உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றார் ஔவையார். ஏன் அவ்வாறு அவர் கூறினார் என்பதை ஆராய்ந்து அறிவது அவசியம்.
இது ஒருபுறமிருக்க உள்ளிருந்து அறுக்கும் வியாதி என்பதுதான் மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் போராட்டத் தோல்விகள், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என இவை யாவற்றுக்குப் பின்னால் உள்ளிருந்து அறுக்கும் வியாதிதான் காரணம் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
ஒரு குடும்பமாயின் குடும்பத்தின் அத்தனை அங்கத்தவர்களும் ஒரு சரியான பாதையில் பயணிப்பது அவசியம்.
இதைவிடுத்து தந்தையை தாய் எதிர்த்தால்; தாயைத் தந்தை எதிர்த்தால்; பெற்றவர்களின் சொல்லைப் பிள்ளைகள் தட்டினால்; தான் புகுந்த மனை வாழக்கூடாது என நினைத்தால் அந்தக் குடும்பம் வேரறுந்து போகும் என்பதே நியதி.
தசரதனின் மரணத்துக்கு அவர் மனைவி கைகேயி காரணம். தசரத மாளிகையில் கூனி குடியிருந்ததால் வந்த வினை அது.
கெளரவர் மாளிகையில் சகுனி தங்கியிருந்த தால்தான் நூற்றொருவரும் மாண்டு போக வேண்டியதாயிற்று.
நேபாளத்தின் இளவரசன் தறிகெட்டதால் தன் குடும்ப உறவினர் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அண்மையில் நடந்தது.
ஒரு கணப் பொழுதில் நேபாள மன்னர் குடும்பத்தில் ஆறு பேர் பலி. மன்னர் குடும்பம் அழிந்தது. இதுபோன்றுதான் அரசியல் கட்சிகள், விடுதலைப் போராட்ட அமைப்புக்கள், மக்கள் இயக்கங்கள், பொது நிர்வாகங்கள் என அனைத்தும் உள்ளிருந்து அறுப்பதனால் அழிந்து போன வரலாறுகள் ஏராளம்.
தமிழ் மக்களின் மிக உன்னதமான எதிர்பார்ப்பாக இருந்த விடுதலைப் புலிகள் என்ற அமைப்புக்குள் உள்ளிருந்து அறுக்கும் நோய் என்று தொடங்கியதோ அன்று அந்த அமைப்புக்கு அஸ்தமனம் ஆரம்பித்துக் கொண்டது.
இப்போது கூட தமிழரசுக் கட்சியை எடுத்துக் கொண்டால் உள்ளிருந்து அறுப்பவர்களால் தான் அந்தக் கட்சி வீழ்ந்து போகிறது.
இரண்டு மூன்று பேரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தளைக்கும் என்பது கட்சித் தலைமைக்குத் தெரியும். ஆனால் எதுவுமே செய்ய முடியாமல் உள்ளது. இதுபோலவே வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைமையும் உள்ளது.
அவர் எழுதுகின்ற கடிதங்கள் உடனுக்குடன் வெளிவந்து விடுகின்றன. இதனால் அவர் நாளுக்கு நாள் புதுப்புதுப் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
கூட இருப்பவர்களில் சிலர் முதலமைச்சருக்குத் துரோகம் இழைக்கின்றனர். தனக்கு நம் பிக்கையானவர்கள் என்று யாரைக் கருதுவது என்ற குழப்பம் முதலமைச்சருக்கு ஏற்படும் வகையில் அவருடன் நிர்வாக ரீதியில் இருக்கும் சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
ஆக விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழ ரசுக் கட்சி, வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற முத்தரப்பும் உள்ளிருந்து அறுக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டும் பாதிப்புக்குள்ளாகியும் இருப்பதைக் காண முடியும்.
எது எவ்வாறாயினும் தமிழினம் என்ற சிந்தனை கொண்டவர்களின் ஒன்றிணைவு தவிர்ந்த வேறு எந்த மருந்தும் உள்ளிருந்து வேரறுக்கும் வியாதிக்கு பரிகாரமாக மாட்டாது என்பதால் தமிழினப் பற்று அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது ஒன்றுதான் எதிரிகளின் உடைப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும்.