புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைத்துப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடனும், தமிழீழத் தனியரசுக் கருத்தியலை மழுங்கடிக்கும் நிகழ்ச்சித் திட்டத்துடனும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை (இரட்டைக் கூர்வாள் எனத் தமிழில் பொருள்படக்கூடியது), சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன பதவியேற்ற கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அறிகுறிகள் அண்மைக் காலங்களில் தென்படத் தொடங்கியுள்ளன.
வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்த பொழுது பொருட் கொள்வனவிற்காகவும், சிகிச்சைக்காகவும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தின் வலையில் வீழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலை உறுப்பினர்கள் சிலரையும், மேற்குலக நாடுகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக முகமூடி தரித்து இயங்கிய றோ மற்றும் இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி நிறுவனத்தின் முகவர்கள் சிலரையும், இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து சக போராளிகளைக் காட்டிக் கொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சில முக்கிய முன்னாள் போராளிகள், முகவர்கள் போன்றோரையும் உள்ளடக்கி 2009 வைகாசி 18இற்குப் பின்னர் தொடங்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு அப்பொழுது சிறீலங்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான எஸ்.ஐ.எஸ் எனப்படும் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக விளங்கிய மேஜர் ஜெனரல் கபில காமினி கெந்தவிதாரண அவர்களே தலைமை தாங்கியிருந்தார்.
இந்நடவடிக்கையில் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளரான குகநாதன் என்ற தமிழர் காத்திரமான பங்கை வகித்தமையும், அவருக்கும் கெந்தவிதாரணவிற்கும் இடையில் பல மில்லியன் ரூபா பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றமையும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தால் 2015 தை 8ஆம் நாளிற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நிதிப் புலன்விசாரணைப் பிரிவால் சிங்கள ஊடகங்களில் கசிய விடப்பட்டமை பழைய கதை.
தை 8, 2015 நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதுமே மைத்திரி – ரணில் தம்பதிகள் செய்த முதற் காரியம், மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை சிறீலங்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருந்து நீக்கிவிட்டதுதான்.
இவ்வாறு எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பணிப்பாளர் பதவியில் இருந்து கெந்தவிதாரண நீக்கப்பட்டு, அவரது இடத்திற்கு ரணிலிற்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரியான டி.ஐ.ஜி தரத்தைச் சேர்ந்த நிலாந்த ஜெயவர்த்தன என்பவர் மைத்திரியால் நியமிக்கப்பட்டார். இவரே புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைத்தல், புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் ஆழ வேரூன்றியுள்ள தமிழ்த் தேசியப் பிரக்ஞையை மழுங்கடித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளார். இவர் ஒரு காவல்துறை அதிகாரியாக விளங்கினாலும், இவரது தலைமையிலான எஸ்.ஐ.எஸ் அமைப்பு, மைத்திரியை அமைச்சராகக் கொண்ட சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு உட்பட கட்டமைப்பாகவே இயங்கி வருகின்றது.
அதாவது இன்னொரு விதத்தில் கூறுவதானால், தலைமைச் செயலகம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பெயர்களில் புலம்பெயர் தேசங்களில் கே.பி குழுவினரால் மேற்கொள்ளப்படும் அரசியல் குழப்பங்கள், அடாவடித்தனங்களின் பின்னணியிலும், ஊடகவியலாளர்கள் என்ற முகமூடி அணிந்து தமிழ்த் தேசியக் கருத்தியலைச் சிதைக்கும் நோக்கத்துடன் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகிய தளங்களில் பெருந்தொழில் நிறுவனம் ஒன்றால் திட்டமிட்டு விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்களின் பின்புலத்திலும் மைத்திரியின் கரமே இருக்கின்றது.
2009ஆம் ஆண்டு யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பொழுதும், புலம்பெயர் தேசங்களில் மையம் கொண்டுள்ள தமிழீழத் தனியரசுக் கருத்தியல் தோற்கடிக்கப்படவில்லை என்று அடிக்கடி மைத்திரியார் புலம்பிக் கொள்வதன் சூட்சுமமும் இதுதான்.
ஆக, மகிந்தரின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிதைத்துப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடனும், தமிழீழத் தனியரசுக் கருத்தியலை மழுங்கடிக்கும் நிகழ்ச்சித் திட்டத்துடனும் சிங்களத்தால் தொடங்கப்பட்ட ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை முன்னரைப் போலவே இப்பொழுதும் தொடர்கிறது எனலாம்.
