பெண்கள் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள், யாழ். மாவட்ட அரச அதிபர், அரச உயர் அதிகாரிகள் கவனத்திற்கு,
யாழ். பஸ்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் தலை தூக்கியுள்ளது பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். மாலையில் இதன் அளவு படுபயங்கரம். குறிப்பாக மாலை 6 மணிக்கு பிற்பாடு பஸ்ஸில் வந்திறங்கி பஸ் நிலையத்தை விட்டு வெளியேறுவதில் உள்ள சிக்கலை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்களின் அங்கங்களை கூசாமல் வர்ணிப்பதும் படுக்கைக்கு அழைப்பதும் பல கேடுகெட்ட ஆண்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. உடம்பு கூச அவமானத்துடன் வெளியேறுவது என் போன்ற பெண்களின் நாளாந்த நடவடிக்கையாகிறது.
குறிப்பாக சில உதாரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1. ஒரு காலை இழந்து பஸ்களிலும் வீதியிலும் பிச்சை எடுப்பவர் ( பிச்சை போடாவிட்டால் கேவலமாக திட்டுவதால் பல தடவை பலரால் எச்சரிக்கப்பட்டவர்) மது அருந்திவிட்டு பஸ் நிலையத்தின் வெளியேறும் பின்பகுதியில் (கொடிகாமம் பஸ் நிற்கும் இடத்தில்) இருந்தபடி அவ்வழியால் செல்லும் பெண்களை படுக்கைக்கு வருகிறாயா (மிகுதியை பதிவிடுவது மகா அசிங்கம்) என கேட்கிறார். சுற்றிவர நிற்கும் ஆண்கள் கொல் என சிரிக்கிறார்கள்.
2. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண்களின் மார்பகங்களை பற்றி கொச்சையாக கதைக்கிறார்.
3. பஸ்ஸில் தேவையற்ற தொடுகையை செய்ய முயன்று கடுமையாக எச்சரிக்கப்பட்ட ஒருவர் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் வரை பின் தொடர்ந்து வந்து படுக்கைக்கு அழைக்கிறார்.
இவற்றை விட சொல்லமுடியாத கதைகள் ஏராளம். மிகவும் மனவருத்தத்துடன் சொல்வது என்னவெனில் இச்சந்தர்ப்பங்களில் அவ்விடங்களில் நின்ற ஆண்கள் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருந்தது தான்.
ஆகவே பெண்கள் பாதுகாப்பிற்கு தங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தயவுடன் எதிர்பார்க்கிறோம்.
எனது பரிந்துரை பின்வருமாறு:
1. ஒவ்வொரு பஸ்ஸிலும் பெண் பொலிஸை பயணிக்க அனுமதியுங்கள்.
2. பஸ் நிலையத்திலும் சுற்றியுள்ள குறுகிய வீதிகளிலும் பெண் பொலிஸாரை நடமாட செய்யுங்கள்.
3. பஸ்களில் பாலியல் தொல்லைகளை செய்பவர்களை பாரபட்சமின்றி அதே இடத்தில் இறக்கிவிட்டு வர நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு அறிவுறுத்துங்கள்.
4. பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் CCTV கமராவை 24 மணிநேரமும் இயங்கச் செய்யுங்கள்.
5. இவற்றை செய்ய உங்களால் முடியாவிட்டால் லைசன்ஸ் உடன் கூடிய பிஸ்ரல் ரக துப்பாக்கியை அல்லது கத்தியை பயன்படுத்த அனுமதியுங்கள்.
நீங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் நாங்கள் கொடுக்கும் தண்டனைகளை குற்றவாளிகள் உடனடியாக அனுபவிப்பார்கள்.
இறுதியாக ஒரு விடயம் ……
இறுதியாக ஒரு விடயம் ……
விடுதலைப் புலிகளை நினையாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் காலத்து துணிச்சலை நினையாவிட்டால் பல வித்தியாக்கள் உருவாகும் நிலை விரைவில் ஏற்படக்கூடும்.
பதிவிட்டவர்: Sharmy Gobi