மூதூர் பெருவெளி பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் பிணையில் செல்வதற்கு மூதூர் நீதி மன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மூதூர் நீதிவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த விசாரணையின்போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஆறு சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவத்தை அடுத்து ஐவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த சந்தேகநபரையே சாட்சியமளிக்கவந்த சிறுமிகள் நேற்று அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் ஆறுபேர் சார்பில் எட்டு சட்டத்தரணிகள் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஏழு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சாலியும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் சட்டத்தரணி ஸ்டெனிஸ்லஸ் செலஸ்டின் ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர். பொலிஸார் தரப்பில் மூதூர் பொலிஸ் நிலைய அதிகாரி ஆஜராகியிருந்தார்.
இதன்போது இரண்டாவது அடையாள அணிவகுப்பை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதற்கிணங்க அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சாட்சிகளாக அழைக்கப்பட்ட இரு சிறுமிகள் அடையாளம் காட்டினர். அடையாள அணிவகுப்பை அடுத்து விசாரணை இடம்பெற்றபோது சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்கவேண்டும் என்று அவர்களது சட்டத்தரணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேகநபர்கள் ஆறுபேரையும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் சந்தேகநபர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் பணித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரான முகஹமட் ஹனிபா றியாத் என்பவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை அடுத்து கடந்த 5 ஆம் திகதி முதலாவது அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அடையாள அணிவகுப்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் ஆஜராக்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் இவர்களை அடையாளம் காட்டவில்லை. இதனையடுத்தே ஆறாவது சந்தேகநபரே நேற்றைய அடையாள அணிவகுப்பில் முன்னிறுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை இந்த வழக்கு விசாரணையை குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறும் நீதிபதி கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு கட்டளைப்பிறப்பித்ததுடன் அடத்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண அமைச்சர் சி. தண்டாயுதபானி, உறுப்பினர்களான ஜனா கருணாகரன், நாகேஸ்வரன், பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை உட்பட பலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.