வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சர்களின் இடத்துக்கான புதிய நியமனம், எஞ்சியுள்ள இரண்டு அமைச்சர்களின் மீதான புதிய விசாரணையும் அதன் தீர்ப்பும், நடுநிலை தவறிய அவையின் அக்கிராசனர் சி.வி.கே.சிவஞானம் மீதான நம்பிக்கையீனம், சுமந்திரனும் மாவையரும் நிர்வாகத்துள் மூக்கை நுழைக்கும் தேவையற்ற செயற்பாடுகள் போன்றவை எதிர்காலத்துக்கான சவால்கள்.
இந்த மாதம் 14ம் திகதி வடமாகாண சபையில் மையங்கொண்ட சூறாவளி, சுழன்றடித்து இடைக்கிடையே அலையெழுப்பி புயலாக மாறி, இறுதியில் 21ம் திகதி தாழமுக்கம் குறைந்து அடங்கி (?) விட்டதாக செய்திகள் சொல்கின்றன.இரண்டு யானைகள் மோதினால் நிலத்துக்குத்தான் சேதம் என்று சொல்வார்கள். ஆனால், விக்கி-சாம் என்ற இரண்டு தலைகளின் மோதலில் யார் வென்றதென்று சரியாகத் தெரியவில்லை. அந்த நிலத்துக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டதென்பதைக் கண்டறிய சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் கேட்டவாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், கல்வியமைச்சர் குருகுலராஜாவும் பதவி துறந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சருக்கு ஊடாக ஐங்கரநேசனுக்கு இலக்கு வைத்த அம்பு, அப்படியே தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான குருகுலராஜாவையும் பதம் பார்த்தது, அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது.
ஆனால், டெனீஸ்வரனின் பதவி பறிபோனதையிட்டு ரெலோ தலைமைப்பீடம் கவலை கொள்ளவில்லை. புதிய அமைச்சரவை நியமனத்தின்போது அவரது இடத்தை நிரப்ப தங்கள் கட்சிக்கு ஓரிடமுண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஐங்கரநேசன் விடயத்திலும் அப்படியான நிலைப்பாடுதான் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரே~; பிரேமச்சந்திரனுடையது. தமது சகோதரர் சர்வேஸ்வரனை ஐங்கரநேசன் இடத்துக்கு நியமிக்கலாம் என்பது இவரது திட்டம்.
கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சியினரும் இப்படியாக நினைத்துக் கொண்டிருக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்மொழிந்த தமிழரசுக் கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.
மாவையரின் தெரிவு சி.வி.சிவஞானம். சுமந்திரனின் தெரிவு சத்தியலிங்கம். இருவரும் இதனை வெளியில் காட்டிக் கொள்ளாது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு உறுப்பினர்களின் ஒப்பந்தங்களை சேகரித்தனர்.
சுமந்திரன் அணியைச் சேர்ந்த சயந்தனும், ஆர்னோல்டும் அவையின் அக்கிராசனர் சி.வி.கே.சிவஞானத்திடம் பிரேரணையைக் கையளித்து ஆளுனரிடம் கொடுக்கும் பணியை ஒப்படைத்தனர்.
தம்மை முக்கிய பிரமுகராக சுமந்திரன் அணி கருதுவதாக நினைத்து அவரும் பிரேரணையை எடுத்துச் சென்று ஆனந்தமயமான பளீர் சிரிப்புடன் ஆளுனரிடம் கையளித்தார்.
அடுத்த முதலமைச்சர் தாமே என்பதுவே இவரது ஆனந்தச் சிரிப்புக்கு காரணம்.
பிரேரணையைக் கையளித்துவிட்டு தமிழரசுக் கட்சி அலுவலகம் திரும்பியதும் சிவஞானம் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒப்பமிட்டவர்களில் பலரும் சத்தியலிங்கத்தையே முதலமைச்சராக்குவதாக கூட்டம் போட்டுக் கூறிக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் விரும்புவதால் முதலமைச்சர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்வதாக சத்தியலிங்கம் கூறக்கேட்ட சிவஞானம், முகம் வாடியவராக தமது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
மறுநாள் தம்மைச் சந்தித்த நெருக்கமானவர்களிடம், தாம் பலிக்கடாவாக்கப்பட்டுவிட்டதாக சிவஞானம் வேதனையுடன் தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, 16ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வெளிநாட்டுத் தமிழ் வானொலி ஒன்றுக்கு சத்தியலிங்கம் சுமார் 75 நிமிடங்கள் செவ்வி ஒன்றை வழங்கினார்.
உணர்ச்சிவசப்பட்ட கருத்துகள், அரைகுறை விளக்கங்கள், முன்னுக்குப் பின் முரணான பல குணாம்சங்களை உள்ளடக்கியதாக இவரது கருத்துகள் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
தம்மீது சுமத்தப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தாம் தற்கொலை செய்யத் தயார் என்று ஒரு கட்டத்தில் கூறினார்.
இப்படியாக உணர்ச்சிவசப்படுபவர் எவ்வாறு மருத்துவராகப் பணியாற்றினார் என்று நேயர் ஒருவர் நியாயமான கேள்வியைக் கேட்டார்.
