேவேளை, விசாரணைக்குழுவினது களப்பரிசோதனையின் பொழுது பெறப்பட்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2014 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் கடைகளிலும், மருந்தகங்களிலும் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியமை, சுகாதார ஊழியர்களின் சீருடை விநியோகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் ஆகியன குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைத்தவிர 94 மாகாண வைத்தியசாலைகளுக்கான உணவு விநியோகக் கேள்வி கோரலில் நடைபெற்ற முறைகேடு, வவுனியா வைத்தியசாலை இரத்த சுத்திகரிப்பு இயந்திரக் கொள்வனவிற்காக வழங்கிய நிதியை குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமை, சுகாதார திணைக்களங்களில் பாதுகாப்பு சேவை ஒப்பந்த கேள்வி கோரலில் தவறாக நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாமையால் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனீஸ்வரனுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
நன்னீர் குளங்களில் மீன்குஞ்சு விடுவதில் பாரபட்சமாக நடந்தமை, வட மாகாணத்தில் எல்லா மாவட்டங்களிலும் வீதிகள் போடப்பட்ட போது நிதி மோசடி செய்தமை, ஒப்பந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி நிதியை சரியான முறைமையைப் பின்பற்றாது முறைகேடு செய்த குற்றச்சாட்டும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்கள் விசாரணைக்கு சாட்சியங்களுடனும் சான்றாவணங்களுடனும் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பினும், அமைச்சருக்கு எதிரான விசாரணையின் போது சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குழு விசாரணை செய்து அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா ஆகியோரின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு அமைச்சர்களும் அவர்கள் தற்போது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர்களின் ஊழல் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாகக் கடமையாற்றிவரும் அமைச்சின் செயலாளர்கள் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்கள் தகுதியானவர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila