வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தவறு செய்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களுக்கு எதிராக எவ்விதமாக நடவடிக்கையை எடுக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, அதில் வெற்றி பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகுத்த தந்திரோபாயங்களில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற வகையிலேயே ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியினர் கோரிக்கை முன்வைத்தனர். இன்னொரு சாரார் பத்திரிகையாளர் வித்தியாதரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறு பலரின் கோரிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நோக்கி முன்வைக்கப்பட்ட போதும் அவர்களில் யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை வெற்றிக்கான தந்திரோபாயமாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் கருதவில்லை.
வடக்கு மாகாண சபையை தலைமை ஏற்று நிர்வகிக்கக்கூடிய ஒருவர் தேவை. அத்தகைய ஒருவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், அவரை மக்கள் புதிய முகமாகப் பார்ப்பார்கள். நம்பிக்கை வைப்பார்கள், வாக்களிப்பார்கள், கொழும்பு அரசியல் தலைவர்களுக்கும், சர்வதேச அவதானிகளுக்கும் புதிய பார்வை ஏற்படும் என்ற அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன.
வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை உணர்ந்து கொண்டபோதும் அரசியல் பதவிகள் மீதும், அரசியல் சுகபோகங்கள் மீதும் பற்று இல்லாத காரணத்தினால், அரசியல் பக்கம் தனக்கு ஆர்வம் இல்லை என்று விக்கினேஸ்வரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவரை நோக்கி பல தரப்பினராலும் கொடுக்கப்பட்ட அன்பான அழுத்தங்கள் காரணமாகவும், தனது ஓய்வு காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தனது பணியை செய்ய வேண்டும் என்றும் காலத்தின் கட்டாயத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மனத் திருப்தியும் விக்கினேஸ்வரனை அரசியல் சார்ந்து சாதகமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு உந்தியது.
அரசியல் தளத்திற்கு வருவதாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையாக அந்த அழைப்பை விடுத்தால் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கத் தயார் என்று கூறினார். அதைத்தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் ஒற்றுமையாக அழைப்பதாக சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வந்தார்.
தேர்தல் மேடையில் தமிழ் மக்களுக்கு என்ன வாக்குறுதியை வழங்குவது என்பதைப் பற்றிய தெளிவுகூட இல்லாதவராக இருந்தபோது, விக்கினேஸ்வரனை காட்சிப்பொருளாக இருக்கச் செய்து, தமிழ்மக்களுக்கு பல கதைகளைக் கூறினார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
அவற்றில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருந்தால், சர்வதேச சமூகத்திடம் தனது சட்ட அறிவைக்கொண்டு தமிழ்மக்களுக்கு நீதிகேட்டுப் போராடுவார் என்றார்கள். இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கான நீதியையும் அரசியல் உரிமை மறுப்புக்கான சட்டச் சவால்களையும் தனது சட்ட அறிவைக் கொண்டு வென்றெடுப்பார் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறினர்.
நீதிவான் ஒருவர் புதிய நிர்வாக சபையான வடக்கு மாகாணசபை நிர்வாகத்தை பொறுப்பேற்கும் போது அதை பொறுப்பாகவும், சிறப்பாகவும் செயற்படுத்துவார் என்று தமிழ் மக்களும் நம்பினார்கள். 2013 செப்ரெம்பர் 22ஆம் திகதி மாகாண சபையை பொறுப்பேற்றதிலிருந்து நியதிச் சட்டங்களை உருவாக்குவது, அதிகாரிகளை ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வருவது, மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுப்பது என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனாலும் அரசியல் முதிர்ச்சியும், அதற்குள் இருக்கும் நெழிவு சுழிவுகளும் முதலமைச்சரின் சட்ட அறிவுக்கு சவால் விடுத்தது. அந்தச் சவால்களை எதிர்கொள்வதே முழு நேர வேலையாகிப்போனது. முதலமைச்சரின் இந்த தடுமாற்றங்களையும், அனுபவமின்மையையும் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகள் தம் மனம் போன போக்கில் காரியங்களை செய்தார்கள். மாகாண அமைச்சர்கள் வாக்களித்த மக்களுக்கு தாம் பொறுப்பாளிகள் என்பதை மறந்தும், அரசியல் அதிகாரத்தின் வரம்புகளை மறந்தும், அதிகார துஸ்பிரயோகங்களிலும், ஊழல் மோசடிகளிலும் சுதந்திரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பாக வாக்களித்த மக்கள் குற்றச்சாட்டுக்களையும், முறைப்பாடுகளையும் முன்வைக்கத் தொடங்கினார்கள். மக்களின் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் புறக்கணிக்க முடியாத நிலையில் முதலமைச்சர் விசாரணைகள் முன்னெடுப்பதற்கு துணிந்தார்.
மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொருத்தமான குழுவை அமைத்தது போல் வடமாகாணத்தில் தான்தோன்றித் தனமாகவும் பொறுப்பற்றும் செயற்படும் சில அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விசாரணைக் குழுவை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் இன்று மாகாண அமைச்சர்களின் குற்றங்கள் விசாரணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது போல், சில அரச அதிகாரிகள் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அதிகார துஸ்பிரயோத்தில் ஈடுபடும் கறுப்பு ஆடுகளாக செயற்படும் சில அதிகாரிகளின் முகத்திரைகளும் கிழிக்கப்பட்டிருக்கும்.
ஏனென்றால் அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்றால் அவற்றிற்கு சில அதிகாரிகளும் துணை போய் இருக்கிறார்கள் என்பது சர்வ நிச்சயமாகும். இவ்விடயத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் அமைச்சர் ஐங்கரநேசனும், குருகுலராஜவும் தம்மீதான குற்றங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் வாக்களித்த தமிழ் மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது. அதே போல் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாக பதில் அளிக்கவும் மக்களுக்கு நியாயத்தை வழங்கவும் தமக்கிருக்கும் பொறுப்பை தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைமைகள் தட்டிக்கழித்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாகாண அமைச்சர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்பது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தடுமாற்றத்திற்கும், புறநிலை அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளார். தனது தவறையும், தனது சகாக்களின் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு ஒரு தீர்வை முன்வைப்பதா? அல்லது குற்றமிழைத்த அமைச்சர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதா? அல்லது இவை எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பித்து தொடர்ந்தும் மாகாண சபையை நடத்துவதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
‘ஏறச் சொன்னால் எருதுக்கு கோவம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோவம்’ என்ற நிலையில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் முதலமைச்சர் பலதரப்புக்களோடும் ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார். எது எவ்வாறாக இருந்தாலும் தன்னை ஒரு நீதிவானாகவே வெளிக்காட்டி வரும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்விடயத்தில் அரசியல் இலாப நட்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்கமால் குற்றவாளிகள் என்ற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எது தண்டனையோ அதை மனச்சாட்சியின் அடிப்படையில் வழங்கி தனது நீதி அறிவை நிலைநாட்டுவார் என்றே எதிர்பார்க்கலாம்.
நீதி தவறிய ஒருவர் என்ற அவப்பெயரை சுமப்பதற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒருபோதும் தயாரில்லை. அவ்வாறு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படுமாக இருந்தால் அதில் நீதியா? அரசியலா? என்பதை சீர்தூக்கிப் பார்த்து நீதியே என்ற தீர்மானத்தை எடுக்கும் மனோ தைரியம் விக்கினேஸ்வரிடம் அதிகமாகவே உண்டு.
அரசியல் பேசத் தெரியாமல் அதன் நெழிவு சுழிவுகளுக்கு தன்னை வளைக்கத் தெரியாத காரணத்தினால் தன்னை முதலமைச்சராக்கிய தலைமைகளோடு ஒத்துப்போக முடியாமலும், மாகாணசபைக்குள் தனது சகாக்களுடன் ஒத்தோட முடியாமலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அரசியல் பயணத்தை தொடர்வதா என்பது குறித்தும் தனது நலன் விரும்பிகளுடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.
- ஈழத்து கதிரவன் -