அதாவது சிங்கள தேசத்தின் ஆட்சிபீடத்தில் முதன்மையான பாத்திரத்தை வகித்த மகிந்தர், அவரது சகோதரர் கோத்தபாய மற்றும் கெந்தவிதாரண ஆகிய மும்மூர்த்திகளும் மாற்றப்பட்டு, அவர்களின் இடத்தில் மைத்திரியும், நிலாந்த ஜெயவர்த்தனவும் அமர்ந்திருக்கிறார்களே தவிர, முன்னரைப்போல் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
புலம்பெயர் தேசங்களில் தற்பொழுது மைத்திரி-ரணில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை தொடர்பான கட்டுரை ஒன்று, ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்நெற் இணையத்தில் கடந்த 04.06.2017 அன்று வெளியாகியிருந்தது. இந் நடவடிக்கையில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் ஆலோசகர்களும், இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், நோர்வேயில் வசிக்கும் தமிழ் மருத்துவர்கள் மற்றும் ஒஸ்லோ பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய சமூக மானுடவியல்துறை புலமையாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலரும் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாகத் தமிழ்நெற் இணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்நபர்கள் யார் என்ற முழுமையான விபரங்களைத் தமது கட்டுரையில் தமிழ்நெற் இணையம் வெளியிடத் தவறியிருப்பது துர்ப்பாக்கியவசமானது.
அதேநேரத்தில் நோர்வேயில் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வரும் அன்னை பூபதி கலைக்கூடம் என்ற கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை விதிக்கும் முயற்சிகளில் கே.பியின் வலது கையான சர்வே என்றழைக்கப்படும் சமூக மானிடவியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவரான தர்மலிங்கம் சர்வேந்திரா என்பவரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரும் ஈடுபடுவதும், உருத்திரகுமாரனின் ஆலோசகர் என்ற பாத்திரத்தை வகித்தவாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்இயந்திரமாக சர்வே செயற்படுவதும், இவரை மையப்படுத்தியே தமிழ்நெற் இணையத்தின் கட்டுரை வெளியாகியிருக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களைப் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும், கடனட்டை மோசடியாளர்களாகவும், பயணக்கடத்தல் முகவர்களாகவும் சித்தரித்துக் களங்கம் கற்பித்த ஐ.பி.சி பத்திரிகையின் பத்தி எழுத்தாளர்களில் சர்வேயும் ஒருவர் என்பதுதான்.
இது மட்டுமல்ல. கடந்த மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளில் வன்னியில் உதைபந்தாட்ட விழா நடாத்தி, மக்களின் எழுச்சியைத் திசைதிருப்ப முற்பட்ட கி.செ.துரை என்பவர் ஐ.பி.சி நிறுவனத்தின் டென்மார்க் பிரதிநிதியாவார். இவருக்கு கடந்த ஆண்டு ஐ.பி.சி நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கிக் கௌரவித்திருந்து. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளில் உதைபந்தாட்ட விழாவை ஏற்பாடு செய்வதற்கு முன்னோடியாக கிளிநொச்சி சென்று கே.பியை சந்தித்த இவர், பின்னர் கே.பியின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சோலை இல்லத்தில் உள்ள சிறுமிகளை பேருந்து ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்றதும், இலங்கையில் அமைதி திரும்பி விட்டது என்ற தொனியில் பின்னர் கொழும்பில் இருந்தவாறு காணொளி ஒன்றை வெளியிட்டதும் பழைய கதை.
இவை ஒருபுறமிருக்க கே.பியின் இன்னுமொரு நம்பிக்கை நட்சத்திரமான மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன் என்பவர், மீண்டும் பிரான்சில் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாகக் களமிறங்கியிருப்பதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் அமைச்சர் என்று கூறப்படுபவரான சிவகுரு சுதன்ராஜ் என்பவர் ஐ.பி.சி நிறுவனத்தின் பிரான்ஸ் இணைப்பாளராகத் திகழ்வதும் தமிழ் மக்களிடையே பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
இவை போதாதென்று ஐ.பி.சி நிறுவனத்தின் நிதிமூலமாகக் கருதப்படும் லிபரா எனப்படும் தொலைபேசி அட்டை நிறுவனம், தமது விற்பனைக் குறிப்புக்களில் தமிழ் மொழியின் குறியீடாக வாளேந்திய சிங்கக் கொடியை இணைத்துள்ளது. இவ்வாறான குறிப்புக்கள் பிரித்தானியா போன்ற நாடுகளில் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றன. தமிழர்களின் உடலில் சிங்களக் குருதி ஓடுகின்றது என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் அனைத்துலக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும் கடந்த எட்டு மாத காலப்பகுதியில் ஐ.பி.சி நிறுவனத்தின் தொலைக்காட்சி, பத்திரிகை ஆகியவற்றில் ஆக்கங்கள் வெளிவந்தமை தற்செயலான சம்பவங்கள் அல்ல என்ற கருத்தையே இவை தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன.
