தாயக விடுதலைக்காக சாவினை தழுவிய மாவீரர்களின் கனவுகளை காற்றில் பறக்கவிட்டு, அவர்களது உருவப்படங்களுக்கு அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படுகின்ற எந்த அஞ்சலிகளையும் அந்த ஆன்மாக்கள் ஏற்றுக்கொள்ளாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஆரம்ப கால களச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இலங்கை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளரும்,
யாழ்.இந்து கல்லூரியின் மாணவனுமான தியாகி பொன்.சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அவரது சொந்த ஊரான உரும்பிராயில் அமைந்துள்ள உருவச்சிலை அருகே பிற்பகல் ஐந்து மணியளவில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும் போதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மேற்குலகத்தின் கைப்பொம்மை ஒன்று ஆட்சி பீடம் ஏறிய பின்னர் போர்க் குற்றங்களை மேற்கொண்ட ராஜபக்ஷவை விசாரிக்காமல் கைவிடுவதற்காக உலக நாடுகளும், இந்த அரசும் - தமிழ் தலைமைகளும் கூட்டாக இணைந்து நினைவு கூரல் போன்றவற்றை நடத்துவதற்கு ஓரளவுக்கு இடமளி ப்பதன் மூலம் ஏதோ இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது போன்று காட்டி ஏமாற்றும் நடவடிக்கையில் அனைத்து தரப்பும் ஈடுபட்டுள்ளது.
ஆகவே நாங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், இந்த நினைவு கூரல்கள் என்பது எமக்கு முக்கியமானது தான். ஆனால் இவர்கள் தங்களுடைய உயிர்களை எந்த இலட்சியத்தை வரித்து கொண்டு தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு படத்தை வைத்து மாலை அணிவித்து கூட்டங்கள் நடத்தி அரசியலை வளர்த்து கொள்கின்றார்கள் தமிழ் தலைமைகள்.
விடுதலை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்த போது தமது இலட்சியங்களை ஈடேற்றி கொள்ளுங்கள் என்பது தான் பிரதானமான அவாவாக இருந்தது. ஆகவே கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் சரியாக செயற்பட வேண்டும். இந்த நினைவு கூரலுக்கான அங்கீகாரம் என்பது எமக்கு அனைத்துமே கிடைத்து விட்டது என்று பொருள்படாது. சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எமது உரிமைகளை வென்றெடுப்பதே உண்மையான அங்கீகாரமாகும். உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக இந்த அரசினாலும், தமிழ் தலைமைகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு சதிதான் இவை என்பதனை நாங்கள் விளங்கி கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இருந்து கொண்டு எமது உரிமையை வென்றெடுப்பதாக உறுதி கொண்டு பயணிக்க வேண்டும். அதுதான் இலட்சியங்களுக்காக மடிந்த அனைத்து மாவீரர்களுக்கும் நாங்கள் செய்யும் அஞ்சலியாகும்.
பல்லாயிரம் இளைஞர்கள் தாம் வாழ வேண்டிய வயதில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். இந்த தேசத்தில் எமது மக்கள் பாதுகாப்பாகவும் சுய கௌரவத்துடனும் வாழக்கூடிய போது எமது தேசத் தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற போது தான் எமது மாவீரர்களின் கனவு ஈடேறும். அதனை நோக்கியதாக நாங்கள் பயணிப்போம் என கஜேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.