வெளிநாட்டில் சென்று படித்துவிட்டு, டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் தாம் ஒருவர் மட்டுமே நாடு திரும்பிச் சேவையாற்றியதுபோல படம் ஒன்றைக் காட்டி அனுதாபம் தேட முயன்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பொல்லனறுவப் பிரதேசத்தில் வைத்தியராகக் கடமையாற்றியபோது, இப்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் உறவினர்களுக்கு தாம் வைத்தியம் செய்ததாகவும், அதனால் ஜனாதிபதிக்கு தம்மை நன்கு தெரியுமென்றும் ஒரு தகவலை வெளியிட்டார்.
முதலமைச்சரும் தாமும் அப்பா – மகன் போன்றே இணைந்து செயற்படுவதாக ஒரு தடவைக்கு மேல் சத்தியலிங்கம் தெரிவித்தபோது, இடைமறித்த ஒலிபரப்பாளர் “அப்படியானால் ஒரு சில மணித்தியாலத்துள் அப்பாவுக்கு எதிராக மாறி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எவ்வாறு ஒப்பமிட்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
“நானும் மனிதன். உணர்ச்சி வசப்பட்டுச் செய்திருக்கலாம். சிலவேளை இப்படியாகச் செயற்பட்டது தவறாகவும் இருக்கலாம்” என்ற சத்தியலிங்கத்தின் பதிலைக் கேட்டபோது வானொலியை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இப்படியாக அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவரை எப்படி அமைச்சராக நியமித்தார்கள் என்ற கேள்வி அன்று பலர் மனதிலும் எழுந்ததில் நியாயமுண்டு.
சத்தியலிங்கம் இந்த வருட முற்பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள கனடா வந்திருந்தபோது, அவர் அப்பாவாக மதிக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் வேறு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தார்.
அவ்வேளை சத்தியலிங்கம், குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடினார். அச்சந்திப்பில் அப்பா – மகன் கதையை பல தடவை கூற அவர் தவறவில்லை. ஆனால் அவரும் முதலமைச்சரும் கனடாவில் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாகப் பங்கேற்கவில்லை.
சத்தியலிங்கமே அடுத்த முதலமைச்சரென்று அவரைக் கனடாவுக்கு அழைத்த குழுவிலுள்ள ஒருவர் மறைமுகமாக ஊடகவியலாளருக்குத் தெரிவித்ததை இப்போது நினைக்க வேண்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் முதலமைச்சருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எழுப்பிய பிரதேசவாதமும் இங்கு நோக்கப்பட வேண்டியது.
ஆக, தமிழரசின் சுமந்திரன் அணியினர் விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கி, சத்தியலிங்கத்தை அப்பதவியில் அமர்த்த பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தனர் என்பதை நன்கு ஊகிக்க முடிகிறது.
எனவே, ஒரு மாதத்துக்கு அமைச்சர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு முதலமைச்சர் கேட்டதால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது என்பது தவறாகும்.
வடமாகாணசபை முதல்வர் பதவிக்கு தேர்தலுக்கு முன்னரே கண் வைத்திருந்தவர்கள் மூவர். மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், மற்றொரு தமிழ் பத்திரிகையாளர் ஆகியோரே இந்த மூவர்.
இப்போது தமிழரசு மட்டும் தனித்து நின்று அவரை அகற்ற எடுத்த முயற்சிக்கு மற்றைய மூன்று அணியினரும் ஆதரவு வழங்கவில்லை.
நல்லை ஆதீனம், யாழ். ஆயர் ஆகியோரின் அர்ப்பணிப்பான தலையிடும், மக்களின் தன்னெழுச்சிக் கடையடைப்பும் பேரணியும் தமிழரசுக் கட்சியை நிலைகுலையச் செய்தது.
தமக்கு ஆதரவாக ஒரு சிறு பேரணியைக்கூட தமிழரசால் ஏற்பாடு செய்ய முடியாது போனது பெரும் தலைகுனிவும் ஏமாற்றமும்.
எதிர்பாராத வகையில் ஓர் இணக்கம் ஏற்பட்டுள்ளது. வெளித்தோற்றத்தில் பனிப்போர் முடிந்ததாகப் பார்க்கினும், உள்ளே முறுகல் நிலை நீறுபூத்த நெருப்பாகத் தெரிகிறது.
வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சர்களின் இடத்துக்கான புதிய நியமனம், எஞ்சியுள்ள இரண்டு அமைச்சர்களின் மீதான புதிய விசாரணையும் அதன் தீர்ப்பும், நடுநிலை தவறிய அவை அக்கிராசனர் சி.வி.கே.சிவஞானம் மீதான நம்பிக்கையீனம், சுமந்திரனும் மாவையரும் நிர்வாகத்துள் மூக்கை நுழைக்கும் தேவையற்ற செயற்பாடுகள் போன்றவை எதிர்காலத்துக்கான சவால்கள்.
இவையனைத்தையும் உள்மறைத்தவாறு 22ம் திகதிய வடமாகாண சபையின் அமர்வு தென்றலாகவும் கூடலாகவும் காட்சியளித்தது என்று ஊடகங்கள் எழுதுவதை உண்மையென்பதா, நடிப்பென்பதா?
கீறல் விழுந்த கண்ணாடி மேலும் மேலும் வெடித்துச் செல்வதுதான் இயற்கை.
கிளறுபட்ட வடமாகாண சபைக்குள் பச்சை மண்ணும் காய்ந்த மண்ணும் எவ்வாறு ஒட்டி நின்று செயற்படப் போகின்றன?