2015 ஆவணி மாதம் ஐ.பி.சி நிறுவனத்தை விட்டு வெளியேறும் பொழுது, அதன் தொலைக்காட்சிப் பரிவர்த்தனைப் பேழைகளிலும், விளம்பரங்களிலும் வாளேந்திய சிங்கக் கொடிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது என்பதுதான் அதன் பணியாளராக விளங்கிய சுப்ரமணியம் பரமேஸ்வரன் என்ற அறப்போர் செயற்பாட்டாளரின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. அதனை அப்பொழுது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதேபோன்று 2015 ஆடி மாதம் யேர்மனி கம் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் பொழுது கட்டப்பட்டிருந்த லிபரா நிறுவனத்தின் பதாகைகளில் வாளேந்திய சிங்கக் கொடி பொறிக்கப்பட்டிருந்ததும், அவற்றை இன்னுமொரு அறப்போர் செயற்பாட்டாளரான கோபி சிவந்தன் அவர்கள் கிழித்தெறிந்ததும் பழைய கதை. அப்பொழுது அங்கு நின்ற லிபரா நிறுவனத்தின் முன்னணிப் பணியாளரும், ஐ.பி.சி நிறுவனத்தின் நெடுநாள் ஊடகவியலாளராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்பவருமான பரா பிரபா என்பவர் சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட பதாகை கட்டப்பட்டமைக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். எனினும் தற்பொழுது பிரித்தானியா போன்ற நாடுகளில் விநியோகிக்கப்படும் லிபரா நிறுவனத்தின் விற்பனைக் குறிப்புக்களில் தமிழ் மொழியின் குறியீடாக வாளேந்திய சிங்கக் கொடி பொறிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகக் கூறுவதானால், ஒருபுறத்தில் நோர்வேயில் அன்னை பூபதி கலைக்கூடம் என்ற கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் சர்வே என்றழைக்கப்படும் கே.பியின் வலது கையாள் ஈடுபடுகின்றார். இவர் ஐ.பி.சி பத்திரிகையின் பத்தி எழுத்தாளராகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் பின்இயந்திரமாகவும் திகழ்கின்றார். மறுபுறத்தில் கிளிநொச்சி சென்று கே.பியை சந்தித்து அவருடன் நல்லுறவைப் பேணும் நபர் டென்மார்க்கில் ஐ.பி.சியின் பிரதிநிதியாகச் செயற்படுகின்றார். இவை போதாதென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலின் அமைச்சர் என்று கூறிக்கொள்பவர் பிரான்சில் ஐ.பி.சியின் இணைப்பாளராகத் திகழ்கின்றார். இவருக்குப் பக்கபலமாக கே.பியின் நம்பிக்கை நட்சத்திரமான மனோ திகழ்கின்றார். இவையெல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மொழியின் குறியீடாக வாளேந்திய சிங்கக் கொடியை ஐ.பி.சியின் நிதிமூலமான லிபரா நிறுவனம் முன்னிறுத்துகின்றது. இவையெல்லாவற்றையும் பார்க்கும் பொழுது டான் தொலைக்காட்சியின் பணிப்பாளரான குகநாதனைப் பயன்படுத்தி 2015வரை கெந்தவிதாரண முன்னெடுத்தமை போன்ற ஏதாவது நடவடிக்கையை தற்பொழுது எஸ்.ஐ.எஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான நிலாந்த ஜெயவர்த்தன முன்னெடுக்கின்றாரா? என்ற சந்தேகமே பலரிடம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பலில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் கே.பியின் வலது கையான சர்வே ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவி வகிக்கும் இந்திய ஐ.பி நிறுவனத்தின் முகவரான உருத்திரகுமாரனை அடுத்த ஆண்டு முற்பகுதியில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு வாழ்நாள் ஆயுட்காலத்தைக் கொண்ட தலைமை நிறைவேற்றுனர் என்ற கௌரவ பட்டத்தை வழங்கி விட்டு, பிறிதொரு நபரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கான ஆலோசனைகளில் சர்வே அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதிலும் கேலிக்கூத்தான பிரதமர் பதவியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கும், அதன் மூலம் இவ்வாறான தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கும் பொழுது சிங்களத்தின் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை இனிவரும் மாதங்களில் புதிய வடிவத்தை எடுக்கப் போகின்றது என்பதை உறுதியாக எதிர்வுகூற முடியும்.